Election bannerElection banner
Published:Updated:

நம்மையும் பாட வைக்கிறான், நெகிழ வைக்கிறான்... இந்த #GullyBoy ஏன் அவ்வளவு ஸ்பெஷல்? #ApnaTimeAayega

நம்மையும் பாட வைக்கிறான், நெகிழ வைக்கிறான்... இந்த #GullyBoy ஏன் அவ்வளவு ஸ்பெஷல்? #ApnaTimeAayega
நம்மையும் பாட வைக்கிறான், நெகிழ வைக்கிறான்... இந்த #GullyBoy ஏன் அவ்வளவு ஸ்பெஷல்? #ApnaTimeAayega

மும்பையின் ஒடுக்கப்பட்ட சமூகம் வாழும் தாராவியிலிருந்து எழும் ராப் இசைக் கலைஞன் ஒருவனுக்கு எப்படி உலக அரங்கம் கைதட்டி விசில் அடிக்கிறது என்பதுதான், இந்த #GullyBoy.

முராத் ஷேக்காக நாம் முதன்முதலில் ரன்வீர் சிங்கைப் பார்க்கையில் மேல்தட்டு மக்கள் வாழும் இடத்தில் தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஒரு காரை திருடிக்கொண்டிருக்கிறான். அதைச் செய்வதில் அவனுக்குத் தயக்கம் இருக்கவே செய்கிறது. இருந்தும், நட்புக்காகச் செய்கிறான். அந்த காரில் அவர்கள் பயணிக்கையில் மும்பையின் இரவு தெருக்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத பாடல் ஒலிக்கிறது. ராப் இசை. `இது ராப் சாங்கா? இது என் கார், இது என் பைக்குனு சொல்றதெல்லாம் ஒரு ராப்பா?' என்று முராத் கோபம் கொள்கிறான். லாங் ஷாட்டில் திருடப்பட்ட அந்த காரில் இவர்கள் மூவரும் இருண்ட தெருவை நோக்கிப் பயணிக்கிறார்கள். `Gully Boy' என்ற பெயர் திரையை ஆக்கிரமிக்கிறது. மும்பையின் குறுகலான தெருவில் விசாலமான மனம் கொண்ட முராத்தினுள் இருக்கும் மாபெரும் கலைஞன், அந்த விமர்சனத்தின்போதே வெளிவரத் தொடங்கியிருப்பதாகவே நாம் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆம், இது ஒரு சாதாரண Gully Boy ராக்ஸ்டார் ஆகும் கதை!

டாக்டர் சஃபீனாவாக, ஆலியா பட். சஃபீனாவை நாம் முதலில் பார்க்கையில் ஒரு பேருந்தில் தன் தாயுடன் பயணிக்கிறாள். தாய் தனக்கான நிறுத்தத்தில் இறங்கியவுடன் ஓடிப்போய் பின் இருக்கையில், தன் காதலன் முராத்தை நெருக்கியபடி அமர்ந்துகொள்கிறாள். அவன் கேட்டுக்கொண்டிருக்கும் இசை இவளுக்கும் பகிரப்படுகிறது. கைகளைக் கோத்துக்கொள்கிறார்கள். சஃபீனா தைரியமானவள். தவறு என்றால் வன்முறையைக் கையில் எடுக்கவும் தயங்காத கோபக்காரி. ஓவர் பொசஸிவ். தன்னைப் பெண் பார்க்க வந்திருக்கும் வருங்கால மாமியார், `உனக்கு சமைக்கத் தெரியுமா?' என்று கேட்கும்போது, `அது தெரியாது. ஆனால், எதிர்காலத்தில் உங்களுக்கு லிவர் ட்ரேன்ஸ்ப்ளேன்ட் செய்வதற்கான தேவை வரலாம். அதைச் செய்ய தெரியும்!' என்று சலனமில்லாமல் கூறுகிறாள்.

MC ஷேர் (சிங்கம்/புலி) லோக்கலில் புகழ்பெற்ற ஒரு ராப் கலைஞன். தன்னைத் தேடி வரும் அப்பாவி இளைஞன், ராப் இசை ஆர்வலன் முராத்துக்குச் சரியான வழியைக் காண்பிக்கிறான். `எனக்கு எழுத வரும். என்னோட லைன்ஸ யாராவது பாடுறீங்களா?' என்று முராத் கெஞ்சலாகக் கேட்கையில், அவனையே பாட வைக்கிறான். `எல்லாக் கலைஞர்களும் இப்படி கம்ஃபர்டபிளாக இருந்துவிட்டால், யார் நமக்காக ராப் பாடுவார்கள்?' என்பது அவன் சித்தாந்தம். இறுதியில் முராத், ஷேரையே தாண்டி உயரம் செல்கையில் ஒரு நொடி சலனமும் பொறாமையும் இன்றி கொண்டாடுகிறான். நிறைய வளரும் கலைஞர்களுக்கு நிறைய நிறைய ஷேர்கள் இங்கே நண்பர்களாகத் தேவைப்படுகிறார்கள்.

