Published:Updated:

அக்கா 'இந்தியா'.. தங்கை 'பாகிஸ்தான்'.. சண்டை சமாதானம் ஆனதா? 'படாகா' எப்படி இருக்கிறது? #Pataakha

அக்கா 'இந்தியா'.. தங்கை 'பாகிஸ்தான்'.. சண்டை சமாதானம் ஆனதா?  'படாகா' எப்படி இருக்கிறது? #Pataakha
அக்கா 'இந்தியா'.. தங்கை 'பாகிஸ்தான்'.. சண்டை சமாதானம் ஆனதா? 'படாகா' எப்படி இருக்கிறது? #Pataakha

விஷால் பரத்வாஜ் தான் இயக்கும் திரைப்படங்களைப் பெரும்பாலும் ரஸ்கின் பாண்ட், ஷேக்ஸ்பியர் முதலான எழுத்தாளர்களின் கதைகளில் இருந்து தழுவி, இந்தியச் சமூகத்தோடு பொருத்தி தந்திருப்பார்.  இந்தமுறை சரண் சிங் பதிக்கின் 'தோ பெஹனே' (இரண்டு சகோதரிகள்) என்ற சிறுகதையைத் தழுவி, விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் 'படாகா' என்று வெளியாகியிருக்கிறது. 'படாகா' என்றால் பட்டாசு என்று பொருள். எந்நேரமும் காரணமே இல்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இரு சகோதரிகளின் கதை தான் 'படாகா'.    

அக்கா 'இந்தியா'.. தங்கை 'பாகிஸ்தான்'.. சண்டை சமாதானம் ஆனதா?  'படாகா' எப்படி இருக்கிறது? #Pataakha

நேரெதிர் எண்ணங்கள் கொண்ட 'பெரியவள்' சம்பா (ராதிகா மதன்). நிறைய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துக்கொண்டிருந்தவர்,பாலிவுட்டில் அறிமுகம் ஆகியிருக்கிறார். 'சின்னவள்' ஜெண்டா (சன்யா மல்ஹோத்ரா) 'தங்கல்', 'சீக்ரட் சூப்பர்ஸ்டார்' முதலான வித்தியாசமான திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர். ராஜஸ்தானில் ஒரு கடைக்கோடி கிராமத்தில் வாழும் இருவருக்கும் தனித்தனியாக கனவு ஒன்று இருக்கிறது. சின்னவளுக்கு படிப்பில் முன்னேறி, அதே ஊரில் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும். பெரியவளுக்கோ 'படிப்பெல்லாம் வேணாம். அப்படியே நாலு எருமை மாடு வாங்கி பால் வியாபாரம் பாத்துப் பெரிய ஆளா வரணும்' என்ற எண்ணம். ஆனால் சின்னவளுக்குப் பாலைப் பார்த்தாலே வாந்தி வரும்; பெரியவளுக்கு புத்தகங்கள் என்றாலே வெறுப்பு. இதுமட்டுமில்லாமல், இருவருக்குள்ளும் ஒத்துப்போகாத விஷயங்கள் தான் அதிகம்; அதனாலே இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கோபித்துக் கொண்டு, 'பட்டாசாக' வெடித்து, எந்த இடம் என்று கூட பார்க்காமல் கட்டிப்புரண்டு சண்டையிடத் தொடங்குவர். ஊரே வேடிக்கைப் பார்க்கும் அளவுக்கு அடித்துக் கொள்ளும் இருவருக்குள்ளும் சண்டையைத் தூண்டி விடும் வேலை, டிப்பருக்கு. டிப்பர் (சுனில் குரோவர்) இரு சகோதரிகளுக்கும் நண்பன். இருவரும் அடித்துக் கொள்ளக் கூடாது என விரும்பும் அப்பா, இருவரில் ஒருவரையாவது அடைய வேண்டும் எனத் திரியும் ஊர் மைனர், இருவரின் காதலர்கள் - ஒருவன் எஞ்சினியர்; மற்றொருவன் இராணுவ வீரன். இவ்வளவு தான் 'படாகா'வின் கதாபாத்திரங்கள்.     

