Published:Updated:

`யாருக்கு நாயகிகள் தேவையில்லையோ அவனே ரியல் ஹீரோ!' #HBDNawazuddinSiddiqui

நவாசுதீன்

'கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர்' வெற்றிக்குப் பிறகு நவாஸுதீனிடம் நிரப்பப்படாத காசோலைகள் நீட்டப்பட்டன. 250 தயாரிப்பாளர்கள் கால்ஷீட் கேட்டுக் காத்திருந்தனர். கோடிகளைக் கொட்டித்தரத் தயாராயிருந்தனர். ஆனால், நவாசுதீன் நிதானமாக இருந்தார்.

`யாருக்கு நாயகிகள் தேவையில்லையோ அவனே ரியல் ஹீரோ!' #HBDNawazuddinSiddiqui

'கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர்' வெற்றிக்குப் பிறகு நவாஸுதீனிடம் நிரப்பப்படாத காசோலைகள் நீட்டப்பட்டன. 250 தயாரிப்பாளர்கள் கால்ஷீட் கேட்டுக் காத்திருந்தனர். கோடிகளைக் கொட்டித்தரத் தயாராயிருந்தனர். ஆனால், நவாசுதீன் நிதானமாக இருந்தார்.

Published:Updated:
நவாசுதீன்
நவாசுதீனின் திரைப்பயணம் அசாத்தியமானது. வாரிசுகளாலும் சிபாரிசுகளாலும் ஆளப்படும் பாலிவுட்டில் தன் திறமையால் மட்டுமே முன்னேறி, தவிர்க்க முடியாத நாயகனாக எழுந்துவந்தவர் நவாசுதீன்.

பாலிவுட் சித்திரிப்பதைப்போல வட இந்தியர்கள் எல்லாம் சிக்ஸ்பேக் கான்களைப்போலவும், கபூர்களைப்போலவும், அராபிய முகவெட்டோடும், பளிச்சிடும் நிறத்தோடும் இருப்பதில்லை. எல்லோருக்கும் அத்தகைய கம்பீர உடலமைப்போ பளபளப்போ வாய்ப்பதுமில்லை. ஒடிசாவை தாண்டிவிட்டாலே இந்த மாற்றத்தைக் கவனிக்கலாம். பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் என வட இந்தியர்களின் உருவம் எளிமையானது.

அப்படி ஓர் ஏழை இந்தியனின் முகச்சாயலைக் கொண்டவர் நவாசுதீன் சித்திக். அதனாலேயே அவர் ஏற்கிற எளிய கதாபாத்திரங்கள் அசல் மனிதர்களை அச்சாகப் பிரதிபலிக்கின்றன. அவரால் எப்படிப்பட்ட வட இந்தியனையும் கண்முன் நிறுத்திவிட இயல்கிறது. `பேட்ட' திரைப்படத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கிற அந்தச் சிங்கார் சிங்கை நம் ரயில்நிலையங்களில் நிறையவே பார்க்க முடியும்.

நவாசுதீன்
நவாசுதீன்

நவாசுதீனின் திரைப்பயணம் அசாத்தியமானது. வாரிசுகளாலும் சிபாரிசுகளாலும் ஆளப்படும் பாலிவுட்டில் தன் திறமையால் மட்டுமே முன்னேறி, தவிர்க்க முடியாத நாயகனாக எழுந்து வந்தவர் நவாசுதின்.

