Published:Updated:

’சாமி’ விக்ரமும் ’சிங்கம்’ சூர்யாவும் ஒரே படத்தில் நடித்தால் எப்படியிருக்கும்..!? - 'சிம்பா' படம் எப்படி?

’சாமி’ விக்ரமும் ’சிங்கம்’ சூர்யாவும் ஒரே படத்தில் நடித்தால் எப்படியிருக்கும்..!? -  'சிம்பா' படம் எப்படி?
’சாமி’ விக்ரமும் ’சிங்கம்’ சூர்யாவும் ஒரே படத்தில் நடித்தால் எப்படியிருக்கும்..!? - 'சிம்பா' படம் எப்படி?

'சிங்கம்' சீரிஸில் தற்போது மற்றொரு சூப்பர்ஹீரோ(!) போலீஸ் படமாக வெளிவந்திருக்கிறது 'சிம்பா'.

மார்வெல், டிசி காமிக்ஸ் 'க்ராஸ் ஓவர்' என்ற பெயரில் தனித்தனியாக உலவிக் கொண்டிருந்த சூப்பர் ஹீரோக்களை ஒரே படத்தில் இணைத்து பிரமாண்டமாக மாஸ் காட்டிக்கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவிலும் அதைப் பரிசோதித்திருக்கிறார் பாலிவுட்டின் கமர்ஷியல் மசாலா திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி. தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட 'சிங்கம்' படத்தை அஜய் தேவ்கனை வைத்து இயக்கிய ரோஹித், 'சிங்கம் ரிடர்ன்ஸ்' என்று இரண்டாம் பாகத்தை இயக்கினார். 'சிங்கம்' சீரிஸில் தற்போது மற்றொரு சூப்பர்ஹீரோ (சூப்பர் பவர் எதுவும் இல்லையென்றாலும் மசாலா படங்களில் சாதாரண ஹீரோக்களும் சூப்பர்ஹீரோக்கள் தானே!) போலீஸ் படமாக வெளிவந்திருக்கிறது 'சிம்பா'. ரன்வீர் சிங் 'சிம்பா'வாக வெளுத்து வாங்கியிருக்கிறார். 

'சிம்பா' என்று அழைக்கப்படும் சங்க்ராம் பாலேராவ் சிறுவனாக இருக்கும் போதே, போலீஸ் பணியின் மீது ஆசைப்படுகிறான். போலீஸ் அதிகாரியானால் நிறையப் பணம் சம்பாதிக்கலாம், அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் எனக் கணக்கு போடுகிறான். பகலில் தியேட்டர்களில் ப்ளாக் டிக்கெட் விற்றும், இரவில் சாலையோரத்தில் டியூஷன் படித்தும் போலீஸ் அதிகாரி ஆகிறான். திருடனிடமும் டீல் பேசி, நகையைப் பறிகொடுத்தவனிடமும் டீல் பேசி பணம் பிடுங்கும் சிம்பா கோவாவின் மிராமர் நகருக்கு பணிமாற்றம் செய்யப்படுகிறான். 

மிராமரில் வாழும் தாதாவான துருவ் ரானாடேவை இடையூறு செய்யாமல் இருப்பதற்காக சிம்பாவுக்கு அந்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் தரப்படுகிறது. அந்த ஊரில் சாலையோரத்தில் குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கும் ஆக்ருதி மீது சிம்பாவுக்குப் பரிவு ஏற்படுகிறது. ஆக்ருதியைத் தங்கையாக ஏற்றுக் கொள்கிறான் சிம்பா. துருவ்வின் சகோதரர்களின் போதைப் பொருள் கடத்தலை அம்பலப்படுத்த முயற்சிக்கும் ஆக்ருதி வன்புணர்வு செய்யப்பட்டு, கொல்லப்படுகிறாள். இவ்வளவு நாட்களாக துருவ்வுக்காகக் கட்டப்பஞ்சாயத்து செய்து, லஞ்சம் வாங்கி வந்த சிம்பா, துருவ்வுக்கு எதிராகத் திரும்புகிறான். அதன் பின் என்ன ஆனது என்பது மீதிக்கதை. 

