சினிமா
Published:Updated:

வாவ் வந்தியத்தேவன் - வருகிறான் பொன்னியின் செல்வன் - இது மணிரத்னம் மேஜிக்

வாவ் வந்தியத்தேவன் - வருகிறான் பொன்னியின் செல்வன் - இது மணிரத்னம் மேஜிக்
பிரீமியம் ஸ்டோரி
News
வாவ் வந்தியத்தேவன் - வருகிறான் பொன்னியின் செல்வன் - இது மணிரத்னம் மேஜிக்

வாவ் வந்தியத்தேவன் - வருகிறான் பொன்னியின் செல்வன் - இது மணிரத்னம் மேஜிக்

‘நினைத்ததை முடிப்பவன்’ எம்.ஜி.ஆரால் சாத்தியப்படாததை, ‘உன்னால் முடியும் தம்பி’ கமல்ஹாசனால் முடியாததை, ‘நிறைவேற்றியே ஆகவேண்டும்’ என்று களமிறங்கியிருக்கிறார் மணிரத்னம். 

வாவ் வந்தியத்தேவன் - வருகிறான் பொன்னியின் செல்வன் - இது மணிரத்னம் மேஜிக்

எம்.ஜி.ஆர் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் திரைப்படமாக்க விரும்பியபோது, அதற்கான திரைக்கதையை எழுதச் சொன்னது இயக்குநர் மகேந்திரனிடம். வைஜெயந்திமாலா உள்ளிட்ட சிலரை நடிக்கக் கேட்டு, வேலைகளையும் தொடங்கினார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. கமல்ஹாசனும் ‘பொன்னியின் செல்வ’னைத் திரைப்படமாக்க விரும்பினார். அதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில்தான் ‘பொன்னியின் செல்வ’னை  மணிரத்னம் கையிலெடுத்திருக்கிறார். முன்பே  விஜய், மகேஷ்பாபு என மொழிக்குச் சிலராக நடிகர்களை முடிவு செய்து ‘பொன்னியின் செல்வ’னை ஓர் இந்தியப் படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கினார். பட்ஜெட், தொழில்நுட்பம், நடிகர்களின் கால்ஷீட் எனப் பல பிரச்னைகளால் அந்த முயற்சி நின்றுபோனது. ஆனால், இந்த இரண்டாவது முயற்சி நிச்சயம் பலிக்கும் என்கிறார்கள்.

‘பாகுபலி’ படத்தின் வெற்றி, உலக சினிமா ரசிகர்கள் மத்தியில்  இந்திய மொழி சினிமாக்கள் பற்றிய மனநிலையை மாற்றி அமைத்தது. எவ்வளவு பெரிய பட்ஜெட் என்றாலும் அதைத் திரும்ப எடுக்கக்கூடிய சந்தையாக இந்திய சினிமா உள்ளது என்பதை அது நிரூபித்தது. அதுவே வந்தியத்தேவனையும் குந்தவையையும் மீண்டும் உயிர்ப்பிக்கவிருக்கிறது.


கதை


சோழ வம்சத்தில் வந்த மன்னன் சுந்தரச் சோழன். இவரின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன். இளைய மகன் அருள்மொழி வர்மன் என்கிற ராஜராஜசோழன். மகள், குந்தவை. இவர்களுடன் வந்தியத்தேவன், செம்பியன்மாதேவி, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர் என்று பல பாத்திரங்கள்.  இதில் சோழர் பரம்பரையில் நிலவிய ராஜாங்கப் பிரச்னைகள், வகுக்கப்பட்ட யுத்த வியூகங்கள், தீட்டப்பட்ட சதியாலோசனைகள் என இந்தக் கதாபாத்திரங்களைச் சுற்றி அமைக்கப்பட்ட காட்சிகள், ஒரு மர்ம நாவலுக்குரிய அத்தனை விறுவிறுப்பையும் ஏற்படுத்தியது.

வாவ் வந்தியத்தேவன் - வருகிறான் பொன்னியின் செல்வன் - இது மணிரத்னம் மேஜிக்

இதில் எவை நிஜ வரலாறு, எவை அதன் நீட்சியாக உருவாக்கப்பட்ட கற்பனைச் சம்பவங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து இருப்பதுதான் கல்கியின் எழுத்துத் திறனுக்குச் சான்று. அந்தக் காலத்துக்கே நம்மை அழைத்துச்செல்லும் வகையிலான கல்கியின் எழுத்தை, அந்தத் தன்மை குறையாமல் சினிமாவாக மாற்றுவதுதான் மிகப்பெரிய சவால். அந்தச் சவாலைத்தான் இயக்குநர் மணிரத்னம் கையில் எடுத்துள்ளார்.

நடிகர்கள்

அருள்மொழி வர்மன் என்கிற ராஜராஜசோழனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடிக்கிறார்கள் எனத் தெரிகிறது. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்தபோது மணிரத்னத்தைக் கவர்ந்திருந்தார் விஜய் சேதுபதி. ‘வந்தியத்தேவன்’ கதாபாத்திரத்திற்குச் சரியாக இருப்பார் என மணிரத்னம் கேட்க, தனது கால்ஷீட் விவரங்களை ஆராய்ந்து அலசிப் பார்த்து, வேதனையுடனே ‘நோ’ என்று சொல்லியிருக்கிறாராம் விஜய் சேதுபதி. இப்போது வந்தியத்தேவனாக வாளேந்தவிருப்பது, கார்த்தி.

