Published:Updated:

"மேலே ஏறி வாறோம்.. நீ ஒதுங்கி நில்லு" - அலியா பட்,கத்ரினாவை தெறிக்கவிட்ட நியா!

Vikatan Correspondent
"மேலே ஏறி வாறோம்.. நீ ஒதுங்கி நில்லு" - அலியா பட்,கத்ரினாவை தெறிக்கவிட்ட நியா!
"மேலே ஏறி வாறோம்.. நீ ஒதுங்கி நில்லு" - அலியா பட்,கத்ரினாவை தெறிக்கவிட்ட நியா!

லண்டனில் இருந்து வெளியாகும் 'ஈஸ்டர்ன் ஐ' ஒவ்வொரு வருடமும் ஆசியாவின் அழகான 50 பெண்கள்- ஆண்களை தேர்வு செய்யும். கடந்த சில ஆண்டுகளாகவே மீடியாக்களின் கவனம் இந்த தேர்வு முடிவுகளில் விழுந்திருந்தது. இந்த வருடத்தின் சர்வே முடிந்துவிட்டாலும் முழு முடிவும் வரும் ஜனவரி இதழில்தான் வெளியாகும். ஆனால் ஆசியாவின்முதல் ஆறு பெயர்களின் பட்டியலை அந்த இதழின் ஆசிரியர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதில் கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்த நியா ஷர்மா தனக்கு முன்னால் இருந்த அலியா பட் மற்றும் கத்ரினா கைப் ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு 3 வது இடத்துக்கு வந்துள்ளார். முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் தேர்வாகியிருக்கும் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா இருவரையும் விட மீடியா வெளிச்சம் நியா மீதே அதிகம் விழுந்துள்ளது. 

"கடந்த ஆண்டே பட்டியலுக்குள் வந்துவிட்டதால் டாப் 10க்குள் வருவேன் என்று நம்பினேன். ஆனால் அழகு புயலான கத்ரினாவை தாண்டி டாப் 3 க்குள் செல்வேன் என்றெல்லாம் கனவிலும் நினைக்கவில்லை.கனவுகூட காணாத ஒன்று கிடைத்துள்ளது மகிழ்ச்சியில் மிதக்கிறேன்" என் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் தெரிவித்தார் நியா ஷர்மா. 25 வயதாகும் நியா கடந்த 2010-ம் ஆண்டு முதல் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். 'ஜமாய் ராஜா' என்கிற சீரியலின் மூலம் இவருக்கு சின்னத்திரையில் பெரிய ஓப்பனிங் கிடைத்தது. மற்ற டிவி ஸ்டார்களை போல் பெரிய கிசுகிசு - பப் ஸ்டோரி எல்லாம் நியா பற்றி வந்ததேயில்லை.

நியா சோசியல் மீடியா பறவை. ஒரு நாளை ஓரு தடவையாவது இன்ஸடாகிராம்மில் தன் படங்களை அப்லோடிவிடுவார். ட்விட்டரில் ரசிகர்கள் கம் நண்பர்களுடன் எப்போதுமே 'சலசல சாட்டிங்' பார்ட்டி. 

"எங்களைப் போன்ற டிவி ஸ்டார்களுக்கு சரியான ட்ரஸை தேர்வு செய்யக்கூட தெரியாது. அவர்களால் சொந்தமாக மேக்கப்மேனோ, ஹேர் ஸ்டைலிஸ்டோ வைத்துக்கொள்ளவோ முடியாது. இது அப்பட்டமான உண்மை. இதனால் வழக்கமான டிவி நடிகைகள் செய்யும் செயல்களில் இருந்து மாறுபட்டு பல்வேறு புதிய முயற்சியில் ஈடுபடுகிறேன். அதில் சமயங்களில் வெற்றியும் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். சில சமயங்களில் தோல்வியிலும் முடிந்திருக்கிறது. ஆனால் ஆடைதான் நம்மை வெளிப்படுத்தும் என்று முழுமையாக நம்புகிறேன். அதனால்தான் என் ஆடைகளை நானே தேர்வு செய்கிறேன். என்ன உடுத்துகிறேன் என அறிந்தே உடுத்துகிறேன். இதை ஊடகங்கள் கவனித்து அங்கிகரித்ததை பெருமையாகத்தான் கருதுகிறேன். காரணம் இதற்கு நான் என்னை நானே தயார்படுத்தி வந்துள்ளேன்" என்று சொல்லும் நியா ஷர்மாக்கு இன்னொரு மகிழ்ச்சியும் உள்ளது.  தேர்வாகியுள்ள லிஸ்டில் டாப் 6-ல் இரண்டு பேர் சினிமா சார்பு இல்லாதவர்கள் என்பதால் அந்த மகிழ்ச்சியாம். நியாவுக்கு அடுத்து 4-ம் இடத்தில் இருக்கும் திரஷ்டி தமியும் நியா போலவே டிவி நடிகை. 

ஆண்கள் லிஸ்டில் டாப் 6-ல் கடந்த ஆண்டு முதல் இடத்தில் வந்த பாடகர் ஸயான் மாலிக்கே இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இவரிடம் முதல் இடத்தை பறிகொடுத்த பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் இந்த ஆண்டும் இரண்டாவது இடத்தில் வந்துள்ளார்.  மூன்றாவது இடத்தில் பாவத் கானும், நான்காவது இடத்தில் ஆஷிஷ் சர்மா, ஐந்தாவது இடத்தில் இளைஞர்களுக்கு வழிவிடாமல் இன்னும் கெத்து காட்டும் சல்மான் கானும், ஆறாவது இடத்தில் பரூன் ஷோப்தியும் தேர்வாகியுள்ளனர்.

-வரவனை செந்தில்