Published:Updated:

மகாராஷ்ட்ரா மராட்டியர்களுக்கே டூ இந்தியா இந்துக்களுக்கே... சர்ச்சைகளைப் பேசும் #Thackeray படம்!

மகாராஷ்ட்ரா மராட்டியர்களுக்கே டூ இந்தியா இந்துக்களுக்கே... சர்ச்சைகளைப் பேசும் #Thackeray படம்!
மகாராஷ்ட்ரா மராட்டியர்களுக்கே டூ இந்தியா இந்துக்களுக்கே... சர்ச்சைகளைப் பேசும் #Thackeray படம்!

சர்ச்சைகளின் நாயகன், மகாராஷ்ட்ராவின் மாபெரும் அரசியல் ஆளுமை பால் தாக்கரே வாழ்வின் ஒருசில பக்கங்களை, அவரின் அரசியல் நிலைப்பாடுகளை, அதற்கான நியாயங்களாக சில காரணங்களை... அத்தியாயங்களாக விவரிக்கிறது படம். #Thackeray படம் எப்படி?

பாபர் மசூதியை இடித்ததற்காகவும் மதக் கலவரங்களைத் தூண்டியதற்காகவும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார் பால் தாக்கரே. அங்கிருந்து பிளாஷ்பேக்காக, வெவ்வேறு அத்தியாயங்களாக அவரின் வாழ்க்கைக் கதையைப் பதிவு செய்கிறது #Thackeray படம்.

கார்ட்டூனிஸ்டாக இருக்கும் பால் தாக்கரே பிற மாநிலத்தவர்கள் மராட்டியர்களை ஒடுக்கிவிட்டு அவர்கள் மாநிலத்திலேயே கோலோச்சும் நிலையை வெறுக்கிறார். தன் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கும் மனிதர், தன் மேடைப் பேச்சுகளாலும் தந்தையின் புகழாலும் மராட்டிய மக்களின் கவனத்தை பெறுகிறார். தங்கள் உரிமைகளைக் காக்க வந்தவராக அவரைப் பார்க்கிறார்கள் மராட்டியர்கள். அவர்களுக்காக என்று தொடங்கப்படும் ஓர் இயக்கம் (சிவ சேனா) ஒரு மாபெரும் அரசியல் கட்சியாக ஒரு தீவிர வலது சாரி அமைப்பாக வளர்ந்து நிற்கிறது. 'மகாராஷ்ட்ரா மராட்டியர்களுக்கே' என்ற கொள்கை நாளடைவில் எப்படி 'இந்தியா இந்துக்களுக்கே' என்று மாறியது என்பதையும், ஒரு சாதாரண இயக்கம் நாளடைவில் எப்படித் தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் அரசியல் கட்சியாக உருவெடுத்து நிற்கிறது என்பதையும் வலது பக்கமாக மட்டுமே நின்றுகொண்டு பதிவுசெய்கிறது படம்.

இது பயோபிக்குகளின் சீஸன். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார மேடையாகத் திரைப்படங்களை, அதுவும் குறிப்பாக பாலிவுட் படங்களைப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கி இருக்கின்றன அரசியல் கட்சிகள். தற்போது இது சிவ சேனாவின் முறை. தாக்கரேவாக நவாஸுதின் சித்திக். மண்டோவாக கவனம் ஈர்த்தவர் இதில் காவி நிறம் பூசிக்கொண்டுள்ளார். இப்படியொரு கதாபாத்திரம் எந்த நடிகரைத் தேடி வந்தாலும் தங்களுடையச் சொந்த சித்தாதங்களை புறந்தள்ளிவிட்டு இந்தச் சவாலை ஏற்றுக்கொள்ளவே நினைப்பார்கள். நவாஸுதினும் அதையே செய்துள்ளார். முதிர்ந்த வயதில் தாக்கரேவின் உடல்மொழியை அப்படியே பிரதி எடுத்துக் காட்டியவர் இளம் வயதில் மட்டும் நம் கண்களுக்கு நவாஸாக மட்டுமே தோன்றுகிறார். அவருக்கு இது நிச்சயம் மற்றுமொரு மைல்கல் படம்தான். ஆனால், பிரச்னை இங்கே அதுவல்ல!