நவாசுதீனை உருவாக்கிய ஆரம்ப 12 ஆண்டுகள் முக்கியமானவை. உத்தரப்பிரதேசத்தின் மிகச்சிறிய நகரமான புதானாவில் பிறந்து வளர்ந்தவர் நவாசுதீன். எட்டுப் பிள்ளைகள் கொண்ட பெரிய குடும்பத்தில் பிறந்தவர். வேதியியலில் பட்டப்படிப்பை முடித்தவர், சில காலம் கெமிஸ்டாகவும் வேலை பார்த்திருக்கிறார். அந்தச் சமயத்தில்தான் டெல்லிக்கு வேலைக்காக வருகிறார். அங்கே நாடகங்களில் ஆர்வம் ஏற்பட்டு தேசிய நாடகப்பள்ளியில் இணைந்து நடிப்பு கற்றுக்கொள்கிறார். சினிமா ஆர்வத்தில் மும்பைக்கே குடிபெயர்ந்தவர், சில டிவி சீரியல்களில் நடிக்கத்தொடங்கினார். 1999-ல் `சர்ப்ரோஷ்' படத்தில் ஒரு காட்சியில் தோன்றி பாலிவுட்டில் தன் பயணத்தைத் தொடங்கினார். அதற்குப் பிறகு 12 ஆண்டுகளுக்கு எத்தனையோ படங்கள், எத்தனையோ சின்னச் சின்ன பாத்திரங்கள்... ஆயிரம் பேரில் ஒருவனாக, கூட்டத்தில் தலைகாட்டுபவனாக... நாயகனின் நண்பனின் நண்பனாக எண்ணற்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி தலைகாட்டிய படங்களில் சில பி-கிரேட் படங்களும்கூட உண்டு எனச் சொல்லியிருக்கிறார் நவாசுதீன்.

``ஒரு ஷாட்தான் என்றாலும் அதையும் ஆர்வத்தோடு உள்வாங்கிக்கொண்டு மெனக்கெட்டு நடிப்பேன். கூலி கிடைத்தால்தான் கிடைக்கும். திரையில் நான் நடித்த காட்சி வந்தால்தான் வரும். அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன். ஏனோதானோ என்று ஒருநாளும் வேலை செய்வது எனக்குப் பிடிக்காது. அதனால்தான் என்னால் 12 ஆண்டுகள் தொடர்ந்து இயங்க முடிந்தது. இல்லையென்றால் எப்போதோ இனி நடிகனாக முடியாது என ஊருக்கே திரும்பியிருப்பேன்.''
நவாசுதீன்

செயல் எத்தனை சிறியதாகவும் இருக்கட்டும். அதை முழு ஈடுபாட்டுடன் செய்யும்போது அதை நேசிக்கத் தொடங்கிவிடுகிறோம். அதன் அசாத்தியமான நுணுக்கங்கள் கண்ணுக்குப் புலப்படத் தொடங்குகின்றன. நம்முடைய சிறிய செயலும்கூட ஒரு கல்வியாக மாறும் அதிசயம் நிகழ்வது அந்த நொடியில்தான். நவாசுதீன் செய்தது அதைத்தான்.

நவாசுதீன்
நவாசுதீன்

`DEV D' படத்தில் `எமோஷனல் அட்டாச்யார்' பாடலில் தோன்றியிருந்தார். மிகச்சிறிய கவனம் கிடைத்தது அப்போதுதான். அதற்குப் பிறகு 'பீப்ளி லைவ்'வின் ராகேஷ்கபூர் பாத்திரம்தான் நவாசுதீனுக்குக் கிடைத்த முதல் முழுநீளத் திரைப்படப்பாத்திரம். 12 ஆண்டுக்கால தத்தளிப்பையும் அந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருப்பார். தன் வாழ்க்கையை மாற்றப்போகும் ஒரு செய்தியின் மூலம் எப்படியாவது முன்னேறிவிடத் துடித்து இறுதியில் செத்துப்போகும் உள்ளூர் ரிப்போர்ட்டர் இளைஞன் ராகேஷ்கபூரை கண்முன் நிறுத்தியிருப்பார். பதற்றமும் பரபரப்பும் வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்கிற பரிதவிப்பும்கொண்ட பாத்திரம்.

'கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர்' நவாசுதீனின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. அதிக அழகெல்லாம் இல்லாத அந்தப் புதிய இளைஞனிடம் இருந்த ஈர்ப்பு, அவன் வெளிப்படுத்திய அசாத்திய நடிப்பாற்றல் இந்தியாவையே பிரமிக்கச் செய்தது.

