Published:Updated:

இம்தியாஸ், வாழ்க்கையை மாற்றும் ஒரு பயணம்.. ஒரு ஆசீர்வாதம்! #HBD_ImtiazAli

இம்தியாஸ், வாழ்க்கையை மாற்றும் ஒரு பயணம்.. ஒரு ஆசீர்வாதம்! #HBD_ImtiazAli
இம்தியாஸ், வாழ்க்கையை மாற்றும் ஒரு பயணம்.. ஒரு ஆசீர்வாதம்! #HBD_ImtiazAli

இம்தியாஸ், வாழ்க்கையை மாற்றும் ஒரு பயணம்.. ஒரு ஆசீர்வாதம்! #HBD_ImtiazAli

ன்றாவது ஒரு மலையின் எழுச்சியை முழுவதும் பெற்றுக்கொண்டிருக்கீர்களா? அடிவானம் சிவப்பாகும் கணத்தைக் கண்டிருக்கிறீர்களா? ஒரே ஒரு நொடிப்பொழுதேனும் இவ்வுலகின் அத்தனை சங்கிலிகளையும் கழற்றி எறிந்து சுதந்திரமாகப் பறக்க விரும்பியிருக்கிறீர்களா?  இம்தியாஸ் அலி படங்களின் மிகப்பெரிய வசீகரம் அதன் 'meditative quality'தான்! ஒரு தியானத்தின் மௌனம் முழுப் படமெங்கும் ஊடாடும். அவரின் பிரியத்திற்குரிய கவிஞரும், அவர் அத்தனை படங்களுக்கும் ஆதார மையமாகவும் விளங்கும் ரூமியின் சிறப்பும் அதுவே. ஒரு பிரபஞ்சத்தைத் தனக்குள் ஒளித்துக்கொண்டு மென்மையாக நம்மைப்பார்த்து சிரிக்கும் ஒற்றை வரித்தத்துவங்கள் அவை! 

'ஸோச் நா தா'வில் தொடங்கி... பாலிவுட்டின் டெசி படங்களின் புது அடையாளமாக வந்த 'ஜப் வி மெட்'. இருவேறு காலங்களில் பயணிக்கும் காதலைக் கொண்டாடும் 'லவ் ஆஜ் கல்' என இந்தியாவே ரசிக்கும்  படங்களை இயக்கியிருந்தாலும், இம்தியாஸின் சினிமா என்பது பின்னாட்களில் அவர் எடுத்த மூன்று படங்களிருந்து ஆரம்பிக்கிறது!

'ராக்ஸ்டார்', 'ஹைவே', 'தமாஷா' இவற்றை ரூமி ட்ரைலாஜி எனச் சொல்லலாம். "சரி, தவறு என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு மைதானம் இருக்கிறது. அங்கு உன்னைச் சந்திப்பேன்!" - இது தான் ராக்ஸ்டாரின் உயிர்வரி.  

இதயம் உடையாமல் கலைஞன் உருவாவதில்லை என்பதைத் தன் வாழ்க்கைக்கான அறிவுரையாகக் கேட்கும் ஜோர்டான் தனக்கான துயரத்தை சம்பாதிக்க ஹீரை காதலிக்கிறான். அவள் மறுக்கும் பொழுது, தன் இதயம் உடையும்... சோகம் சூழும்... இசை பிறக்கும் என்று வந்தவன் அவள் மேல் பெருங்காதல் கொள்கிறான். ஒரு மீள முடியாத சுழல் போல் அந்தக் காதல் அவனை மாற்றுகிறது. இப்போது இதிலிருந்து வெளிவருவது என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை அவனால். திருமணமான பின்பும் ஹீரோடு தொடர்பில் இருக்கிறான்.  அவள் வழியே அவனுள் ஒரு மஹா இசைக்கலைஞன் எழுகிறான். காதல், பயணம், கோபம், காமம், தொழுகை, மயக்கம் என தன்னை ஆட்கொள்ளும் ஒவ்வொரு உணர்வையும் இசைப்படுத்துகிறான். 

அவனைப் பிரிந்த ஹீரின் உடல்நிலை மெல்ல மெல்ல அவளை அழிக்கிறது. நீர் படாது துவண்டிருக்கும்  செடியைப் போல் நோயில் தினம் கரையும் தன் உயிரின் மீட்சி ஜோர்டானிடம்தான் இருக்கிறது என்று நம்புகிறாள். அவனருகில் இருக்கும் நேரம் மட்டுமே அவள் மலர்ந்திருக்கிறாள்.  

