Published:Updated:

வித்யா பாலனின் come back-ல் என்ன சுவாரஸ்யம்? கஹானி 2 படம் எப்படி?

வித்யா பாலனின் come back-ல் என்ன சுவாரஸ்யம்? கஹானி 2 படம் எப்படி?
வித்யா பாலனின் come back-ல் என்ன சுவாரஸ்யம்? கஹானி 2 படம் எப்படி?

வித்யா பாலனின் come back-ல் என்ன சுவாரஸ்யம்? கஹானி 2 படம் எப்படி?

கடைசியாக முழுநீள கதாப்பாத்திரத்தில் வித்யா பாலன் நடித்த 'ஹமாரி அதூரி கஹானி' வெளியாகி ஒரு வருடம் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் மிகப் பெரிய இடைவெளி ஒன்றை உணரமுடிந்தது. "நல்ல பெர்ஃபாமென்ஸ் பார்த்து எவ்வளோ நாளாச்சு, எங்கப்பா அந்த வித்யா பாலன்?" என நினைக்க வைத்தவருக்கு தாராளமாக பெரிய வெல்வெட் கார்பெட் விரித்து வெல்கம் சொல்லலாம். கஹானி 2 வழியாக வித்யாபாலன் இஸ் பேக்!

2012ல் வெளியான கஹானி, நிறைமாத கர்ப்பத்துடன் கணவனைத் தேடி அலையும் பெண்ணின் கதை பற்றியது. அதன் இரண்டாம் பாகம் எனக் குறிப்பிட்ட இயக்குநர். அதற்கும் கஹானி 2வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். உறுதியாக இரண்டு பாகமும் வேறு வேறு தான். எனவே கஹானியை முழுக்க மறந்துவிட்டுப் படத்தைப் பார்க்கத் துவங்கலாம். 

வித்யா சின்ஹா (வித்யா பாலன்), தன் மகள் மின்னியுடன் கொல்கத்தாவில் வசிக்கிறார். கால்கள் செயலிழந்திருக்கும் தன் மகளைச் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்ல ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். திடீரென ஒரு நாள் வேலை முடித்து வீட்டுக்கு வரும் போது வீட்டில் மின்னி இல்லை. மொபைலில் மின்னியின் புகைப்படத்துடன் அவள் கடத்தப்பட்ட தகவலும் வருகிறது. மகளை மீட்பதற்காகச் செல்லும் வித்யா விபத்துக்குள்ளாகி கோமாவுக்குச் செல்கிறார். இந்த விபத்தை விசாரிக்க வருகிறார் இந்திரஜித் (அர்ஜுன் ராம்பால்). வித்யாவின் வீட்டைப் பார்வையிட செல்லும் அர்ஜுனுக்கு வித்யாவின் டைரி கிடைக்கிறது. அதே சமயத்தில் கொலை மற்றும் குழந்தை கடத்தல் செய்த துர்கா ராணி சிங் (துர்கா ராணி சிங் பற்றியும் கூறிவிடலாம், ஆனால் அது நிச்சயமாக ஒரு ஸ்பாய்லர் தான். அதனால் அது வேண்டாம்) தேடப்படுகிறார் என வித்யாபாலனின் புகைப்படத்துடன் ஒரு நோட்டீஸும் வருகிறது. உண்மையில் வித்யா யார்? என்ன நடக்கிறது? என்கிற விசாரணை மீதிப்படம்.

நம்மை புரட்டிப் போடும் ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் மெதுவாக நகரும் படத்தைக் காப்பாற்றுவது வித்யாபாலன் மட்டும் தான். சிகிச்சைக்காக எல்லாம் ஏற்பாடாகிவிட்டது எனத் தெரிந்ததும் சின்னதாய் ஒரு கண்ணீரிலேயே நடிப்பை வெளிப்படுத்துவது, மகளுக்காகப் பதறுவது என அவ்வளவு இயல்பு. விபத்துக்குப் பிறகு லேசாக வீங்கி சிவந்து போயிருக்கும் தன் முகத்தை எதேச்சையாகக் கண்ணாடியில் பார்த்ததும் கொடுக்கும் ஒரு ஷாக்.... வாவ்வ்வ் வித்யா. உயர் அதிகாரியை சமாளிப்பது, மனைவியைச் சமாதானப்படுத்துவது, வித்யாவைப் பற்றி விசாரிக்கும் சில காட்சிகள் என வரும் காட்சிகளில் எல்லாம் அர்ஜுன் ராம்பாலும் இம்ப்ரெஸ் செய்கிறார். கூடவே வித்யாவின் மகள் மின்னியாக நடித்திருக்கும் துனிஷா சர்மா, சிறுவயது மின்னியாக நடித்திருக்கும் நைஷா கன்னா இருவரும் இன்னும் சிறப்பு.  

க்லின்டன் சிரிஜோ பின்னணி இசை, தபன் பாசு ஒளிப்பதிவு த்ரில்லருக்கான ஃபீலை நன்றாகவே ஆடியன்ஸுக்குக் கடத்துகிறது. ஆனால், இவற்றை மீறி ஒரு த்ரில்லர் படத்தின் வெற்றி அதன் திரைக்கதையில் தான் அடங்கியிருக்கிறது. முன்பு சொன்னது போலவே "அடடே" என உங்களை ஆச்சர்யப்படுத்தும் ட்விஸ்ட் எதுவும் படத்தில் கிடையாது. முதல் பாதியில் சுவாரஸ்யமாக ஏதோ ஒன்று இருக்கிறது எனக் கொண்டு சென்ற விதம் செம, ஆனால் திருப்பம் எனக் காட்டப்படும் பல விஷயங்களும் ஆடியன்ஸ் முன்கூட்டியே யூகித்து விடுகிறார்கள். அந்த இடத்தில் இயக்குநர் சுஜய் கோஷ் சறுக்குகிறார். வித்யா சின்ஹா, துர்கா ராணி சிங் என இரண்டு கதைகளையும் ஒருசேர நகர்த்தும் திரைக்கதை அமைப்பு நன்றாக இருந்தாலும், 'வாவ்' ஃபேக்டர் எதுவும் இல்லாததால் இரண்டிலுமே பெரிய ஒட்டுதல் ஏற்படாமல் போகிறது. வித்யாவுக்கு உதவும் கதாப்பாத்திரம், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் இவைகூடக் கணிப்பிற்குறியதாய் இருப்பது ஏமாற்றம். 

கஹானியின் ப்ளஸ்சே சிம்பிளான கதையை, விறுவிறுப்பான திரைக்கதையுடன் கொண்டு போய்த் திடுக்கிடும் க்ளைமாக்ஸில் முடித்தது தான். அதில் எது இருந்ததோ, கஹானி 2வில் அது இல்லை. அதைத் தாண்டியும் சுவாரஸ்யமாய் வேறு விஷயங்கள் இல்லை. ஆனாலும், ஒரு சீரியஸ் பிரச்சனையை படத்தின் முக்கியமான போர்ஷனாக வைத்ததை நிச்சயம் பாராட்டலாம்.   

அடுத்த கட்டுரைக்கு