'சிம்பா' கேரக்டரில் ரன்வீர் சிங். மிடுக்கான தோற்றம்; ஒவ்வொரு காட்சியிலும் ரன்வீர் சிங்கின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மிரள வைக்கிறது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் டெம்ப்ளேட் கதையாக 'சிம்பா' இருந்தாலும், ரன்வீர் சிங் தன் மாஸ் எனர்ஜியால் பார்வையாளர்களை ஈர்க்கிறார். சிம்பாவின் காதலியாகச் சாரா அலி கான். சில வாரங்களுக்கு முன், 'கேதார்நாத்' படத்தில் அறிமுகமான சாராவுக்கு இரண்டாவது படமான 'சிம்பா'வில் பெரிய வேலை எதுவும் இல்லை. சிம்பா காதலிப்பதற்கும், பாடல்களில் டான்ஸ் ஆடுவதற்கும் சாராவைப் பயன்படுத்தியுள்ளார் ரோஹித் ஷெட்டி. துருவ்வாக சோனு சூத் நடித்திருக்கிறார். 'என் வீட்டுல மூணு நாய் வளர்க்கிறேன். ரெண்டு நாய்க்கு பெடிக்ரீ போடுறேன்; மூணாவது நாய் உனக்கு லஞ்சம் தந்துட்டு இருக்கேன்' என்பது போன்ற பஞ்ச் டைலாக்குகள் பேசுவதோடு நின்று விடுகிறது வில்லனின் வேடம்.

பாலிவுட்டில் தொடர்ந்து மசாலா திரைப்படங்களாக எடுத்து வரும் ரோஹித் ஷெட்டி, 'டெம்பர்' என்ற தெலுங்கு படத்தை ரீமேக் செய்து, வன்புணர்வு பற்றிய மெசேஜ் சொல்ல முயன்றிருக்கிறார். இந்தியா முழுவதும் நிகழும் வன்புணர்வுகளையும், இந்திய நீதித்துறையின் ஆமை வேகச் செயல்பாட்டையும் விமர்சித்திருக்கும் ரோஹித் ஷெட்டி, அதற்குத் முன்னிறுத்தியுள்ள தீர்வு அபத்தமான ஒன்று. 

கடந்த சில ஆண்டுகளாக வெளிவரும் அனைத்து கமர்ஷியல் திரைப்படங்களைப் போலவே, இதிலும் 'வன்புணர்வு' என்ற குற்றச்செயல் நாயகனைத் தூண்டும் உத்தியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண்களை சூப்பர்ஹீரோக்களாக முன்னிறுத்தும் மசாலா திரைப்படங்களில், பெண்கள் ஆண் ஹீரோக்களால் காதலிக்கப்படுவதற்கும், டான்ஸ் ஆடுவதற்கும் மட்டுமே இருக்கிறார்கள். வன்புணர்வு செய்யப்படும் பெண்கள் யாராவது ஆணுக்குச் சகோதரியாகவோ, தாயாகவோ நினைத்துக்கொள்ளப்படுகிறார்கள்; சில ஆண்களால் வன்புணர்வு செய்யப்பட்டு, வேறு சில 'நல்ல' ஆண்களால் காப்பாற்றப்பட்டு, வஞ்சகம் தீர்த்துக் கொள்வது மட்டுமே பெண்களுக்கு கமர்சியல் சினிமாவின் பார்முலா தரும் வேலையாக இருக்கிறது. 

'சிம்பா'வுக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் 'சிங்கம்' கேரக்டரில் அஜய் தேவ்கன் கேமியோ ரோலில் வருகிறார். 'சிங்கம்', 'சிம்பா' இருவரும் இணைந்து எதிரிகளைப் பந்தாட, மூன்றாவதாக அவர்களுடன் இணைய இருப்பவர் அக்‌ஷய் குமார். படத்தின் இறுதியில் 'சிங்கம்' செல்போனில் அக்‌ஷய் குமாருடன் பேசுவதாக போஸ்ட் கிரெடிட் காட்சியெல்லாம் வைத்து அசத்தியிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு இதே வரிசையில், 'சூர்யவன்ஷி' அக்‌ஷய் குமாரைப் போலீஸாகப் பார்க்கலாம். தமிழில் 'சிங்கம்', 'சாமி' இணைந்து 'க்ராஸ் ஓவர்' திரைப்படமாக மாற்றி விடுவார்களோ என்ற பயத்தைத் தந்திருக்கிறது 'சிம்பா'. 

வன்புணர்வு குற்றங்கள் அதிகளவில் நிகழும் வட இந்தியாவில் கமர்ஷியல் திரைப்படம் ஒன்றில் அதைப் பேசுபொருளாக்கி இருப்பது பாராட்டுக்குரியது என்றாலும், மீண்டும் ஆண்களை முன்னிறுத்தும் அந்த முரண்பாடு சமீப காலங்களில் வெளியாகும் பெண்களை முன்னிறுத்தும் பாலிவுட் படங்களை கேலிக்குள்ளாக்கி இருக்கிறது. 

லாஜிக் பார்க்காமல், மூன்று மணி நேரம் குடும்பத்தோடு மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்க விரும்பினால், நியூ இயர் விருந்தாக 'சிம்பா' திரைப்படம் அமையும். 

அடுத்த கட்டுரைக்கு