இந்த இருவேறு மனப்போராட்டங்களையும், ஏக்கங்களையும், உணர்வுகளையும் கட்டிப்போடும் அசுரத்தனமான நம்பிக்கையாக ரஹ்மானின் இசை ஒலிக்கிறது. ரஹ்மானின் மிகச்சிறந்த படைப்புகளை 'ராக்ஸ்டார்' இல்லாமல் பட்டியலிடவே முடியாது. 'தில்சே'யின் காதலும், வன்முறையும் மோதும் அந்தத் தளத்தின் மேல் ஈர்ப்புவிசைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மந்திர தவத்தை இந்த ஆல்பத்தில் புரிந்திருப்பார். மூன்றே படங்களில்.. மணிரத்னம் - ரஹ்மான் தொட்ட உயரங்களுக்குப் போட்டியிடும் இம்தியாஸ் - ரஹ்மான் காம்போவின் இன்னொரு பெரும்பலம். கவிஞர் இர்ஷாத் கமில்! ரூமியின் கவிதைகளைப் படம் நெடுக அனாயசமாகப் பாடல்படுத்தியிருப்பார். 

"எங்கிருந்து என்னை கடத்தி வந்தாயோ... நான் அங்கு செல்ல விரும்பவில்லை! 

எங்கு நீ என்னை கூட்டிப்போகிறாயோ... அதிலும் எனக்கு எதிர்பார்ப்பில்லை!

ஆனால்... இந்தப் பயணம்... இவ்வாறே முடிவின்றி நீள விரும்புகிறேன்!"

என்றோ இழந்த தன்னை ஒரு பயணத்தில் மீண்டும் கண்டெடுக்கும் கணங்களின் தொகுப்பே  'ஹைவே'. என்னளவில் இம்தியாஸின் ஆகச்சிறந்த படைப்பும் இதுவே. இம்தியாஸின் உள்ளே இருக்கும் அந்த பிரயாணக் காதலனின் குரலாக இந்தியாவை... அதன் ஊர்களின்.. சாலைகளின்.. மரங்களின்... அதனூடாடும் வெளிச்சங்களின்.. கடக்கும் நொடிகளில் காதில் ஒலிக்கும் பாடல்களின்.. மலைகளின்.. புல்வெளிகளின்.. பேருந்துகளின்.. முகங்களின்.. தரிசனமாக மாற்றும் ஒரு பேரனுபவம் இது. 

இருவேறு கலாச்சாரங்களில், சமூக அமைப்புகளில் வளர்ந்த வீராவும், மஹாபீரும் ஒரே பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் இருவருமே தங்கள் பால்யத்தைத் தொலைத்திருக்கிறார்கள். அதை இப்போது ஒருவரில் ஒருவர் மீட்டெடுக்கிறார்கள். வீராவின் மேய்ப்பன் போல.. தந்தை போல.. நண்பன் போல.. அவள் பார்த்து வியக்கும் முதல் ஆணாக மஹாபீர் தெரிகிறான். தன் தாயின் பாடலை பாடும் வீரா மஹாபீரின் அழுக்கும், போராட்டமும் சூழ்ந்த வாழ்க்கையின் ஒரே அழகாக, தேவதையாக வருகிறாள். வீராவிற்கும் அவளை கடத்தி வரும் மஹாபீருக்கும் இடையே இருக்கும் உறவு பெயர்களுக்கு அப்பாற்பட்டு இயங்குகிறது. அதை புரிந்துகொள்ள வீரா விரும்பவில்லை. திரண்டோடும் நதியின் நடுவே இருக்கும் ஒற்றைப்பாறையில் அமர்ந்து தன்னையும், தன் வாழ்க்கை செல்லும் போக்கையும் எண்ணி வீரா சிரிப்பும் அழுகையுமாக வியக்கும் காட்சி.. மலையின் நடுவே, ஒற்றைக்குடில் ஒன்றில் உணவு சமைத்து, கண்மை இட்டுக்கொண்டு, தனக்கான வீடு ஒன்றை உருவாக்கித்தரும் வீராவை நெருங்க முடியாத தூரத்தில் விழுந்திருப்பவனாய் மஹாபீர் தன்னை உணர்ந்து உடையும் தருணம்.. இன்னும் எத்தனை எத்தனையோ கவித்துவங்களைப் படம் முழுக்கக் காட்சிமொழியாக்கிருப்பார்.  

"உன் சொந்த கதையை நீயே உருவாக்கு!" - இதுதான் 'தமாஷா'வின் தாரக மந்திரம்! 

கார்ப்பரேட் உலகின் ரோபோத்தனமான வாழ்வில் இயந்திரமான ஒருவன் தனக்குள் இன்னும் துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை உணரும் கதை. இந்தியாவின், மாறும் பொருளாதார, உலகமயமாக்கல் சூழலில் ஒரு இளைஞனின் உணர்வுகளுக்கு இந்த சமூகம் கொடுக்கும் மதிப்பீடுகள் என்ன? பள்ளியில்.. வீட்டில்.. அலுவலகத்தில்.. நண்பர்கள் மத்தியில்.. அவனுக்கான இடம் என்ன? விதிமுறைகளும், வரைமுறைகளும் என்ன? 

