Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

மீபத்தில் வெளியான ‘மணிகர்ணிகா’ சூப்பர் ஹிட் ஆனதில் செம குஷியில் இருக்கிறார் கங்கனா. படம் 150 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறதாம். அதைக் கேக் வெட்டிக் கொண்டாடியதோடு தன் அடுத்த பட வேலைகளையும் தொடங்கிவிட்டார். ‘பங்கா’ எனப் பெயர்சூட்டப்பட்டுள்ள இந்தப்படத்தில் கபடி வீராங்கனையாக நடிக்கவிருக்கிறாராம் கங்கனா. அழகிய இந்தி மகள்!

புல்வாமா அட்டாக்கிற்குப் பிறகு காஷ்மீர் இளைஞர்கள்மீது `தீவிரவாதிகள், தேசப்பற்றில்லாதவர்கள்’ என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்துகொண்டிருக்க, சமீபத்தில் காஷ்மீரின் பாரமுல்லாப் பகுதியில் ராணுவத்தில் காலியாக இருக்கிற 111 இடங்களுக்கு ஆள் சேர்க்க நேர்முகத்தேர்வு நடந்தது. இதில் கலந்துகொள்ள காஷ்மீர் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்திருக்கிறார்கள். ‘‘எங்கள் நாட்டைக் காக்கும் பொறுப்பில் ஈடுபடுவது எங்களுக்குப் பெருமை. இதில் வினோதமாகப் பார்க்க எதுவுமில்லை’’ என்றும் பேட்டி கொடுத்திருக்கிறார்கள். தாய்மண்ணே வணக்கம்!

‘தோர்’ படத்தில் நடித்திருந்த கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் இந்தியாவில் படப்பிடிப்புக்காக வந்திருக்கிறார். நெட்ப்ளிக்ஸ் தயாரிக்கும் ‘தாக்கா’ என்னும் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு வந்த கிரிஸ்ஸுக்கு மும்பை நகரின் போக்குவரத்து நெரிசல் மிகவும் புதிதாக இருக்க, தன் சமூக வலைதளத்தில் ‘பியூட்டிபுல் கேயோஸ்’ என ரசித்து ஒரு விடியோவைப் பதிவிட, வீடியோ உலகம் முழுக்க வைரலடித்திருக்கிறது. சுத்தியல் கொண்டாந்தாரா?

ந்தியா முழுக்க ஒட்டுமொத்தக் குடிகாரர்களின் எண்ணிக்கை 16 கோடி எனக் கணக்கிட்டுள்ளது எய்ம்ஸ் நடத்திய சமீபத்திய ஆய்வு. இவர்களில் 5.7 கோடிப்பேர் ஆல்கஹாலுக்கு முழுமையாக அடிமையாகிவிட்ட குடி நோயாளிகள் என்கிற தகவலையும் வெளியிட்டிருக்கிறார்கள். இப்படிக் குடிநோயாளிகள் ஆகி உடல்நலம் குன்றியவர்களில் பெரும்பகுதியினர் எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்வதில்லை என்றும், குடியால் நிகழும் மரணங்கள் கடந்த ஆண்டுகளில் மிகவும் அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. தமிழ்நாடு தான் அதிகமா பாதிச்சிருக்கும்!

விக்ரம்,அஜித்குமாரோடெல்லாம் (காதல் சடுகுடு, ராஜா) நடித்த பிரியங்கா திரிவேதியை நினைவிருக்கிறதா... பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திராவை மணந்து கர்நாடகாவில் செட்டில் ஆனவர் மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறார். ‘பிக்பாஸ்’ மூலம் வெளிச்சத்துக்கு வந்த மகத் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கும் திகில் படத்தில் நடிக்கவிருக்கிறார் பிரியங்கா. எத்தனையோ வாய்ப்புகள் வந்தும் நடிக்காமல் 15 ஆண்டுகளாக இருந்தவர், இந்தப்படத்தின் கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டாராம். காவேரிதான் வரல... நீங்களாச்சும் வாங்க!

இன்பாக்ஸ்

‘இன்கேம் இன்கேம் காவாலே’ என ரசிகர்களின் இதயத்துடிப்பைக் கடன் வாங்கிய  ராஷ்மிகா மந்தனா, அட்லி இயக்கிவரும் ‘தளபதி 63’ படத்தில் தமிழில் அறிமுகமாகிறார் என வதந்திகள் பரவ, அதை ராஷ்மிகாவே மறுத்திருந்தார். ‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில்தான் அறிமுகமாகவிருக்கிறாராம்! வெல்கம் வெல்கம்...

ஹாலிவுட்டில் சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் போல இங்கே இல்லையே என்கிற ஏக்கம் தமிழ்  ரசிகர்களுக்கு எப்போதும் உண்டு. மிஷ்கின் `முகமூடி’ மூலம் அதை உடைக்கப்பார்த்தார். எடுபடவில்லை. இப்போது ஜெய்யை வைத்து அப்படி ஒரு படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ‘பிரேக்கிங் நியூஸ்’ என்கிற படத்தில் ஜெய் உலகத்தைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ஆன்ட்ரூ பாண்டியன் என்கிற புதுமுக இயக்குநர் இப்படத்தை இயக்கவிருக்கிறார். இவர் ஷங்கரின் ‘முதல்வன்’, ‘அந்நியன்’ படங்களில் பணியாற்றியவராம். என்ன மேன்?

இன்பாக்ஸ்

‘துமாரி சுலு’ படத்தில் ஆர்ஜேவாக நடித்து அசத்தியிருந்தார் வித்யாபாலன். அந்தப்படம் தமிழிலும் ஜோதிகா நடிப்பில் ரீமேக்கானது. இப்போது நிஜமாகவே ஆர்ஜே அவதாரம் எடுத்திருக்கிறார் வித்யா.

தனியார் எப்.எம் சேனலில் பெண்களுக்கான பிரத்யேக ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு நேரிடும் குடும்ப வன்முறை, பாலியல் தொல்லை, திருமணம் குறித்த பிரச்னைகளுக்குச் சட்டபூர்வமான உதவிகளை வழங்க அபா சிங் என்ற வழக்கறிஞருடன் இணைந்து ஆலோசனை வழங்குகிறார். இதற்கு நடுவில் அஜித்குமாரோடு `பின்க்’ ரீமேக்கிலும் பிஸியாக இருக்கிறார். ஹல்ல்ல்ல்ல்லோ!