Published:Updated:

பாலிவுட்டில் சச்சின் பயோபிக் போல கோவைத் தமிழரின் பயோபிக் தெரியுமா? #BioPic

பாலிவுட்டில் சச்சின் பயோபிக் போல கோவைத் தமிழரின் பயோபிக் தெரியுமா? #BioPic
பாலிவுட்டில் சச்சின் பயோபிக் போல கோவைத் தமிழரின் பயோபிக் தெரியுமா? #BioPic

வெற்றி, தோல்வியைத் தாண்டி 'பயோ பிக்' ஜானரில் உருவாகும் படங்கள், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படங்கள். ஒரு வரலாறும்கூட!  அப்படியாக, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட அல்லது 'பயோ பிக்' ஜானரில் வரவிருக்கும் சில பாலிவுட் படங்கள் இவை. 

சச்சின் : எ பில்லியன் ட்ரீம்ஸ் 

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு 'எம்.எஸ்.தோனி' என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வரிசையில், வருகிற மே மாதம் திரைக்கு வரவிருக்கும் மற்றொரு படம், 'சச்சின் : எ பில்லியன் ட்ரீம்ஸ்'. விளையாட்டு சார்ந்த ஆவணப் படங்களையும், சில திரைப்படங்களையும் இயக்கியுள்ள இங்கிலாந்து இயக்குநர் ஜேம்ஸ் எர்ஸ்கின் இப்படத்தை இயக்கியிருக்கிறார். சிறுவயதிலேயே கிரிக்கெட் மீது காதல் கொண்ட சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டின் கடவுளாகக் கொண்டாடப்பட்ட கதையை மட்டும் சொல்லாமல், சச்சினின் பெர்சனல் பக்கங்களையும் இப்படத்தில் புரட்டியிருக்கிறார்களாம். தன் கேரக்டருக்கு சச்சின் டெண்டுல்கரே நடித்திருப்பதும், சச்சினின் இளவயது கேரக்டரில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் நடித்திருப்பதும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பதும் இப்படத்தின் சிறப்புகள். தவிர, சச்சின் விளையாடிய முக்கியமான போட்டிகளின் கிளிப்பிங்ஸும் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சச்சின் ரசிகர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்களுக்கும் இது முக்கியமான படமாக இருக்கும்.

மோகுல் 

சாதாரண பழவியாபாரியின் மகனாகப் பிறந்து பிஸ்னஸ்மேன் ஆனவர் டெல்லியைச் சேர்ந்த குல்ஷன் குமார். 'சூப்பர் கேஸட் இன்டஸ்ட்ரீஸ்' என்ற பெயரில் சிறிய கேஸட் நிறுவனம் தொடங்கிய குல்ஷன், பக்திப் பாடல்களை விற்பனை செய்தார். கொஞ்சம் கொஞ்சமாக தனது வியாபார எல்லையை விரிவுபடுத்தினார். மும்பைக்குக் குடிபெயர்ந்தார். சினிமாவிலும் கால் பதித்தார். திரைப்படங்களை விநியோகம் செய்தார். ஒரு படம் இயக்கினார். பல படங்களைத் தயாரித்தார். அதேசமயம், 'டி-சீரியஸ்' என்ற இசை நிறுவனத்தை இந்தியாவின் முக்கியமான இசை நிறுவனமாக மாற்றினார். தொழிலில் போட்டியாளர்கள் உருவானார்கள். குல்ஷனின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள், அவரது உயிருக்குக் குறி வைத்தார்கள். 1997ஆம் ஆண்டு, கோவில் ஒன்றிற்குச் சென்ற குல்ஷன், சில நபர்களால் நடுவீதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், பல வருடங்களுக்குப் பிறகு 'மோகுல் - தி குல்ஷன் குமார் ஸ்டோரி' என்ற பெயரில் படமாகிறது. படத்தை குல்ஷன் குமாரின் மனைவி சுதேஷ் குமாரி தயாரிக்கிறார். குல்ஷன் கேரக்டரில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகவிருக்கிறது. 

கோல்ட் 

1948 லண்டன் ஒலிம்பிக் போட்டியில், கிஷன் லால் என்பவரது தலைமையிலான இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்றது. சுதந்திர இந்தியா பெற்ற முதல் தங்கப் பதக்கம். இதை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருக்கிறது 'கோல்ட்' என்ற திரைப்படம். இதிலும், அக்‌ஷய் குமார் ஹீரோ. ரீமா கக்டி இப்படத்தை இயக்குகிறார்.  

பூர்ணா

ஏழைக் குடும்பத்தில் பிறந்த பழங்குடிப் பெண் மலாவத் பூர்ணா. ஆந்திராவைச் சேர்ந்தவர். இரு வருடங்களுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, அம்பேத்கர் படத்தை வைத்துவிட்ட வந்த இவர்தான், 'இளம் வயதில் எவரெஸ்டில் ஏறிய சிறுமி' என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். கேட்கும்போதே ஜில்லிடவைக்கும் இந்தச் சிறுமியின் வாழ்க்கைதான், 'பூர்ணா : கரேஜ் ஹேஸ் நோ லிமிட்' என்ற பெயரில் படமாகியிருக்கிறது. 'விஸ்வரூபம்' படத்தில் வில்லனாக நடித்த ராகுல் போஸ் இப்படத்தை இயக்கி, தயாரித்து, முக்கியக் கேரக்டரில் நடிக்கவும் செய்திருக்கிறார். அமெரிக்காவின் பால்ம் ஸ்பிரிங்ஸ் இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த 30 படங்களில் ஒன்றாகத் தேர்வாகியுள்ள இப்படம், அடுத்த வாரம் வெளியாகிறது.

பத்மாவதி 

வரலாற்றின் பேரழகி ராணிகளில் ஒருவர் சித்தூர் பத்மினி. ராணி பத்மினியின் அழகில் மயங்கிய அலாவுதீன் கில்ஜி,  ராணி பத்மினியின் கோட்டை மீது படையெடுத்து வர, அலாவுதீன் கண்முன்னே தீயில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டார் பத்மினி என்கிறது வரலாறு. இந்த வரலாறே, 'பத்மாவதி' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. 'பாஜிராவ் மஸ்தானி' போன்ற படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தின் இயக்குநர். ராணி பத்மினி கேரக்டரில் தீபிகா படுகோனே நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டில் இறுதியில் வெளியாகவிருக்கும் இப்படத்தில், வரலாற்றைப் படமாக்காமல், ராணி பத்மினி அலாவுதீன் கில்ஜி மீது காதல் வயப்பட்டது போன்ற காட்சிகளை இயக்குநர் சஞ்சய் படமாக்குவதாக ஜெய்பூரைச் சேர்ந்த 'ஶ்ரீ ராஜ்புட் கர்னி சேனா' என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. சமீபத்தில், இப்படத்தின் படப்பிடிப்பில் புகுந்து ரகளையிலும் ஈடுபட்டது.

டாடி 

மும்பையில் கேங்ஸ்டராக இருந்து அரசியலுக்கு வந்தவர் அருண் காவ்லி. தாவூத் இப்ராஹிமின் பரம எதிரியாக வலம் வந்தவர். சிவசேனா கட்சியைச் சேர்ந்த கமலாக்கர் என்பவரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சிறையில் இருக்கிறார். இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாவதுதான், அஷிம் அலுவாலியா இயக்கும் 'டாடி' திரைப்படம். அருண் காவ்லியாக அர்ஜூன் ராம்பால் நடிக்க, அவரது மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஹசீனா

தாவூத் இப்ராஹிமின் எதிரி அருண் காவ்லியின் வரலாறு 'டாடி'யாகப் படமாகிக்கொண்டிருக்க, தாவூத் இப்ராஹிம் தங்கை ஹசீனாவின் வாழ்க்கை வரலாறு 'ஹசீனா' என்ற பெயரில் படமாகிக்கொண்டிருக்கிறது. ஹசீனாவின் கணவர் இஸ்மாயில் பார்க்கர், அருண் காவ்லியால் கொல்லப்பட்டவர். தாவூத் இப்ராஹிமின் தொழில்களைக் கவனித்துக்கொண்டிருந்தார் ஹசீனா. 2014ல் கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது வாழ்க்கையின் முக்கியமான பகுதிகளை மையப்படுத்தி 'ஹசீனா - தி குயின் ஆஃப் மும்பை' என்ற பெயரில் இயக்கியிருக்கிறார், அபூர்வா லகியா. தாவூத் இப்ராஹிம் - ஹசீனா இருவரும் அண்ணன், தங்கை. இவர்களது கேரக்டரில் நடித்திருக்கும் ஷ்ரதா கபூர் - சித்தாந்த் கபூர் இருவரும் அப்படியே! 

இந்து சர்க்கார்

ஜூன் 25, 1975 முதல் மார்ச் 21, 1977 வரை... இந்தியாவில் அவசர நிலைப் பிரகடனம் கொண்டுவந்தார் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி. இந்திய அரசியலில் சர்ச்சை மிகுந்த காலமாகக் கருதப்படும் இக்கால கட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, 'இந்து சர்க்கார்' என்ற திரைப்படம் உருவாகிக்கொண்டிருக்கிறது. நீல் நிதின் முகேஷ், கிர்தி குல்கர்னி முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, மதுர் பண்டர்கர் இப்படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். 

பேட்மேன் (Pad Man)

அக்‌ஷய்குமார் நடிக்க, அவரது மனைவி டிவிங்கிள் கண்ணா தயாரிக்கும் படம். 'இங்கிலீஷ் விங்கிலீஷ்', 'ஷமிதாப்', ‘சீனி கம்’  படங்களை இயக்கிய பால்கி 'பேட்மேன்' படத்தை இயக்குகிறார். பாலிவுட்டில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படம், ஒரு தமிழரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம், ஏழைப் பெண்களுக்காக குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் கருவியைக் கண்டுபிடித்து காப்புரிமை வாங்கியவர்.

குறைந்த விலையில் தரமான நாப்கின்களைத் தயாரிக்க, ஜெயஶ்ரீ இன்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் தொழில் நிறுவனம் நடத்திக்கொண்டிருப்பவர். வறுமையில் வளர்ந்து, பத்மஸ்ரீ விருதுவரை உயர்ந்தவர். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டே 'பேட்மேன்' உருவாகிக்கொண்டிருக்கிறது. 

சரி, உங்களுக்கு யாருடைய வாழ்க்கை வரலாற்றை பயோ-பிக் வடிவில் பெரிய திரையில் பார்க்க ஆசை? கமென்ட்டில் சொல்லுங்கள்! 

கே.ஜி.மணிகண்டன்