கதைகள் கேட்டே வளரும் வேத் பின்னாளில் தானும் ஒரு கதைசொல்லி என்பதை உணர்கிறான். அவனது கலையை அவன் தொட முடியாமல் அவனுக்கான சமூக அழுத்தங்கள் நிற்கின்றன. இந்த சூழ்நிலையில்.. ஒரு விடுமுறையில்.. கடல் கடந்து.. உலகின் வேறொரு மூலையில்.. கார்சிக்காவில்.. அவளைச் சந்திக்கிறான், தாரா! 

காமிக் கதைகளும், பயணங்களும், இயற்கையும் என தன் மறுபிரதியாக இருக்கும் இந்தப் பெண்ணிடம் அவன் பழகத் தொடங்குகிறான். அவன் மௌனங்களை.. புன்னகைகளை.. தயக்கங்களை.. அவள் புரிந்துகொள்கிறாள். பின் ஒருநாள் இருவரும் பிரிய.. போலி அறிமுகங்களைத் தவிர எதுவும் வேண்டாம் என்று நிர்பந்தத்தோடு தொடங்கிய உறவு அவனை பிரிந்து வந்த பிறகும் அவனை சுற்றியே இருக்கிறது. தன்னுள் முழுவதும் ஆக்கிரமித்திருக்கும் அவனை உணர்கிறாள். தாராவாக தீபிகா படுகோனின் உடல்மொழி, பதட்டம், கெஞ்சுதல், கண்ணீர், ஆத்மார்த்தமான சந்தோஷம் என அத்தனையும் உயிர்பெற்றிருக்கிறது. கார்சிக்காவில் டான் - மோனா என்று தங்களை அறிமுகம் செய்துகொண்டு பழகிப் பிரியும் இருவரும் இந்தியாவில் வேத் - தாராவாக மீண்டும் சந்திக்கிறார்கள். அந்த உலகின் சுதந்திரத்தை இந்த உலகில் இவர்களால் அடைய முடிந்ததா, வேதின் முகத்திரையை கழட்ட தாராவால் முடிந்ததா என்று நகரும் கதையில் ஒவ்வொரு காட்சியும் ரூமியின் ஆத்மாவை கொண்டிருக்கிறது.

இப்பொழுது ஷாருக்கானை வைத்து அவர் இயக்கியிருக்கும் 'ஜப் ஹாரி மெட் செஜல்' படத்தின் மையமும் ரூமியின் "நீ தேடிக்கொண்டிருப்பது உன்னை தேடிக்கொண்டிருக்கிறது" என்பதே!

இன்று அந்த மஹா ரசிகனின், வாழ்வின் வசீகரங்களை கொண்டாடும் கலைஞனின் பிறந்தநாள். இம்தியாஸ் கட்டாயம் தான் தினமும் பிறந்து கொண்டேதான் இருப்பதாய் உணர்வார்.  ராக்ஸ்டாரில் 'நாதான் பரிந்தே' பாடலின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்ததும் ரன்பீர் இம்தியாசை ஓடிவந்து கட்டி அணைக்கிறார். அவர் காலில் விழப்போக.. அவருக்கு முன் இம்தியாஸ் மண்டியிட்டு அவர் முன் விழ.. இருவரும் ஒருவருக்கொருவர் நன்றி சொல்லிக்கொள்கிறார்கள். ரன்பீரின் நடிப்புலக வாழ்வின், இம்தியாஸின் கலைப்பயணத்தின் மறக்க முடியாத ராக்ஸ்டாரின்.. இந்த நெகிழ்ச்சியான தருணத்தை 'தமாஷா'வில் பயன்படுத்தியிருப்பார். 

இறுதிக்காட்சியில் நாடக கலைஞனாக, கதைசொல்லியாக.. மேடையில்.. கைத்தட்டல்களுக்கு மத்தியில் நிற்கும் வேத் தாராவை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிறான். தன் வாழ்வில் அவளது அங்கத்தை அவன் உணர்கிறான். அங்கீகரிக்கிறான். அவனைத் தாரா ஆசீர்வதிக்கிறாள். என்னைப்பொறுத்தவரை அதுவே இம்தியாஸ்! வாழ்க்கையை மாற்றும் ஒரு பயணமாக.. ஒரு தொழுகையாக..  ஓர் ஆசீர்வாதமாக!
 

அடுத்த கட்டுரைக்கு