குடிசையில் இருப்பவன் கோபுரம் ஏறும் கதைதான். ஆனால், சுயநலம், துரோகம், பழிவாங்கல் போன்ற வழக்கமான ஃபார்முலாக்கள் எதுவும் இன்றி, மெல்லிய தென்றல் போன்று கதை நகர்கிறது. அதில் இடைவிடாது ஒலிக்கும் அந்தக் கணீர், சுளீர் ராப் பாடல்கள், கல்லி மக்களின் வாழ்க்கை முறை, மும்பையின் கலாசாரம் எனப் பலவற்றைப் பேசும் அதன் வரிகள்... ரசிக்க வைக்கும் இடி மழை! ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த, வீடுகள் எனப் பெயரளவில் மட்டுமே இருக்கும் இடத்திலிருந்து ஒலிக்கும் ஒருவனின் இசைக்கு, அவனின் வரிகளுக்கு இங்கே நண்பர்கள் உலக மேடையை அமைத்துக் கொடுக்கிறார்கள்.

காதலி, குடும்பம், அலுவலக முதலாளி என அனைவரும் அவனை ஒரு கட்டத்தில் வேறு திசையில் இழுத்தாலும், பின்னர் அவனுக்குத் தோள் கொடுக்கிறார்கள் அல்லது அவன் வெற்றியை ரசிக்கிறார்கள். அலுவலக முதலாளியும்கூட தனக்கே தெரியாமல் அவனுக்குப் போதிக்கும் குருவாகிறார். பிரமாண்ட மேடையில் அவன் பாடுகையில் அலியா நகத்தைக் கடிக்கிறாள். கண்களில் கண்ணீர் நிற்கிறது. அவனின் வெற்றியை தன் வெற்றியாகவே கருதுகிறாள். அவனின் பெற்றோர், குறிப்பாகத் தந்தை, `யூட்யூபில் உன் வீடியோவ இவ்ளோ லட்சம் பேர் பார்த்தா, என்ன இப்போ? இவ்ளோ பேர் அதைப் பாராட்டினா என்ன இப்போ?' எனக் குறுகலான மனம் கொண்ட அந்த மனிதரே இறுதியில் தன் கண்களில் நீரை நிறுத்திக்கொள்கிறார்.

கதைக்களம் பெருநகரங்களின் குடிசைப்பகுதிகளில் உதிரிகளாக வாழ விதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகம் என்றாலும் அவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறை, அவர்களை மேலே வரவிடாமல் தடுக்கும் மேல்தட்டு அரசியல் இவற்றையெல்லாம் பற்றிப் படம் பேசவேயில்லை. `Gully Boy' அதற்கான படமும் இல்லைதான். ஆனால், அதிலிருந்து ஒரு கலைஞன் மேலே வர நினைக்கும்போது பல இடங்களில் அவனுக்கு இங்கே சிவப்புக் கம்பளமே விரிக்கப்படுகிறது. `வாழ்க்கை அப்படியொரு தோழனா?' என்ற கேள்வி எழாமல் இல்லை. `வடசென்னை' இவ்வகை ஒடுக்கப்பட்ட மக்களின் குற்றவியல் பின்னணியை மட்டும் தன் கருவாக எடுத்துக்கொண்டதைப்போல `Gully Boy' அங்கிருக்கும் மனிதனுக்குள்ளும் திறமை இருக்கும் என்ற நிதர்சனத்தையும் அதற்கு அவன் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றியும் மட்டுமே பேசுகிறது.

மேல்தட்டு மக்களின் கதைகளை மட்டுமே எடுப்பவர் என்ற விமர்சனத்தை இயக்குநர் ஸோயா அக்தர் இதில் உடைத்திருக்கிறார். நிஜ வாழ்வில் ராப்பர்களாகச் சாதித்த `Divine' மற்றும் `Naezy' என்ற இருவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதைதான் என்றாலும், ஆங்காங்கே எமினமின் (Eminem) வாழ்க்கையைத் தழுவி ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட `8 Mile' படம் கண்முன்னே வருகிறது. குறுகிய தெருக்களில் தீப்பெட்டி அளவே உள்ள வீட்டின் அறைகளிலும் பயணிக்கும் ஜே ஓஸாவின் கேமரா ஓவர்டைம் பார்த்திருக்கிறது. இரண்டரை மணி நேரம் ஓடும் படம் என்றாலும் எந்தக் காட்சிகளும் ஷாட்களுமே தேவைக்கதிகமாக ஓடவில்லை.

