Published:Updated:

“மனைவி, குடும்பத்தோடு வாழ நான் லாயக்கற்றவன்!” வினோத் கன்னா வாழ்க்கை ஒரு ரீவைண்ட்

“மனைவி, குடும்பத்தோடு வாழ நான் லாயக்கற்றவன்!” வினோத் கன்னா வாழ்க்கை ஒரு ரீவைண்ட்
“மனைவி, குடும்பத்தோடு வாழ நான் லாயக்கற்றவன்!” வினோத் கன்னா வாழ்க்கை ஒரு ரீவைண்ட்

தற்போது தேசிய விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில்  தாதா சாகிப் பால்கே விருது  வினோத் கண்ணாவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அவர்  மறைந்தபோது எழுதப்பட்ட கட்டுரை இது...

வினோத் கன்னா யார், அவர் கடந்து வந்த பாதை என்ன என்பதைப் பார்ப்போம்...

கன்னாவின் குடும்பப் பின்னணி

பாகிஸ்தான் பெஷாவர் பகுதியைச் சேர்ந்த தம்பதி கமலா-கிருஷ்ணசந்த். இவர்களுக்கு மூன்று பெண், இரண்டு ஆண் என ஐந்து குழந்தைகள். அதில் வினோத் கன்னாவும் ஒருவர். இந்தியப் பிரிவினையின்போது பாகிஸ்தானிலிருந்து மும்பைக்குக் குடிபெயர்ந்தது கிருஷ்ணசந்த் குடும்பம். அங்கு உள்ள ராணி மேரி பள்ளி, புனித சேவியர் மேல்நிலைப் பள்ளிகளில் படித்தார் கன்னா. பிறகு, இவரின் குடும்பம் 1957-ம் ஆண்டில் டெல்லிக்குக் குடிபெயர்ந்தபோது, அங்கு  இருந்த பப்ளிக் பள்ளியில் படித்தார். 1960-களில் குடும்பம் மீண்டும் மும்பைக்கே குடிபெயர்ந்தது. அங்கு தங்கும் விடுதியில் இருந்தபடி பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். பிறகு, மும்பை சிடன்ஹாம் கல்லூரியில் வணிகவியலில் பட்டப்படிப்பை முடித்தார் கன்னா.

சினிமா அறிமுகம்

பள்ளியில் படிக்கும்போது பார்த்த ‘மொஹல் ஏ ஆசம்’ திரைப்படம்தான் கன்னாவுக்கு சினிமா மீதான ஆர்வத்தை  ஏற்படுத்தியது. பிறகு, 1969-ம் ஆண்டு சுனில் தத் தயாரித்து அதுர்த்தி சுப்பாராவ் இயக்கிய ‘மன் கா பிரீத்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக திரைத் துறைக்கு அறிமுகமானார். அது, டி.ஆர்.ராமண்ணா இயக்கி ரவிச்சந்திரன்-ஜெயலலிதா நடித்து 1966-ம் ஆண்டில் வெளிவந்த ‘குமரிப்பெண்’ என்ற தமிழ்ப் படத்தின் ரீமேக். அதைத் தொடர்ந்து 1970-களில் ‘சச்சதா ஜூஹுதா’, ‘ஆன் மிலோ சஜ்னா’, ‘மஸ்தானா’, ‘மேரா கான் மேரா தேஷ்’ ஆகிய படங்களில் வில்லன், குணச்சித்திரக் கதாபாத்திரங்கள் எனத் தொடர்ந்து நடித்துவந்தார்.