‘குந்தவை’ வேடத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்க  வைக்கப் பேசியுள்ளது படக்குழு. ‘நடிகையர் திலகம்’ படத்தில் தன் நடிப்புத்திறமையை நிரூபித்த கீர்த்திக்குக் கிடைத்த பரிசு இது. சுந்தர சோழர் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனை நடிக்கவைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடந்துவருகின்றன.

ஆதித்த கரிகாலனைப் பழிதீர்க்க வரும் நந்தினியே கதையின் வில்லி. சோழர்களைப் பழிவாங்கும் எண்ணத்தில் தன்னைவிட வயது முதிர்ந்த பெரிய பழுவேட்டரையரை மணந்துகொள்ளும் பேரழகி நந்தினி பாத்திரத்தில் ஐஷ்வர்யா ராய், பழூவூர் என்னும் சிற்றரசை ஆளும் பெரிய பழுவேட்டரையராகத் தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடிக்கவிருக்கிறார்கள்.

நயன்தாரா பூங்குழலியா?

வந்தியத்தேவனை இலங்கைக்கும் - சோழ தேசத்தின் கோடியக்கரைக்கும் கடல்வழியே அழைத்துச் சென்று வரும் படகோட்டிப் பெண் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால் நயன் நடிக்கவில்லை. அவருக்குப் பதிலாக வேறொரு கதாநாயகியைத் தேட ஆரம்பித்துள்ளனர்.

படத்தின் வியாபாரம் குறித்த நம்பிக்கையைப் ‘பாகுபலி’ உருவாக்கியது என்றால், ‘பல நட்சத்திரங்களை வைத்துப் படத்தை உருவாக்க முடியும்’ என்ற நம்பிக்கையை மணிரத்னத்துக்கு அளித்தது ‘செக்கச்சிவந்த வானம்.’ துணிந்து களமிறங்கியவர், பண்டைய தமிழர் பாரம்பர்யமும் பண்பாடும் முறையாகக் காண்பிக்கப்பட வேண்டும் என்ற உறுதியோடு தன் உதவி இயக்குநர்களை வரலாற்றுத் தரவுகளைத் திரட்டச் சொல்லியிருக்கிறார்.    ஏ. ஆர். ரஹ்மானும் பழங்கால இசைக்கருவிகள் குறித்த ஆய்வுகளின் வழியே அறியப்பட்ட இசைக்கருவிகளைத் தன் இசையில் பயன்படுத்தும் முயற்சியிலும் ஈடுபடவுள்ளார்.

படப்பிடிப்புத் தளங்கள்

செக்கச்சிவந்த வானம் படத்துக்குமுன் வரை இயக்குநர் மணிரத்னம் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தியதாகப் பெரிய தகவல்கள் இல்லை. எனினும், இப்படத்துக்குத் தேவையான கோட்டைகள், உயர்ந்த மதில்கள், கோயில்கள் அவற்றில் படப்பிடிப்பு நடத்துவதற்கான சாத்தியங்கள் என அனைத்தையும் ஆராயும் படக்குழு, இந்தியா மற்றும் சோழ சாம்ராஜ்யத்தின் தடங்கள் இருக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் படப்பிடிப்புத் தளங்களைத் தேடிப் பறந்துகொண்டிருக்கிறது.

கலை இயக்கம்

இப்படத்தின் முதுகெலும்பே கலை இயக்கம் தான்.  கலை இயக்குநரின் கைவண்ணத்தில் பிரமாண்டமாய் எழும்பப்போவது  பொன்னியின் செல்வனை வாசித்தவர்களின் கனவும்தான். கட்டடக்கலைக்குப் பேர்போன சோழ ராஜ்யத்தின் மதில்கள், மாடங்கள், கோட்டை வாயில்கள் என அனைத்திலும் கலைநயம் இருக்கவேண்டும் என்பதே கலை இயக்குநருக்கான பெரும் சவால். இந்தச் சவாலை எதிர்கொள்வ தற்கான கலை இயக்குநரை இன்னும் முடிவு செய்யவில்லையாம் மணிரத்னம்.

பட்ஜெட்

மிகப்பெரிய சவால் பட்ஜெட். அதை ‘லைகா’ நிறுவனம் ஏற்றுள்ளது.

இதுவரை பேசியுள்ள நடிகர்களின்  கால்ஷீட் மற்றும் தொழில்நட்பக் கலைஞர்களின் சம்பளங்களில் முடிவு எட்டப்படாத நிலையில் பட்ஜெட், 400 முதல் 500 கோடி ரூபாய் வரை ஆகும் என்று தெரிவிக்கிறார்கள். 2020-ல் தொடங்கவிருக்கும் இப்படத்தை, எத்தனை பாகமாகப் படமாக்குவது என்பதைப் பொறுத்தே படப்பிடிப்புக்கு ஆகும் கால அவகாசத்தைக் கூறமுடியும் என்கிறார்கள். ஒரு பாகம் வெளிவர, குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்றும் தெரியவருகிறது. 

இந்த ஆண்டு மே மாதத்தில் ‘பொன்னியின் செல்வன்’ குறித்த கூடுதல் தகவல்களுடன் அறிவிப்புகள் வெளியாகலாம்.

ஒரு பிரமாண்டமான கனவு நனவாகும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் தமிழர்கள்.

அலாவுதின் ஹுசைன்