Published:Updated:

ஜெயித்தது சோனாக்‌ஷி சின்ஹாவா.... அனுராக் காஷ்யபா..? #அகிரா - படம் எப்படி?

Vikatan Correspondent
ஜெயித்தது சோனாக்‌ஷி சின்ஹாவா.... அனுராக் காஷ்யபா..? #அகிரா - படம் எப்படி?
ஜெயித்தது சோனாக்‌ஷி சின்ஹாவா.... அனுராக் காஷ்யபா..? #அகிரா - படம் எப்படி?

அவர் பறந்து, பறந்து சண்டையிடுகிறார். பெண்ணொருத்தியின் முகத்தில் ஆசிட் ஊற்றிய இளைஞர்களைக் கராத்தே அடிகளால் கதி கலங்க வைக்கிறார். கல்லூரியில், ‘வேணாம் என்னை அடிக்கச் சொல்லி கஷ்டப்படுத்தாதீங்க.’ என்று ஒளிந்துகொண்டு மீறி வருபவர்களை துவம்சம் செய்து ஆர்ப்பாட்டமின்றி நடக்கிறார்.  இதையெல்லாம் செய்வது ஒரு ஹீரோ என்று நீங்கள் நினைத்தால் உங்கள் யூகம் தவறு.

திரையில் இதையெல்லாம் செய்வது ஒரு ஹீரோயின். அதுவும், தமிழில் லிங்கா படத்தில் கண்டாங்கிச் சேலையைக் கட்டிக் கொண்டு அடக்கமாக நடித்திருந்த ‘சோனாக்‌ஷி சின்ஹா’தான் அந்த ஆக்‌ஷன் ஹீரோயின். தமிழில் வெளியான ‘மெளனகுரு’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்காக வந்திருக்கிறது ‘அகிரா’. ஆண்களாலும், ஹீரோக்களாலும் மட்டுமே இதுபோன்ற படங்களில் நடிக்க முடியும் என்கிற ஸ்டீரியோடைப் அனைத்தையும் உடைத்துத் தள்ளியிருக்கிறது இந்தப்படம். 

மெளனகுரு திரைப்படத்தினைப் பார்த்து, மிகவும் பிடித்துப் போக இயக்குனர் முருகதாஸ், இந்தியில் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அருள்நிதி நடித்த கதாபாத்திரத்தில், சோனாக்‌ஷி சின்ஹா நடித்திருக்கிறார். முழுக்க, முழுக்க வுமன் சென்ட்ரிக் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது அகிரா.

இன்றைக்கு பல்கிப் பெருகிப் போயிருக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து தொடங்குகிறது படம். இளம்பெண்ணின் முகத்தில், காதலிக்கவில்லை என்ற குற்றத்திற்காக ஆசிட் வீசுகின்றனர் சில இளைஞர்கள். அவர்களை தைரியமாக காவல்துறையில் அடையாளம் காட்டும் பள்ளிச் சிறுமியான அகிராவின் முகத்தில் கத்தியால் கிழித்துவிடுகின்றனர். வாய் பேச முடியாத, காது கேட்காத சிறப்புக் குழந்தைகளுக்கு ஆசிரியராய் பணியாற்றும் அகிராவின் அப்பா, அடுத்து செய்யும் காரியம்தான் ஒட்டுமொத்த பெண் குழந்தைகளைப் பெற்ற அப்பாக்களும் இன்றைய காலகட்டத்தில் எடுக்க வேண்டிய முடிவு.

நேராக அகிராவை கூட்டிச் சென்று நடன வகுப்பிற்குப் பதிலாக, கராத்தே வகுப்பில் சேர்த்து விடுகிறார் அப்பா அதுல்குல்கர்னி. தைரியமான பெண்ணாக வளர்க்கப்படுகிறாள் அகிரா. மீண்டும் பெண்களிடம் கலாட்டா செய்யும் அந்த இளைஞர்களை அடித்துத் துவைக்கும் போது, அகிரா மீது ஊற்றப்பட இருந்த ஆசிட் தவறுதலாக அந்த இளைஞர்களின் ஒருவன் மீதே கொட்டிவிடுகிறது.  விளைவு...பணபலத்தால் சிறுவர் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் அகிரா.

அதன்பிறகு முழுவதும் மெளனகுருவின் அதே கதைதான். ஆனால், ஒவ்வொரு சீனிலும் நம்மிடையே மனதில் பதிந்து போவது மூன்றே பேர். ஒன்று சோனாக்‌ஷி...இன்னொன்று அனுராக் காஷ்யப்...மூன்றாவது கொங்கணா சென் சர்மா. தமிழில் ஜான் விஜய் நடித்திருந்த வேடத்தில் அனுராக் காஷ்யப். மனுஷனுக்கு சிரிப்புதான் பலமே. சோனாக்‌ஷி நடிப்பில் சொல்லிக் கொடுத்து நடிப்பது தெரிகிறதென்றால், அனுராக் ஜஸ்ட் லைக் தட் அசால்ட் ACP கேரக்டரில் பொருந்திப்போகிறார்.  உமா ரியாஸின் வேடத்தில் கொங்கணா சென். வயிற்றில் பிள்ளையைச் சுமந்து கொண்டு அமைதியாக விசாரணை நடத்தும் நேர்மையான போலீஸ் அதிகாரி. ஆனால், அமைதிக்கு எதிர்மாறாக எல்லாத் தடயங்களையும் இணைத்து டக், டக்கென்று துப்பறியும் திறமை அபாரம். 

திரைக்கதை நேர்த்தி. அதற்கு நிகராக படத்தைத் தன் தோளில் சுமந்து திரிகிறார் சோனாக்‌ஷி.  திரை முழுவதும் முகத்தில் எந்தவொரு ரியாக்‌ஷனையும் காட்டாமல், பிரச்னையென்றால் இறங்கியடிக்கும் பெண்ணாக சீனுக்கு சீன் கைதட்டல் வாங்குகிறார் சோனாக்‌ஷி. 

கொஞ்ச நேரமே வந்தாலும் அப்பா கதாபாத்திரத்தில், ‘இப்படித்தான் இருக்க வேண்டும் அப்பா’ என்று மனசில் பசை போட்டு ஒட்டிக் கொள்கிறார் அதுல் குல்கர்னி. எனினும், படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். நான்கைந்து பேரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் வந்து போகிறார்கள். ராய் லக்‌ஷ்மிலாம் இருக்காங்க பாஸ்! இசையும், வசனங்கள் ஓகே. சோனாக்‌ஷிக்கும், அனுராக்கிற்கும் பின்னணியில் ஒலிக்கப்படும் இசை கவர்கிறது. பாடல்கள் எடுபடவில்லை.

கொஞ்சம் மெனக்கெட்டு சில காட்சிகளுக்கு கத்திரி போட்டிருந்தால் இன்னும் க்ரிஸ்பாக இருந்திருக்கும்.சோனாக்‌ஷியும், அனுராக்கும் மட்டுமே படத்தைப் பார்த்துப்பாங்க என்று விட்டுவிட்டதுபோலத் தெரிகிறது. 

கடைசியில் ‘நாட்டைக் காப்பாற்ற நிரபராதிகளாக இருப்பவர்கள்தான் ஒவ்வொரு முறையும் தங்களைச் சிலுவையில் அறைந்து கொள்ள வேண்டுமா.. விட்டுக் கொடுத்துப் போக வேண்டுமா?”  என்று கேள்வி பிறப்பதை தவிர்க்க முடியவில்லை.