Published:Updated:

வாழ்த்துகள் நவாஸுதீன் மன்டோ... எல்லாம் இருக்கிறது ஆனால்...?! #Manto

வாழ்த்துகள் நவாஸுதீன் மன்டோ... எல்லாம் இருக்கிறது ஆனால்...?! #Manto

என் கைகளில் பேனா எதுவும் இல்லாத போது, நான் வெறும் சாதத் ஹஸன். இந்தப் பேனாதான் என்னை மன்டோவாக மாற்றுகிறது.

Published:Updated:

வாழ்த்துகள் நவாஸுதீன் மன்டோ... எல்லாம் இருக்கிறது ஆனால்...?! #Manto

என் கைகளில் பேனா எதுவும் இல்லாத போது, நான் வெறும் சாதத் ஹஸன். இந்தப் பேனாதான் என்னை மன்டோவாக மாற்றுகிறது.

வாழ்த்துகள் நவாஸுதீன் மன்டோ... எல்லாம் இருக்கிறது ஆனால்...?! #Manto

க்கள் குழுமியிருக்கும் ஓரிடத்தில் மன்டோ அமர்த்தப்பட்டிருக்கிறார். மக்கள் அவரிடம் என்ன வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். அவற்றுக்கு மன்டோ பதில் சொல்லலாமே தவிர, மன்டோவால் எதிர்க் கேள்வி கேட்கமுடியாது. ஒரு கட்டத்தில் கடுப்பாகி வெளியேறுகிறார் மன்டோ. முன்னர் கேள்வி கேட்ட ஒருவன் மன்டோவிடம், ``உங்களைக் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்"  என்கிறான். அதற்குச் சட்டென மன்டோவின் பதில் "உன்னால் முடியாது" என்பதாகத்தான் இருந்தது. அதுதான் சாதத் ஹஸன் மன்டோ! #Manto

சிறுகதைகள், கட்டுரைகள், சில குறும்படங்கள், சிற்சில திரிக்கப்பட்ட குறும்படங்கள் மூலமாக மட்டுமே அறியப்பட்டிருந்த மன்டோவைப் பற்றிய இந்தியாவின் பயோபிக். (இதற்கு முன்னர் இந்தியாவில் மன்டோ பற்றி இரண்டு திரைப்படம் வெளியாகி இருக்கின்றன). ஆம், இரண்டாடுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் இதே பெயரில் மன்டோவைப் பற்றி இன்னொரு பயோபிக் வெளியாகியிருந்தது. தான் வாழ்ந்த 42 வயது வரை இந்திய - பாகிஸ்தான் பிரிவுக்கான வலியுடன் அலைந்துகொண்டிருந்த ஒருவரின் பயோபிக்கூட பிரிந்துதான் வந்திருக்கிறது.

ஒரு கதையை எழுதிவிட்டு, வலமிருந்து இடமாக தன் பெயரான சாதத் ஹஸனை உருதில் கையெழுத்து இடுகிறார் படத்தின் நாயகன். அது அப்படியே மன்டோவாக மாறுகிறது. அந்த ஃபிரேமின் அழகியலில் ஆரம்பிக்கிறது மன்டோ.

மன்டோவாக நவாஸுதீன் சித்திக்கி. தற்போது வரையில், நவாஸுதீன் சித்திக்கி நடித்திருக்கும் படங்களை வைத்துப் பார்க்கையில், இது அவரின் ஆகச்சிறந்த நடிப்பு எனலாம். ஒவ்வொரு படத்திலும், தன்னை முந்தைய கதாபாத்திரத்தினை விழுங்கி புதிதாக வேறொரு நபராக, இன்னும் சிறப்பாகத் தன்னைப் பின் தள்ளிவிட்டு, கதாபாத்திரத்தினை முன்னிறுத்துகிறார் நவாஸுதீன். வெள்ளை ஜிப்பா போன்றதொரு சட்டை, கண்ணாடி, சட்டைப்பையில் ஒரு சிகரெட் பாக்கெட் கலைந்த தலைமுடி, எதைப்பற்றியும் கவலை கொள்ளாத ஓர் அலட்சியப்பார்வை. புத்தகங்களின் அட்டைப்படங்களிலும், கதைகளிலும் கேட்ட மன்டோவின் உருவப்படம் இப்படியாகத்தான் இருக்கும், அதை அப்படியே அச்சில் வார்த்தது போல், திரையில் மன்டோவாகிறார் நவாஸுதின் சித்திக்கி. படம் ஆரம்பித்த சில ஃபிரேம்களில், மன்டோவின் முகம் முழுவதுமாக மனதில் இருந்து அகன்று, நவாஸுதீனின் முகத்தை அதில் பதியவைத்ததில் வெற்றி கண்டிருக்கிறது படக்குழு. ஸ்பாய்லர்தான் இருந்தாலும் ஒரு காட்சி மட்டும். குடியின் சுமை மன்டோவை அதிகம் பாதிக்க ஆரம்பிக்கிறது. ஒரு பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைக்குப் பணத்தை வாங்கிவரச் சொல்லி, கூட்டாளி ஒருவரை அனுப்பிவிட்டு, வயிற்றைப் பிடித்தபடி மன்டோ வெளியே அமர்ந்திருக்கிறார். வழக்கம் போல் கைவிரிக்கிறது அந்தப் பத்திரிகை அலுவலகம். மேல் மாடியில் இருக்கும் அந்தக் கட்டடத்துக்கு நவாஸுதீன் செல்வதும், அதற்குப் பின்பான உரையாடலும், மன்டோ இப்படித்தான் இருந்திருப்பார் என்பதனை பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது மன்டோவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை (4 ஆண்டுகள்) மையமாக வைத்து எழுதி இயக்கியிருக்கிறார் நந்திதா தாஸ். பத்து ரூபாய், தண்டா கோஷ், டோபா டேக் சிங் போன்ற அவரது சிறுகதைகளினூடே பயணிக்க வைத்து சுவாரஸ்யமாக்கி இருக்கிறார். மீசை கதை, Smell கதை போன்றவற்றையும் நினைவுபடுத்துகிறது இந்த `மன்டோ'.