பாடல்கள்தாம் படத்தின் பெரும்பலம். அதற்காக பல்வேறு கலைஞர்கள் உழைத்து இருக்கிறார்கள். `ராப்' இசைக்கான அடித்தளமே பாடப்படும் பாடல்களின் வரிகள்தான். டெல்லி ஜே.என்.யூவில் சாதி, மதம் முதலானவற்றிலிருந்து விடுதலை கோரி பாடப்பட்ட `ஆசாதி' பாடலை, சாதியையும், மதத்தையும் நீக்கிவிட்டு, வறுமையிலிருந்து விடுதலை, பசியிலிருந்து விடுதலை என மாற்றியிருக்கிறது `Gully Boy'. `காலா' திரைப்படத்திலும், `காஸ்ட்லெஸ் கலெக்டிவ்' குழுவிலும் இணைந்து கலக்கும் டோப் டேடி (Dope Daddy), ஸ்டோனி சைக்கோ (Stony Psycho) ஆகியோரும் ரேப் கலைஞர்களாக இந்தப் படத்தில் சில காட்சிகளில் வருகிறார்கள். ரன்வீர் சிங்கே நிஜ ராக்ஸ்டாராக மாறி 7 பாடல்கள் பாடியிருக்கிறார்.

தன்னுடைய பாடல் வீடியோ யூட்யூபில் ஹிட்டடித்துக்கொண்டிருக்க அப்பாவுக்கு பயந்துகொண்டு அதை அம்மாவிடம் ரகசியமாகக் காட்டுவது, பின்பு அம்மாவை அடித்துவிட்டார் என்பதற்காக அப்பாவையே அடிக்கப்போவது, தனக்கு உதவும் தோழியின் பிளாட் வீட்டின் சமையலறை எத்தனை பெரியது எனக் கால்களிலேயே அளந்து பார்ப்பது, காதலிக்குத் துரோகம் செய்கிறோம் எனக் குற்றவுணர்வில் தவிப்பது, வாழ்வதற்கு என்ன தேவை என்பதற்கு `ரொட்டி, உடை, வீடு, இன்டர்நெட்' எனச் சுவரில் எழுதுவது என ஆங்காங்கே ஹைக்கூக்கள் நிரம்பிக் கிடக்கின்றன. ஆலியா பட்டுக்குச் சவாலான ரோலாக இது இல்லையென்றாலும் அவரின் கேரக்டர் நம் மனதில் ஆழப் பதிகிறது. அதற்கு அவரின் நடிப்பு முக்கியக் காரணம். கல்கி கோச்லின்னின் பாத்திரம் வருகிறது, முராத்துக்கு உதவுகிறது. இங்கேயும் எந்தச் சுயநலமும் பார்க்காமல் யாரேனும் இப்படிச் செய்வார்களா என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஒரு காட்சியில் ரன்வீரின் குடும்பம் தங்கியிருக்கும் வீடு வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்குச் சுற்றுலா தளமாகிறது. தங்கள் இன்ஸ்டாகிராமில் லைக்குகளை ஏற்றிக்கொள்ள அவர்கள் சில ஆயிரங்களை வீசுகிறார்கள். ``வாவ், வீட்டிலிருக்கும் ஒவ்வொரு இன்ச் இடமும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது! இங்கே எத்தனை பேர் தங்குகிறார்கள்?" என்று ஒரு பெண் கேட்கிறார். இப்படியான ஒரு தளத்தில் இருக்கும் கலைஞன் மேடையில் இறுதியாகக் கொடுக்கும் அந்த ராக்ஸ்டார் பர்ஃபாமன்ஸ் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் குடிக்க விரும்பும் உற்சாக டானிக்.

முராத் சாதிக்கும்போது அவனுக்காகத் தட்டப்படும் கரங்கள் அவனின் காதலி, குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோருடையது மட்டுமல்ல. அந்த உலகைத் தாண்டி அவனை இதுவரை திரையில் ரசித்துக்கொண்டிருந்த நம்முடையதும்தான். ``Apna Time Aayega!" (எங்களுக்கும் காலம் வரும்!) என்று பாடுகிறார் ரன்வீர். நிஜமாகவே அவரின் காலம்தான் இது! இந்த `Gully Boy'க்கு தேசிய விருதுகள் காத்திருக்கின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு