
பரபரப்புக்காகவோ ஆத்ம திருப்திக்காகவோ.. பெண்களைப் புகழ்ந்தோ திட்டியோ... ‘பீப்’ சாங் எழுதும் நடிகர்களுக்கு மத்தியில் ராணுவ வீரர்களுக்கு ஒரு வாழ்த்துக் கவிதை எழுதி சமர்ப்பித்திருக்கிறார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான். ‘‘எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்; இருந்தாலும் தீபாவளிப் பரிசாக இதை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்’’ என்று தனது ட்விட்டர் அக்கவுன்ட்டில் இந்த ஆங்கிலக் கவிதையை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் ஷாரூக்.
‘‘நமது பாதங்கள் தரை விரிப்பில்
அவர்கள் பாதங்களோ
தரையில்
நமது நாட்கள் வலிமையானவை
அவர்களுடையது
சவாலானவை
நமது இரவுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை
அவர்களுடையது
பதற்றமானவை
நமது வாழ்க்கை வாழ்வதற்கு
அவர்களுடையது
கொடுப்பதற்கு
இந்தக் கதாநாயகர்கள்
பாடப்படாமல் மறக்கப்படக் கூடியவர்கள் கிடையாது
அவர்கள் மன வலிமையை
தினச் சிக்கலை
நம்மால் கற்பனை செய்துகூடப்
பார்க்க முடியாது
அவர்கள் சண்டையிட்டு
நம்மை வலிமையானவர்களாக
மாற்றுகிறார்கள்’’
- இப்படிச் செல்கிறது அந்தக் கவிதை. இந்தக் கவிதையை தானே சொந்தமாக எழுதியதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார் ஷாரூக்.
ராணுவ வீரர்களை மதிப்பதில் பாலிவுட் நடிகர்கள் மத்தியில் அலாதி ஆர்வம் உண்டு. அண்மையில் நடிகர் சல்மான்கான், ‘‘ராணுவ வீரர்களை எங்கு பார்த்தாலும் வணக்கம் செலுத்த வேண்டும்!’’ என்று ட்வீட் செய்து அப்ளாஸ் வாங்கிய நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்காக பிரத்யேகமாக வாழ்த்து வீடியோவை வெளியிட்டு ‘நல்ல பிள்ளை’ இமேஜைத் தட்டிச் சென்றிருக்கிறார் ஷாரூக்கான். பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கிய ‘#Sandesh2Soldiers’ என்னும் ஹாஷ்டேக்கில் டேக் செய்யப்பட்டு, வைரல் ஆகியிருக்கிறது ஷாரூக்கின் வாழ்த்துக் கவிதை.
‘‘ராணுவ வீரர்கள்தான் நமது முதுகெலும்பு. எல்லையில் அவர்கள் தங்கள் தூக்கத்தைக் கெடுத்துத்தான் நமக்கு நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கிறார்கள். நாம் அவர்களுக்கு எந்த மரியாதையும் செய்வதாகத் தெரியவில்லை. எனது இந்த தீபாவளியை முழுக்க முழுக்க அவர்களுக்காகவே சமர்ப்பிக்கிறேன். தீபாவளியில் நாம் அவர்களை நினைத்துக் கொள்வோம்.’’ என்று சொல்லியிருக்கும் அவர், இன்னொரு ட்வீட்டில் வீடியோவாக அந்த ஆங்கிலக் கவிதையை வெளியிட்டுள்ளார்.
- தமிழ்