Election bannerElection banner
Published:Updated:

`83' முதல் `விஜய் 63' வரை... எதிர்பார்ப்பில் இருக்கும் ஸ்போர்ட்ஸ் படங்கள்!

`83' முதல் `விஜய் 63' வரை... எதிர்பார்ப்பில் இருக்கும் ஸ்போர்ட்ஸ் படங்கள்!
`83' முதல் `விஜய் 63' வரை... எதிர்பார்ப்பில் இருக்கும் ஸ்போர்ட்ஸ் படங்கள்!

எதிர்பார்ப்பில் இருக்கும் ஸ்போர்ட்ஸ் படங்களின் தொகுப்பு இது!

ஆக்‌ஷன், ரொமான்ஸ், த்ரில்லர், ஹாரர் உள்ளிட்ட ஜானர்களில் நிறைய படங்கள் வெளியாகின்றன. ஆனால், விளையாட்டை மையப்படுத்தி வரும் படங்கள் குறைவுதான். காரணம், அதற்கான மெனக்கெடல்கள் அதிகம் தேவை. அந்த விளையாட்டிற்கான உடல்மொழி தங்களுக்குள் வருமளவுக்கு அதில் நடிக்கும் நடிகர்கள் தயாராக வேண்டும். தவிர, விளையாட்டுப் படம் என்றால் க்ளைமாக்ஸில் அந்த அணி ஜெயிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தும், அந்தக் கதைக்குள் ஒரு புது விஷயத்தைப் புகுத்தி, அதற்கு ஒரு உயிர் கொடுத்து, சுவாரஸ்யமாக எடுப்பதில்தான் அந்தப் படத்தின் ரிசல்ட் இருக்கிறது. இப்போது எதிர்பார்ப்பில் இருக்கும் ஸ்போர்ட்ஸ் படங்களின் தொகுப்பு இது!  

ஜடா:

 
அறிமுக இயக்குநர் குமரன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் வடச் சென்னையில் இருக்கும் கால்பந்து வீரனின் வாழ்க்கையைப் பற்றியது. `பரியேறும் பெருமாள்' படத்திற்குப் பிறகு, கதிர் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ரோஷினி என்னும் புதுமுக நடிகை ஹீரோயினாக நடிக்கிறார். நிஜ கால்பந்து வீரரான யோகிபாபு, இப்படத்தில் கால்பந்து வீரராகவே நடித்துள்ளார். இந்தக் கதைக்காக கதிர் ஒரு மாத காலம் கால்பந்து பயிற்சி எடுத்துக்கொண்டார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் கால்பந்து மட்டுமல்லாது சமூகத்தில் நடக்கும் அரசியலை பிரதிபலிக்கும் விதமாகவும் இருக்கும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஜய் 63: 
 

`பத்ரி' படத்தில் தன் அண்ணனுக்காக பாக்ஸிங் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவார் நடிகர் விஜய், இதைத் தொடர்ந்து, `கில்லி' படத்தில் கபடி வீரராகவே மெர்சல் காட்டினார். அதில் விஜய் கோட்டை தொட்டுக் கும்பிட்டு தொடையைத் தட்டி ரெய்டு போகும் காட்சிகளுக்கு சில்லறையைச் சிதறவிட்டு என்ஜாய் செய்தனர் விஜய் ரசிகர்கள். அதற்குப் பிறகு, அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தில்தான் ஸ்போர்ட்ஸ்மேனாக நடிக்கிறார் விஜய். கால்பந்து பயிற்சியாளர் மைக்கேல் என்ற கேரக்டரில் விஜய் நடிக்கிறார். விளையாட்டுத்துறைக்குள் உள்ள அரசியலைப் பேச இருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், யோகிபாபு, இந்துஜா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைத்துள்ளனர். தீபாவளிக்குப் படம் ரிலீஸ் என்பதால், ஜூலைக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். 

