Published:Updated:

இளையராஜா புகழ்பாடும் சாய்ரட் படத்தின் இசையமைப்பாளர்கள்!

இளையராஜா புகழ்பாடும் சாய்ரட் படத்தின் இசையமைப்பாளர்கள்!
இளையராஜா புகழ்பாடும் சாய்ரட் படத்தின் இசையமைப்பாளர்கள்!

இளையராஜா புகழ்பாடும் சாய்ரட் படத்தின் இசையமைப்பாளர்கள்!

சாய்ரட். ஏப்ரலில் வெளிவந்த மராட்டியப் படம். வெளிவந்த உடனே பரவலாகப் பலரது பாராட்டுக்களைப் பெற்று, மராட்டிய சினிமா இண்டஸ்ட்ரியின் ரெகார்டுகளைத் தகர்த்துக் கொண்டிருக்க, உடனேயே பற்றிக் கொண்டு பரவலாக மற்ற மாநிலங்களிலும் வெளியாகி அங்கேயும் ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது.
’பார்க்கலைன்னா கண்டிப்பா பாத்துடுங்க’ என்று அனுராக் காஷ்யப், அமீர்கான் என்று பிரபலங்கள் பலரும் பாராட்டிய இந்தப் படம் வெளிவரும் முன்னரே பாடல்கள் எல்லாம் ஹிட்.


ஒரு சாம்பிளுக்கு கீழே உள்ள பாடலைக் கேளுங்கள். நல்ல ஹெட்செட்டில் கேட்டல் நலம்.

.
கேட்டீர்களா? ஸ்டிரிங்ஸில் அமைதியாக ஆரம்பமாகி, உடன் வயலினும் புல்லாங்குழலும் சேர்ந்து கொள்ள.. பல்லவி ஆரம்பிக்கும் முன் ஒரு சின்ன இடைவெளி. பல்லவியில் ஆண்குரல் இணையும்போது துள்ளலாக இசை சேர்ந்து கொள்கிறது. சலசலத்து ஓடும் நதிபோலப் போய் கொண்டிருக்கும் இசை மேலுள்ள வீடியோவின் 2.30வது நிமிடத்தில் ஓர் அருவியாய் சரேலென்று விழுவதை உணரலாம். 4.37 லிருந்து 4.50 நிமிடங்களைக் கேட்டீர்களானாலும், அப்படித்தான்.

இசை, அஜய் அதுல்.

இன்னொரு பாடல். ஜிங் ஜிங் ஜிங் ஜிங் ஜிங் ஜிங் ஜிங்காத். படம் வெளியானபோது தியேட்டர்களில் போலீஸைக் கூட்டிவரவேண்டிய நிலைக்குத்தள்ளிய பாடல். தியேட்டர்களில் அப்படி கெட்ட ஆட்டம் போட்டார்கள் இந்தப் பாடலின்போது. பாடல் அத்தனை துள்ளலாக இருக்கிறது. பார்த்துக் கொண்டே கேளுங்கள்.

கிட்டத்தட்ட காதலுக்கு மரியாதையின் ‘ஐயா வூடு தொறந்துதான் கெடக்கு’ பாடலின் தூரத்து சொந்தப் பாடல் மாதிரி தெரிகிறதா?

படத்தின் எல்லா பாடல்களும் தெறி ஹிட். பின்னணி இசையும் மிகவும் பேசப்பட்டிருக்கிறது. அஜய் அதுல் இணை மராத்திய மற்றும் இந்தி சினிமாவில் புகழ்பெற்று விளங்கும் இசையமைப்பாளர்கள். சின்னச் சின்ன ஜிங்கிள்ஸ், ஆல்பம் என்று வளர்ந்து இப்போது இன்னும் புகழின் உச்சத்தில் இருக்கிறார்கள்.   இசைக்குடும்பத்திலிருந்து வந்தவர்களும் அல்ல. சாதாரணப் பின்னணியில் இருந்து கற்றுக் கொண்டு கற்றுக் கொண்டு இந்த நிலைக்கு வந்திருக்கிற இவர்கள் அளிக்கும் பேட்டி ஒவ்வொன்றிலும் ஒரு பெயரைக் குறிப்பிடுகிறார்கள். அந்தப் பெயர்.. இளையராஜா.