வில்லனாக அறிமுகமாகி ஹீரோவான ஒருசில இந்தி நடிகர்களில் கன்னாவும் ஒருவர். தனி ஹீரோவாக நடித்து ஹிட் அடித்த படம் ‘ஹம் தும் அவுட் வா’. 1973 முதல் 1982 வரையிலான பத்து ஆண்டுகள் ஹீரோவாகப் பல படங்கள் நடித்தார் கன்னா. `ஃபெரேபி', `கட்யாரா', ‘காயித்’, ‘சலிம்’, இன்கார்’, ‘கட்டார்’, ‘ஆப் கி கதிர்’, ‘ஆருப்’... உள்பட பல படங்களில் நடித்தார். 1980-ம் ஆண்டில் ஃபெரோஸ் கான் இயக்கி தயாரித்து நடித்த ‘ஹுர்பானி’ என்ற படம் அந்த ஆண்டு வெளிவந்த படங்களிலேயே அதிக வசூலை அள்ளியது.

மல்ட்டி ஸ்டார் காம்பினேஷன்

தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்த கன்னா, எந்த ஈகோவும் பார்க்காமல் பல நடிகர்களுடன் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கவும் தயாராக இருந்தார். இந்தக் குணம் அவரை மேலும் உயர்த்தியது. அப்படி 1971-ம் ஆண்டில் சத்ருகன் சின்ஹா உடன் இணைந்து குல்சார் இயக்கிய ‘மேரே ஆப்னா’ என்ற படம் நடித்தார். இப்படிப் பல முன்னணி ஹீரோக்களுடன் கன்னா சேர்ந்து நடித்த படங்களே கிட்டத்தட்ட ஐம்பது இருக்கும்.

சஷி கபூருடன், ‘சங்கர் சம்பு’, ‘சோர் சிப்பாஹீ’, ‘ஏக் அவுட் ஏக் கைரா’ படங்களில் நடித்தவர், அமிதாப் பச்சனுடன் ‘ஹேரா பேரி’, ‘கூன் பசினா’, ‘அமர் அக்பர் ஆண்டனி’, ‘ஷமீர்’, ‘பர்வரிஷ்’, ‘முஹதர் கா சிகந்தர்’ படங்களில் நடித்தார். இதேபோல ரந்தீர் கபூர், சுனில் தத், ஜிதேந்திரா, தர்மேந்திரா எனத் தொடர்ந்த காம்பினேஷன், ராஜ் கபூர், ராஜ்குமார், கோவிந்தா, சஞ்சய் தத், சல்மான் கான் என நீண்டது. இப்படி இவர் கடைசியாக வேறொரு நடிகருடன் சேர்ந்து நடித்த படம் ‘தில்வாலே’. அதுவே இவருக்குக் கடைசியான படமாகவும் அமைந்துவிட்டது.

ராஜேஷ் கண்ணா நட்பு

இவர் சேர்ந்து நடித்த ஹீரோக்களில் ராஜேஷ் கன்னா குறிப்பிடத்தக்கவர். ராஜேஷுக்காக சில படங்களில் வினோத் கன்னா குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். ‘ஆன் மிலோ சஜ்னா’வில் வினோத், ராஜேஷுக்கு வில்லன். ‘சச்சா ஜூட்டு’, ‘ராஜ்புத்’ மற்றும் ப்ரேம் கஹானி படங்களில் வினோத்துக்கு கேரக்டர் ரோல்கள். இவர்களின் இணைபிரியா நட்பு, சினிமாவைத் தாண்டியும் பேசப்பட்டது. ஆனால், அரசியலில் நேர்எதிர் துருவங்கள். வினோத் கன்னா, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். ராஜேஷ் காங்கிரஸ்காரர். இவரும், ஒருவரை ஒருவர் எதிர்த்து தீவிர பிரசாரம் செய்திருக்கிறார்கள்.

பஞ்சாப் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் காங்சிரஸை ஆதரித்து பிரசாரம் செய்த ராஜேஷ் கன்னா, ‘‘பா.ஜ. கட்சியினர் தேர்தலுக்குத் தேர்தல் பல வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். ஆனால், தேர்தலுக்குள் அதை மறந்துவிடுகிறார்கள். குர்தாஸ்பூர் தொகுதியில் எம்.பி ஆன வினோத் கன்னா, கடந்த தேர்தலின்போது திரைப்பட அகடாமி ஒன்றை நிறுவுவதாக வாக்களித்தார். ஆனால், இதுவரை திரைப்பட அகடாமியைக் கட்டவில்லை. ஆனால் காங்கிரஸ், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவருகிறது” என்று பேசினார். ஆனாலும் அரசியலைத் தாண்டி அவர்களின் நட்பு தொடர்ந்தது.