அக்கா 'இந்தியா'.. தங்கை 'பாகிஸ்தான்'.. சண்டை சமாதானம் ஆனதா?  'படாகா' எப்படி இருக்கிறது? #Pataakha

இரண்டு சகோதரிகளின் அப்பாவின் வேலை தொடர வேண்டும் என்றால் லஞ்சம் தர வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படுகிறது; இருவரில் ஒருவரைத் திருமணம் செய்து வைத்தால், பணம் தந்து உதவத் தயார் என  ஊர் மைனர் கூற, அப்பா சம்மதிக்கிறார். மூத்தவளுக்கு திருமணம் என முடிவு செய்ய, அவள் தனது காதலனான என்ஜினீயருடன் ஓடிப்போய் விடுகிறாள்; சரி, சின்னவள் இருக்கிறாளே என்று தீர்மானிக்க, அவளும் தன காதலன் இராணுவ வீரனுடன் ஓடிப்போய் விடுகிறாள். அப்போது தான் தெரிகிறது; என்ஜினீயரும், இராணுவ வீரனும் சகோதரர்கள். எப்போது இருவரும் பிரிவோம் என்று வாழ்ந்துகொண்டிருந்த சகோதரிகள் இருவரும், வேறு வழியே இல்லாமல் ஒன்று சேர்கின்றனர். பிறகு என்ன நடந்தது என்பது மீதிக்கதை.   

அக்கா 'இந்தியா'.. தங்கை 'பாகிஸ்தான்'.. சண்டை சமாதானம் ஆனதா?  'படாகா' எப்படி இருக்கிறது? #Pataakha

இரண்டு சகோதரிகளையும் இந்தியா பாகிஸ்தானா உருவகப்படுத்தியிருக்கிறார் விஷால் பரத்வாஜ். ‘இது இந்தியா பாகிஸ்தான் சண்டை மாதிரினு’ என்று கிடைத்த கேப்பில் எல்லாம் சிறந்து சகோதரிகளின் சண்டையும் ஒப்பிடப்படுகிறது. இந்தியாவாக உருவகப்படுத்தப்படும் பெரியவளைச் சுற்றி பசு மாடுகளும், மத நம்பிக்கைகளும், காரணமே இல்லாமல் கருத்துச் சொல்வதும் (இந்திய அரசியல்வாதிகள் பெரும்பாலும் அப்படித்தானே!) இருக்கும். பாகிஸ்தானாக உருவகப்படுத்தப்படும் சின்னவளைச் சுற்றி ராணுவம், பிறர் சொல்வதைக் கேட்டு முடிவெடுக்கும் பண்பு முதலானவை அமைந்துள்ளன. ‘ஆக்ரால அடல் பிஹாரி வாஜ்பாயும், பர்வேஸ் முஷாரப்பும் சந்திச்சப்போ, 'நம்ம எதிரிகளை நம்ம தேர்தெடுக்கலாம்; பக்கத்துல இருக்கவங்கள தேர்ந்தெடுக்க முடியாது. நமக்கான உறவைத் தேர்ந்தெடுக்கலாம்; நம்ம சொந்தக்காரங்களைத் தேர்ந்தெடுக்க முடியாது’ போன்ற வசனங்கள் வெளிப்படையாகவே இந்த உருவகத்தை அங்கீகரிக்கின்றன. இந்தியா பாகிஸ்தான் மட்டுமல்லாமல், இஸ்ரேல் - பாலஸ்தீன், வட கொரியா - தென் கொரியா ஆகியவையுடனும் இந்த சகோதரிகள் பொருந்துவார்கள். 

கதையின் முக்கிய பலமே இரண்டு சகோதரிகளின் அபாரமான நடிப்பு தான். ராஜஸ்தானில் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளாக பின்னியிருக்கிறார்கள் ராதிகாவும், சன்யாவும். சுனில் குரோவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் சிரிப்பு வெடி. சிறுகதையைத் திரைப்படமாக மாற்றிய விஷால் பரத்வாஜ் திரைக்கதையில் கவனம் காட்டியிருக்கலாம். பல காட்சிகள் கதைக்கு தேவையில்லாமல் இருக்கின்றன; படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் தேவையற்ற காட்சிகளை வெட்டித் தூக்கியிருக்கலாம். படத்தின் மற்றொரு பக்க பலம் அதன் பின்னணி இசை. இயக்குனர் விஷால் பாரத்வாஜே சிறப்பாக இசையமைத்திருக்கிறார். 

நடிகர்கள் தேர்வில் கவனம் காட்டியது போலவே, திரைக்கதையிழும் கவனம் காட்டியிருந்தால், பெயருக்கு ஏற்றாற்போல 'படாகா' பட்டாசாக வெடித்திருக்கும்!  

அடுத்த கட்டுரைக்கு