Published:Updated:

’அமீர்கானிடம் விளக்கம் கேட்பேன்!’ ‘டங்கல்’ பட ரியல் கோச்சின் குரல்

’அமீர்கானிடம் விளக்கம் கேட்பேன்!’  ‘டங்கல்’ பட ரியல் கோச்சின் குரல்
’அமீர்கானிடம் விளக்கம் கேட்பேன்!’ ‘டங்கல்’ பட ரியல் கோச்சின் குரல்

’அமீர்கானிடம் விளக்கம் கேட்பேன்!’ ‘டங்கல்’ பட ரியல் கோச்சின் குரல்

நண்டு சிண்டுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் முஷ்டி புடைக்க வைத்து விட்டது அமீர்கானின் ‘டங்கல்’ படம். சில நல்ல படங்கள் வணிகரீதியாக ஓடாது; கமர்ஷியலாக வெற்றியடைந்த படங்களை நல்ல படம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இரண்டையும் சேர்த்தவண்ணம் அதிரிபுதிரி ஹிட் ஆகி இருக்கிறது ‘டங்கல்’. ‘மூணு நாள்லயே நூறு கோடி வசூலாமே’ என்று கலெக்‌ஷன் ரிப்போர்ட்கள் வெளியாக, ‘படம்னா இப்படித்தான்யா இருக்கணும்’ என்று ஒவ்வொரு ரசிகனும் உச்சி முகர்ந்து கொண்டிருக்கிறான்.

இந்த வேளையில்,  ’டங்கல்’  படத்துக்கு ஓர் எதிர்மறையான குரல் வெடித்திருக்கிறது. ‘‘டங்கல் படம் உண்மையைப் பேசவில்லை. அமீர்கான் இப்படிச் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. என்னை மிகவும் அசிங்கப்படுத்தி விட்டது டங்கல்!’’ என்று சொல்லியிருப்பவர், ரெஸ்ட்லிங் வீராங்கனைகளான  கீதா போகத், பபிதா போகத் சகோதரிகளின் ரியல் கோச், பி.ஆர்.சொந்தி.


’டங்கல்’ படம் பார்க்காதவர்களுக்கு ஒரு சின்ன முன்குறிப்பு: படத்தில் கீதா போகத்திற்கு சிறுவயதில் இருந்தே பயிற்சி கொடுத்து வருவார் தந்தை மஹாவீர் போகத் (அமீர்கான்). அதன்பிறகு பாட்டியாலாவில் நேஷனல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சேருவார் கீதா. அவருக்கு கோச்சாக வருபவர் பெயர் பி.ஆர்.கடம். ஆரம்பம் முதலே அவரது பயிற்சியால் கீதா கொஞ்சம் கொஞ்சமாக தன் இயல்பில் இருந்து மாறி, ஜெயிக்க முடியாமல் திணறுவார். ஒரு கட்டத்தில் ‘சேவக்கை டிராவிட் போல விளையாடச் சொன்னால் எப்படி?’ என்று எதிர்ப்புக் குரல் எழுப்புவார் அமீர். அதன்பிறகு, அந்தக் கோச் அளிக்கும் புகாரால், சகோதரிகள் இருவருமே பயிற்சி முகாமுக்கே நுழைய தடை விதிக்கும் அளவுக்கு நிலைமை கைமீறும். அமீர்கான், மன்னிப்பெல்லாம் கேட்டு ‘இனி அவர்களது பயிற்சியில் தலையிட மாட்டேன்’ என விசாரணைக் கமிட்டி முன் கைகட்டி நிற்பார். கடைசி காட்சியில் அந்த கோச், அமீர்கானைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வார். இப்படி இந்தப் படத்தில் பாதி வில்லனாகச் சித்தரிக்கப்பட்டிருப்பார் பி.ஆர்.கடம்.

பி.ஆர்.கடம் என்ற பெயரில் சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்தக் கதாபாத்திரத்தின் காட்சிகளுக்கு எதிராகத்தான் பொங்கியிருக்கிறார் பி.ஆர்.சொந்தி.  இவர்தான் கீதா மற்றும் பபிதாவின் ரியல் கோச். ‘‘படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் கமர்ஷியலாக சில விஷயங்கள் சேர்க்கப்பட்டிருப்பது எல்லாம் ஓகே. ஆனால், பயோபிக் என்னும்போது இதில் சில பிழைகளை ஏற்படுத்தி விட்டனர் அமீர்கானும் படத்தின் இயக்குநரும்’’ என்று எகிறிவிட்டார். இத்தனைக்கும் படத்தின் ஷூட்டிங்கின்போது தன்னைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும், ரெஸ்ட்லிங் பற்றி சந்தேகங்கள் கேட்டதாகவும், ஆனால் படத்தில் இந்த மாதிரி காட்சிகள் உள்ளது பற்றி எதுவும் தகவல் சொல்லவில்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார் சொந்தி. 

‘‘மஹாவீர் சிங் போஹத்தை எனக்கு மிக நன்றாகத் தெரியும். அவர் மிகப் பெரிய ஜென்டில்மேன். அவரின் மகள்கள் கீதாவும் பபிதாவும் என்னிடம் 3 வருடங்களாக ரெஸ்ட்லிங் கோச்சிங் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய கோச்சிங்கில் இதுவரை மஹாவீர் எந்தவித குற்றமும் சொன்னதில்லை; ஐடியாவும் கொடுத்ததில்லை. படத்தில் கோச்சின் பெயரை பி.ஆர்.கடம் என்று மாற்றியிருக்கிறார்கள் ஓகே; ஆனால் கேரக்டரையும் மாற்றினால் எப்படி? படத்தில் ஏன் இதுபோல் என்னையும் மஹாவீரையும் எதிரிகளாகக் காட்டியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கீதா, பபிதாவுக்கு நான் மட்டுமில்லை; என்னைப்போல் இன்னும் 3 கோச்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி படத்தில் எந்தவித காட்சியும் இல்லையே? ‘டங்கல்’ படக்குழுவினர் இதை வேண்டுமென்றே செய்திருக்கின்றனரா? இது பற்றி நான் ரெஸ்ட்லிங் ஃபெடரேஷனில் பேச இருக்கிறேன். அமீர்கானையும் சந்தித்து இது பற்றி விளக்கம் கேட்கலாம் என்று இருக்கிறேன்’’ என்று பொங்கி எழுந்துவிட்டார் சொந்தி.

படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெயர் எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அமீர்கான் இதை எப்படிக் கையாளப்போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்!

- தமிழ்

அடுத்த கட்டுரைக்கு