ஆன்மிகம்

ஆன்மிகத்தில் ஓஷோ ரஜ்னீஷைப் பின்பற்றினார் வினோத் கன்னா. 1982-ம் ஆண்டில் சினிமாவிலிருந்து விலகி ஆன்மிகம் பக்கம் சென்றவர், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் மீண்டும் பாலிவுட் பக்கம் வந்தார். ‘இன்சாஃப்’ என்ற படத்தில் டிம்பிள் கபாடியாவுடன் நடித்தார். அந்தச் சமயத்தில் வினோத் கன்னாவுக்கு ரொமான்டிக் ரோல்களாக வந்தன. ஆனால், இவர் ஆக்‌ஷன் படங்களையே விரும்பினார்.

மகன் அறிமுகம்

1997-ம் ஆண்டில் தன் மகன் அக்‌ஷய் கன்னாவை ‘ஹிமாலே புத்ரா’ படம் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். மூன்று தலைமுறைகளாக சினிமாவில் நடித்து வந்த இவருக்கு, 1999-ம் ஆண்டில் வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம்பேர் விருது கொடுக்கப்பட்டது. கடைசியாக, 2007-ம் ஆண்டில் ‘தில்வாலே’ படத்தில் ஷாரூக் கானுடன் நடித்தார். வினோத், டிவி-யையும் விட்டுவைக்கவில்லை. ஸ்மிரிதி இரானி தயாரித்த இந்தி சீரியலில் வினோத்தான் ஹீரோ.

அரசியல்

1997-ம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் கன்னா . பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதியிலிருந்து பா.ஜ.க-வின் சார்பாக லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 1999-ம் ஆண்டில் அதே தொகுதியிலிருந்து மீண்டும் எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட்டார். பிறகு, 2002-ம் ஆண்டில் மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சரானார். ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளியுறவுத் துறை இணை அமைச்சரானார். 2004-ம் ஆண்டில் நடந்த மறுதேர்தலிலும் குர்தாஸ்புர் தொகுதியில் வென்றவர், 2009-ம் ஆண்டில் லோக்சபா தேர்தலில் அதே தொகுதியில் தோல்வியைத் தழுவினார். ஆனால், 2014-ம் ஆண்டு நடந்த நடப்பு 16-வது லோக்சபாவில் அதே தொகுதியில் வென்று எம்.பி-யானார்.

குடும்பம்

1971ல் கீதாஞ்சலி என்பவரை மணந்தவருக்கு ராகுல் கன்னா, அக்ஷய் கன்னா ஆகிய இரு மகன்கள். 1980ல் அமெரிக்காவில் உள்ள ஓஷோ ரஜினிஷின் ரஜீனிஸ்புரத்துக்கு சென்றவர் அங்கேயே 5 வருடங்கள் தங்கிவிட்டார். அங்கு பாத்திரங்களை கழுவுவது, ஓஷோவின் தோட்டங்களை பராமரிக்கும் தோட்டக்காரர் என ஆன்மிக பணிவிடைகளை செய்தார். குடும்பத்தில் இருந்து விலகிச்சென்றதால் குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது. பிறகு அது விவாகரத்தில் முடிந்தது. அதைத்தொடர்ந்து 1990ல் கவிதா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்தார். கவிதாவுக்கு சாக்ஷி என்ற மகன், ஸ்ரத்தா என்ற மகள் என இரு பிள்ளைகள். 