“1989ன் ஒரு மாலை நேரத்தில் கமல்ஹாசன் நடித்த அப்பு ராஜா படத்தின் வி.சி.ஆர் எடுத்துப் போட்டுப் பார்த்தோம். அந்தப் படத்தின் இசையை எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. அதுவரை சினிமா இசை என்பது வெறும் டான்ஸ் ஆட மட்டுமே எனும் எண்ணத்தைத் தகர்த்தெறிந்தது அந்தப் படத்தின் இசை. இசை அழவைக்கும், சிரிக்க வைக்கும் என்றெல்லாம் எங்களுக்கு உணர்த்திய படம் அது” என்கிறார்கள் இவர்கள். அப்படி அவர்கள் சொல்லும் அப்பு ராஜா படம், அபூர்வ சகோதரர்களின் இந்திப் பதிப்பு.

“இளையராஜாவைத் தேடித்தேடி கேட்க ஆரம்பித்தோம். சிம்பொனி என்றால் என்னவென்றே தெரியாது. இளையராஜாவின் நத்திங் பட் விண்ட் என்றொரு ஆல்பத்தைக் கேட்டோம். ஹரிப்ரசாத் சௌராஷ்யாவின் புல்லாங்குழலோடு இணைந்து ராஜா அமைத்த அந்த ஆல்பத்தில் ‘மொஸார்ட் ஐ லவ் யூ’ என்றொரு ட்ராக். யார் இந்த மொஸார்ட் என்று பார்க்க ஆரம்பித்து சிம்பொனி கேட்க ஆரம்பித்தோம். அப்படித்தான் இசை உலகிற்குள் நாங்கள் புகுந்தோம்’ என்கிறார்கள் ஒரு பேட்டியில்.

இன்னொன்றில், ‘ராஜா இசையமைத்த சாத்மா படத்தின் சுரிமை அகியோ(ன்) மே’ பாடலைக் கேட்டபோது இசை என்பதற்கான என் பார்வை விசாலமானது. அந்தப் பாடல்தான் இசை உங்களை ஆட்டுவிப்பதோடு, உங்கள் இதயம் வரை நுழைந்து ஆட்கொள்ளும் வல்லமை உடையது என்று எனக்கு உணர்த்தியது’ என்கிறார்கள். அவர்கள் குறிப்பிடும் அந்தப் பாடல், மூன்றாம் பிறையின் ‘கண்ணே கலைமானே’தான். ராஜா மீதான ஆர்வம்தான் எங்களை இசைக்குள் புகுத்தி எல்லா இசையமைப்பாளர்களையும் கேட்க வைத்து, எங்களுக்கு வேறு உலகத்தையே திறந்தது” என்கிறார்கள்.

“நாங்கள் இளையரஜாவை எப்படி எங்கள் ஆதர்சமாகப் பார்க்கிறோமோ.. அப்படி இன்றைக்கு எங்களையும் நான்குபேர் பார்க்கிறார்கள், மதிக்கிறார்கள் என்பதே எங்கள் இசைக்கு ஓர் அர்த்தம் கிடைத்ததாய் உணரவைக்கிறது’ என்கிற இந்த இசை இணை மாநில, தேசிய விருதுகள் என்று நிறைய விருதுகளையும் அள்ளியிருக்கிறார்கள்.

  ஃப்ரான்ஸிலெல்லாம் ராஜா பாடலை இப்படிக் கொண்டாடும்போது, இவர்கள் கொண்டாடுவதில் வியப்பில்லைதான்.

-பரிசல் கிருஷ்ணா

பின் செல்ல