தன் சொந்த மாநிலமான மகாராஷ்ட்ராவிலேயே அகதிகளாக வாழ்வதாய் காட்டப்படும் மராட்டியர்களின் வாழ்க்கையையும் அப்போது எழுந்த மக்களின் எழுச்சியையும் அதற்குப் பின்னால் நின்ற பால் தாக்கரேவின் இளமைக் காலங்களைச் சுவாரஸ்யமாகவே காட்டியிருக்கிறார் இயக்குநர். இலகுவான சினிமா மொழி மனிதருக்குக் கைகூடி வந்திருக்கிறது. கறுப்பு வெள்ளையாக விரியும் முதல் பாதி, கலர் படமாக மாறும் அந்த இன்டர்வல் பிளாக் ஷாட் க்ளாஸ்! கறுப்பு வெள்ளைக் காட்சிகளில் அவ்வளவு உழைத்திருக்கிறது சுதீப் சாட்டர்ஜியின் கேமரா. கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் ஓடும் படத்தில் தேவையற்ற காட்சிகள், பாடல்கள் என எதுவும் இல்லை.  (ஐடியாலாஜியாகப் பார்த்தால் படமே தேவையில்லைதான்!) ஆனால், படத்தின் நோக்கமும் அது பேசும் அரசியலும்தான் அதை ரசிக்கவிடாமல் செய்கின்றன.

பால் தாக்கரேவை சுற்றியுள்ள சர்ச்சைகளுக்கு, காட்சிகள் மூலம் அவர் தரப்பு விளக்கம் சொல்லி முட்டுக்கொடுக்க முயன்றிருக்கிறார்கள். அவர்மீது வைக்கப்படும் விமர்சனங்களான பிற மாநிலத்தவர்களை, குறிப்பாகத் தென்னிந்தியர்களை வெறுக்கும் மனப்பான்மை, எதற்கெடுத்தாலும் வன்முறையைத் தீர்வாக வைப்பது, முஸ்லிம் மத வெறுப்பு, இந்திரா காந்தி கொண்டுவந்த எமர்ஜென்சியை ஆதரித்தது போன்றவற்றுக்கான காரணங்களை, இல்லை இல்லை சமாளிப்புகளை 'இந்தா புடிச்சுக்கோ!' என்பதுபோல அடுக்குகிறார்கள். சர்வாதிகாரம் மீது நம்பிக்கைக் கொண்ட, வன்முறை வழியைத் தேர்ந்தெடுத்த, பிரிவினைவாதம் பேசிய ஒருவரை இவ்வளவு குளோரிஃபை செய்து படம் எடுத்திருக்க வேண்டியதில்லை. அது மட்டுமின்றி இரண்டாம் பாதியில் பல் மருத்துவர் முதல் காவல்துறை அதிகாரி வரை தாக்கரேவுக்கு ஏகப்பட்ட பில்டப் கொடுக்கிறார்கள். நடுநடுவே ரீ-ரெக்கார்டிங்கில் புலி உறுமுவது, சத்ரபதி சிவாஜியை மேற்கோள் காட்டி ஷாட்கள் வைப்பது எனப் பிரசார நெடி கொஞ்சம் ரொம்பவே தூக்கல்தான்.

ஒரு சாதாரண கட்டப்பஞ்சாயத்து இயக்கம் மாபெரும் அரசியல் கட்சியாக உருவாகப் பணம் எங்கிருந்து வந்தது? கம்யூனிஸ்ட் ஒருவரைக் கொன்றுவிட்டு அதை நியாயப்படுத்துவதுபோல காட்சிகளை வைப்பது எல்லாம் தாக்கரே தூக்கிப்பிடிக்கும் இந்து தர்மத்தின்படியே சரியானது இல்லையே? அடிப்படையில் முஸ்லிம்களைச் சகோதரர்களாய் நினைப்பதாகக் காட்டப்பட்ட தாக்கரேவின் பாத்திரம் ஒரேயொரு நிகழ்வில் மாறிவிடுவது ஏதோ ஒரு காரணம் சொல்லவேண்டுமே என்று சொன்னதுபோலவே இருக்கிறது. தாக்கரேவின் எல்லா முகத்தையும் சமரசமின்றி பதிவு செய்து திரைக்கதை அமைத்திருந்தால், படம் நிச்சயம் 'கிளாசிக்' ஆகியிருக்கும் . 
 ஆனால், படத்தை எடுத்ததே சிவ சேனா சார்பாக எனும்போது இருண்ட பக்கங்களை இதில் எதிர்பார்க்க முடியாது. நல்லவர்களுக்குக் கூட கெட்டவர்கள் என ஒரு மறுபக்கம் இருக்கும் போது, அவ்வளவு சர்ச்சைகள் நிறைந்த தாக்கரேவின் வாழ்க்கை இவ்வளவு புனிதப்படுத்தியிருப்பது விஷமத்தனமானது. 

படத்தின் தொடக்கத்தில் உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ஆனால், சினிமாவுக்காக ஒருசில மாற்றங்கள் (Cinematic liberties and added fiction) நிகழ்ந்துள்ளன என்று டிஸ்க்ளைமர் போடுகிறார்கள். இதில் எது உண்மை, எது திரிப்பு என்று ஒரு சாதாரண சினிமா ரசிகனால் புரிந்துகொள்ளவே முடியாது. அதனாலேயே இது ஓர் ஆபத்தான பிரசாரப் படம். ஜெய் ஹிந்த்! ஜெய் மகாராஷ்ட்ரா!

அடுத்த கட்டுரைக்கு