கென்னடி கிளப்: 
 

`வெண்ணிலா கபடிக்குழு', `ஜீவா' ஆகிய படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் சுசீந்திரன் இயக்கியிருக்கும் அடுத்த ஸ்போர்ட்ஸ் படம் `கென்னடி கிளப்'. பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் கபடி வீராங்கனைகளின் வாழ்க்கை, அவர்களின் போராட்டம் ஆகியவற்றை நடப்பு அரசியலோடு பேச இருக்கிறார் சுசீந்திரன். 2017ல் நடந்த ஓர் உண்மை சம்பவத்தையும் பதிவு செய்துள்ளனராம். இதில் பாரதிராஜா, சசிகுமார் ஆகியோர் கபடி பயிற்சியாளராக நடித்துள்ளனர். ஹீரோயினைத் தவிர, மற்ற பெண்கள் அனைவரும் நிஜ கபடி வீராங்கனைகள்தாம். விழுப்புரத்தில் செட் அமைத்து மற்ற மாநில கபடி வீராங்கனைகளை வரவழைத்து பதினொரு கேமராக்கள் வைத்து க்ளைமாக்ஸ் காட்சியை எடுத்துள்ளனர். 

'83: 
 

இந்தப் படம் 1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்றதை வைத்து உருவாக்கப்படுகிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பைத் தொடரின்போது நடந்த சம்பவங்களின் தொகுப்புதான் இந்த '83. இதில் கபில் தேவ் கேரக்டரில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார். தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா நடிக்கிறார். `ஏக்தா டைகர்', `பஜ்ரங்கி பைஜான்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கபீர்கான் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு அந்த உலகக்கோப்பையில் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படம் ஏப்ரல் 10, 2020ல் வெளியாகிறது.  

சாய்னா நேவால் பயோபிக்: 
 

இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதில் சாய்னா நேவால் ரோலில் ஷ்ரத்தா கபூர் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அதற்காக சாய்னாவின் பயிற்சியாளர் கோபிசந்திடம் பயிற்சியும் எடுத்துக்கொண்டார். ஆனால், சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் ஒரு படம், வரும் தவாணுடன் `ஸ்ட்ரீட் டான்ஸர்', பிரபாஸுக்கு ஜோடியாக `சாஹோ', `பாகி 3'  என அடுத்தடுத்து பெரிய படங்களுக்கான பணிகளில் ஷ்ரத்தா பிஸியாக இருந்ததால் இந்தப் படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக தற்போது பர்னீதி சோப்ரா கமிட்டாகி உள்ளார். இயக்குநர் அமோல் குப்தே இயக்க, பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை இந்த வருடத்திற்குள் முடித்து 2020ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

சாந்த் கி ஆங்க்:
 

உத்தர பிரதேச மாநிலம், ஜோஹ்ரி என்ற மாவட்டத்தில் உள்ள சந்த்ரோ டோமர், பிரகாஷி டோமர் என்ற இருவரின் பயோபிக்தான் `சாந்த் கி ஆங்க்'. 80 வயதை கடந்த இருவரும் துப்பாக்கி சுடும் வீராங்கனைகள். இவர்களை செல்லமாக `ஷூட்டர் தாதி', `ரிவால்வர் தாதி'  என அழைக்கின்றனர் அந்த ஊர் மக்கள். இந்தியாவிற்காக ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளனர். அனுராக் காஷ்யப் தயாரிப்பில் துஷார் ஹிராநந்தனி என்பவர் இயக்கவுள்ளார். சந்த்ரொ டோமர் கேரக்டரில் பூமி பட்னேகரும் பிரகாஷி டோமர் கேரக்டரில் டாப்ஸியும் நடிக்கின்றனர். அவர்களுக்கு சந்த்ரோ, பிரகாஷி இருவரும்தான் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து வருகின்றனர்.  

பங்கா:
 

`மணிகர்ணிகா' படத்திற்குப் பிறகு, கங்கனா ரணாவத் நடித்து வரும் படம், `பங்கா'. இதில் அவர் கபடி வீராங்கனையாக நடிக்கிறார். அதற்காக பத்து கிலோ உடல் எடையை ஏற்றிய கங்கனா, மூன்று மாதம் தீவிரமான கபடி பயிற்சியில் ஈடுபட்டார். தேசிய கபடி வீராங்கனை ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தை `அம்மா கணக்கு', `பரேலி கி பர்ஃபி' ஆகிய படங்களை இயக்கிய அஸ்வினி ஐயர் திவாரி இயக்கி வருகிறார். டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களைத் தொடர்ந்து, மும்பையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கங்கனா ரணாவத்தின் கணவராக ஜெஸ்ஸி கில் நடிக்கிறார். தவிர, ரிச்சா சத்தா, நீனா குப்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை ஜனவரி 24, 2020-ம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.   

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு