Published:Updated:

தனிஒருத்தியாக படத்தை தாங்குகிறாரா சோனாக்‌ஷி? - 'நூர்' படம் எப்படி? #Noor

விகடன் விமர்சனக்குழு
தனிஒருத்தியாக படத்தை தாங்குகிறாரா சோனாக்‌ஷி? - 'நூர்' படம் எப்படி? #Noor
தனிஒருத்தியாக படத்தை தாங்குகிறாரா சோனாக்‌ஷி? - 'நூர்' படம் எப்படி? #Noor

தனிஒருத்தியாக படத்தை தாங்குகிறாரா சோனாக்‌ஷி? - 'நூர்' படம் எப்படி? #Noor

2014ம் ஆண்டு பாகிஸ்தான் பத்திரிகையாளர் எழுதிய 'கராச்சி, யூ ஆர் கில்லிங் மீ' நாவலைத் தழுவி உருவாகி, வெளியாகியிருக்கிறது 'நூர்'. 20 வயது ஆய்ஷா கான், ஆபத்து நிறைந்த கராச்சி பகுதிகளில் பெண் பத்திரிகையாளராக இயங்குவதையும், அவரின் பர்சனல் பிரச்னைகளை காமெடி - க்ரைம் த்ரில்லராக சொல்லியிருந்த நாவலுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. கராச்சிக்கு பதில் மும்பையைக் களமாக்கி அதே கதையைப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சுனில் சிப்பி. நாவல் போல படமும் கவனம் பெறுகிறதா?

நூர் ராய் சௌத்ரிக்கு தன் வாழ்க்கையே பிடிக்கவில்லை. கூடவே தான் செய்யும் வேலை, தினமும் காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது, நொறுக்குத் தீனியால் கூடும் எடை, தான் வசிக்கும் மும்பை. பத்திரிகையாளராக நிறைய சாதிக்க வேண்டும், மக்கள் பிரச்னைகள் பற்றி பேசவேண்டும் என நூருக்கு நூறு ஆசைகள். ஆனால், லோக்கல் சேனலுக்காக அவள் கவர் செய்யும் செய்திகள் அனைத்தும் அதற்கு எதிர்மறையாக இருக்கிறது. அவள் நினைத்தபடி மக்கள் பிரச்னை ஒன்றைப் பற்றிய செய்தி கிடைக்கிறது. அதை வெளியில் கொண்டுவரும் முயற்சியில் இறங்கும் நூர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். கூடவே அதனால் குற்ற உணர்ச்சிக்கும் உள்ளாகிறார். இதை கருத்து சொல்லும் தொனி இல்லாமல் எடுத்திருக்கிறார் இயக்குநர் சுன்ஹில் சிப்பி. 

நூர் ரோலில் சோனாக்‌ஷி சின்ஹா கச்சிதம். நிறைய குழப்பங்கள், எதற்கெடுத்தாலும் மன அழுத்தம், கோபம், நண்பர்களிடம் குழந்தை போல சண்டைபோடுவது, குற்ற உணர்ச்சியில் அழுவது என லீட் ரோலை நிறைவாக செய்திருக்கிறார். தான் நினைத்த வேலையில் சேர்ந்தும் மனதுக்குப் பிடித்ததை செய்ய முடியாமல், மழையில் நனைந்த படி சன்னி லியோனை பேட்டி எடுக்க செல்வது, தன் நண்பன் கேர்ள் ஃப்ரெண்டுடன் டேட்டிங் போகும் போது அவர்களுடன் செல்வது என சாதாரணமாக எல்லோராலும் ரிலேட் செய்து கொள்ளக் கூடிய ரோல். நூரின் நண்பர்களாக வரும் சாத் (கனன் கில்), ஸாரா (ஷிபானி), காதலன் அயான் (புரப்) பாஸ் ஆக வரும் சேகர் (மனீஷ் சௌத்ரி), வேலைக்காரப் பெண்ணாக வரும் மால்தி (ஸ்மிதா தாம்பே) என அத்தனை கதாபாத்திரங்களும் தங்கள் பங்கைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். சாத் ஆக நடித்திருக்கும் கனன் கில் அறிமுக நடிகர் எனத் தெரியாத அளவிற்கு மிக இயல்பாக நடித்திருக்கிறார். மால்தி ரோலில் நடித்திருக்கும் ஸ்மிதா தாம்பே நடிப்பும் பாராட்டுக்குரியது.

அத்தனை பெரிய பிரச்னையில் தலையிடும் சோனாக்‌ஷிக்கு சின்ன போன் மிரட்டல் கூட இல்லை, எதைப் பற்றிய பிரச்னை சோனாக்‌ஷி கையில் எடுக்கிறாரோ, அதை அம்போ என விட்டுவிட்டு அவரின் பர்சனல் விஷயங்களுக்குள் கதை திரும்பிவிடுவதால் அதன் தாக்கத்தை நம்மால் உணரமுடியாமல் போகிறது.  கூடவே, படம் முழுக்க நிறைந்திருக்கும் சின்ன நாடகத் தொனி படத்துடன் நம்மை ஒன்றவிடாமல் செய்கிறது. ஒரு கட்டத்தில் படம் ஒரு பத்திரிகையாளரைப் பற்றி பேசுகிறதா, இல்லை நூர் என்கிற பெண்ணின் பர்சனலைப் பற்றி பேசுகிறதா, இல்லை படத்தில் அவள் கையில் எடுக்கும் பிரச்னையைப் பற்றி பேசுகிறதா என்கிற குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

எல்லாவற்றையும் தாண்டி நம்மை படம் பார்க்க வைப்பது சுனில் சிப்பியின் காமெடி ட்ரீட்மென்ட்டும், ஒற்றை ஆளாக படத்தை நகர்த்தி செல்லும் சோனாக்‌ஷியின் பெர்ஃபாமென்ஸும் தான். ஆனால், படம் மட்டும் சூப்பரும்  இல்லாமல் சுமாரும் இல்லாமல் நடுவிலேயே நிற்கிறது. 

அடுத்த கட்டுரைக்கு