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி உடல்நலக்குறைபாடு காரணமாக மும்பை கிர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் இருப்பதாக வெளியில் செய்தி பரவியது. ஆனால் அவரது குடும்பம் அதை ஆரம்பத்தில் மறுத்தது. இந்த நிலையில்தான் வினோத் கன்னா நேற்று (ஏப்ரல் 27) காலமானார். 

150 படங்களுக்கும் மேல் நடித்த ஒரு பிரபலம், ஒரே தொகுதியில் இருந்து பலமுறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி... போன்ற எந்த பாராட்டுக்களையும் தலைக்கு ஏற்றி கர்வம் கொள்ளாத அமைதியான மனிதரான வினோத் மறைந்தது உண்மையிலேயே மிகப்பெரிய இழப்புதான். 

வினோத் கன்னா அளித்த பழைய பேட்டி ஒன்று வெகு பிரபலம். ‘சினிமாவைவிட்டு விலகி ஆன்மிகத்தை நோக்கி போகிறேன்’ என்று அவர் அறிவித்த சமயத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி. இன்றைய சினிமா கலைஞர்கள் படிக்கவேண்டிய முக்கியமான பேட்டி. அதில் இருந்து சில பகுதிகள் மட்டும் இங்கே... 

“சினிமாவை விட்டு விலக என்ன காரணம்?”

“லட்சியத்தை எட்ட, கடுமையாகப் போராடுவோம். அப்போது நமக்கான ஒரு வாழ்க்கை இருக்கிறது என்ற நினைவே நமக்கு வருவதில்லை. அப்போது ஆன்மா ஏமாற்றப்பட்டு, தன் நிம்மதியை இழக்கிறது. இதுதான் என் வாழ்க்கையிலும் நடந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் இந்த முடிவு.”

“உங்கள் மனைவி, அப்பா என்ன சொன்னார்கள்?”

“ `பைத்தியக்காரன்' என்றார்கள். திட்டித்தீர்த்தார்கள். ‘இந்த இடத்துக்கு வர, நீ பட்ட கஷ்டங்கள் வீண். உன்னைச் சார்ந்தவர்களை வருத்தப்பட வைத்துவிட்டாய். லட்சக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றிவிட்டு
நீ என்ன மகிழ்ச்சியை அனுபவித்துவிடப்போகிறாய்?’ என்றார்கள்.”

“இந்த உயரத்தைத் தாண்டியும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இல்லையா?”

“சாதனைக்கும் எல்லை உண்டு. என் சாதனைக்கு இதுதான் எல்லை. இதற்குமேல் என்னால் சிந்திக்க முடியவில்லை. இந்தச் சூழல் என்னை நிம்மதியிழக்கச் செய்தது. நான் நிம்மதியைத் தேடிப் போகிறேன்.”

“இந்த முடிவுக்கு உங்கள் மனைவி கீதாஞ்சலியின் கோபம்தான் காரணமா?”

‘‘இல்லை, நான்தான் காரணம். அடுத்த பிறவியில் நான் ஒரு நடிகனானால் நிச்சயம் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். ஆம், ஒரே மனிதனால் இரு படகுகளில் பயணிக்க முடியாது. ஒருநாளில் 18 மணி நேரம் வேலைசெய்யும் என்னால், மனைவிக்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லை. பெண்களிடமும் உள்ள எதிர்பார்ப்புகள் அவளிடமும் இருக்கும்தானே! அதை நான் நிறைவேற்றவில்லை. அதனால் கீதா கோபக்காரியாகிவிட்டாள். என் குழந்தைகள்கூட திரையில் மட்டும்தான் என்னைப் பார்த்தார்கள். ‘நான்தான் உன் அப்பா’ என்று அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. மனைவி குடும்பத்தோடு வாழ நான் லாயக்கற்றவன்.”

ஆனால், ஐந்து ஆண்டுகள் ரஜ்னீஷ் ஆசிரமத்தில் இருந்துவிட்டு வந்த பிறகு கவிதா என்கிற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இறக்கும் வரை மனைவி, பிள்ளைகளோடு வினோத் கன்னா மகிழ்ச்சியாக வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.