`ஆசை தீர நான் இந்தக் காட்டில் பறவை போல் பறக்க விரும்புகிறேன்' எனப் பாடிய அந்தச் சிறுமி மீது எல்லாவற்றையும் அரங்கேற்றிய மனிதர்கள் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். `எதற்கு பத்து ரூபாய்' என அச்சிறுமி கேட்பதின் மூலம் முதல் அறை பார்வையாளனுக்கு விழுகிறது. எதற்கு பத்து ரூபாய் எனக் கேட்கும் சிறுமியில் ஆரம்பித்து, மன்டோவின் கதைகளைப் போலவே, படம் நெடுகிலும் அவர் பேச விரும்பிய பெண் கதாபாத்திரங்கள் செய்யும் விஷயங்களும், அவர்களுக்கான வசனங்களும் செம்ம. ஹிப்டுல்லா, டோபா டேக் சிங், அங்கிள் சாம் போன்றவற்றின் உரையாடல்கள் மன்டோவின் கதைகளை நினைவுபடுத்தத் தவறவில்லை.

சிறுகதை, நிஜ வாழ்வு இரண்டுக்குமான இணைப்பை இன்னும் மெருகேற்றுகிறது ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங். பயோபிக் என்பதனால் ஒரு டல் லைட்டிங் என்றெல்லாம் செல்லாமல், எவ்விதத்திலும் உறுத்தாமல் வரலாற்றைப் பதிவு செய்கிறது கார்த்திக் விஜயின் கேமரா.

மன்டோவின் மனைவி சாஃபியாவாக வரும் ரசிகா துகல் கடைசிக் காட்சி வரை ஸ்கோர் செய்கிறார். மன்டோவின் நண்பராக வரும் நடிகர் ஷியாம் (தஹிர் ராஜ் பஸின்), பிற எழுத்தாளர்கள், என அனைவரும் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, டோபா டேக் சிங்காக வரும் அப்பெரியவர் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் பலிகளுக்கு ஓர் உதாரணம். 73 வயதான ஜாவேத் அக்தர் (அறிமுகம்), ரிஷி கபூர் போன்றவர்கள் நட்பின் முறையில் திரையில் தோன்றுகிறார்கள்.

300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட ரேடியோ உரையாடல்கள், எக்கச்சக்க கட்டுரைகள், பட வசனங்கள் (மன்டோ பற்றி சமீபத்தில் வெளியான நந்திதா தாஸின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டவை) எனக் கருத்துக்குவியலை ஏற்படுத்திய மன்டோவின் வாழ்வில் இருந்து மீண்டும் மீண்டும் நமக்கு அதிகம் தெரிந்த பகுதிகளை வைத்து மட்டுமே கதை அமைத்திருப்பது ஒரு கட்டத்தில் சுவாரஸ்யத்தை இழக்கச் செய்கிறது. (தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட படைப்புகள் 50% கூட இல்லை). படத்தில் வரும் நீதிமன்றக் காட்சிகள் எல்லாம் ஏற்கெனவே கட்டுரையாக வெளிவந்தவை. பயோபிக் என்பதனால் மன்டோவைக் கொஞ்சம் அதிகமாகவே புனிதப்படுத்துகிறார்களோ என்றும் தோன்றாமல் இல்லை.

பிரிவினைக்கு முன்பான இந்தியாவிலும் சரி, அதற்குப் பின்பான புதிய இந்தியா, புதிய பாகிஸ்தானிலும் சரி! இருந்த எழுத்தாளர்களில் யாரும் பெரிதாக எழுத முயலாத பிரிவினை பலிகள், பாலியல் துன்புறுத்துல்கள், குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடுமைகள் போன்றவற்றை தன்னால் இயன்றவரை எழுதிய ஒரே நபர் மன்டோ. அவரின் பிற பக்கங்கள், பாம்பே ஃபிலிம் சொசைட்டி என அவரைப்பற்றி அதிகம் தெரியாத பக்கங்களையும் யாரேனும் கவனத்தில் கொள்ளுதல் நலம்.

அதே சமயம், மன்டோ பற்றிய இப்படத்தை அறிமுகமாக எடுத்துக்கொள்பவர்களுக்கு, இது மிகச்சிறப்பானதொரு அனுபவத்தையே தரும். வாழ்த்துகள் நந்திதா தாஸ், நவாஸுதீன் சித்திக்கி!