அன்றைய சூழலில் நவாசுதீனின் வாழ்க்கையும் அப்படித்தான் இருந்தது. முதல்முறையாக ஒரு உருப்படியான கேரக்டர். அதைச் சிறப்பாகச் செய்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற துடிப்பை அப்படத்தில் காணலாம். அதற்குப் பிறகு 'கஹானி'யிலும் 'பான்சிங் தோமர்' படத்திலும்கூட சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தியிருந்தார் நவாசுதின். ஆனால், அவர் நினைத்த அந்த மெய்யான வெளிச்சத்தை இயக்குநர் அனுராக் காஷ்யப் கொண்டுவந்தார்.

'கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர்' நவாசுதீனின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. அதிக அழகெல்லாம் இல்லாத அந்தப் புதிய இளைஞனிடம் இருந்த ஈர்ப்பு, அவன் வெளிப்படுத்திய அசாத்திய நடிப்பாற்றல் இந்தியாவையே பிரமிக்கச் செய்தது. இந்திப் படங்களைப் பார்த்துப் பார்த்து அதையெல்லாம் கிறுக்கனைப்போல செய்துபார்க்கிற ஃபைசல்கானாக ஆரம்பித்து... துரோகங்களின் மீது பயணித்து அவன் அடைகிற வளர்ச்சியும் அவனுக்குள் அது உண்டாக்கும் மாற்றங்களையும் பழிவாங்கும் வெறியும் என ஃபைசலின் பயணத்தை நவாசுதீனைவிடவும் யாரும் அத்தனை வேறுபாடுகளோடு நடித்துக்காட்டியிருக்க முடியாது.

நவாசுதீன்
நவாசுதீன்

'கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர்' படத்தின் வெற்றி அதுவரை இல்லாத அளவுக்கு வாய்ப்புகளை நவாசுதீனுக்கு அள்ளித்தந்தது. பல ஆண்டு காத்திருப்புக்குக் கிடைக்கிற வெற்றி பதற்றமான மனநிலையை உருவாக்கிவிடும். முடிவெடுப்பதில் திண்டாடிவிடுவோம். சிறந்த முடிவை எடுக்காத பலரும் ஓர் இரவு ஒன்டர்களா தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொண்ட எத்தனையோ கதைகளைக் கடந்திருப்போம். 'கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர்' வெற்றிக்குப் பிறகு நவாசுதீனிடம் நிரப்பப்படாத காசோலைகள் நீட்டப்பட்டன. 250 தயாரிப்பாளர்கள் கால்ஷீட் கேட்டுக் காத்திருந்தனர். கோடிகளைக் கொட்டித்தரத் தயாராயிருந்தனர். ஆனால், நவாசுதீன் நிதானமாக இருந்தார். சிறிய வித்தியாசமான கதைகளைக்கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார்.

எந்தக் கலைஞனுக்கும் பணத்தைவிட படைப்பு சுதந்திரம் முக்கியமானது.

``கேங்ஸ் ஆப் வாசேப்பூர் எனக்கு அளித்த பெரியகொடை எது தெரியுமா... நான் என் விருப்பப்படி திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்க முடிகிற வலிமையை அது கொடுத்தது... எதற்காகவும் அதை மட்டும் இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.''
நவாசுதீன்

அமீர் கான் நடித்த 'தலாஷ்' படத்தில் சிறிய பாத்திரம்தான். ஆனால், அதிலும் தனித்துவம் காட்டியிருப்பார் நவாசுதீன். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிஸ். லவ்லியில் செக்ஸ் படமெடுக்கிற நாயகனாக நடிக்கத் துணிந்தார். எல்லாமே 'கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர்' வெற்றிக்குப் பிறகுதான். வாய்ப்புகளைத் தேடாமல் நல்ல பாத்திரங்களைத் தேடியே அவர் காத்திருந்தார். அதற்கு இன்னோர் உதாரணம் 'லன்ச்பாக்ஸ்.'

'லன்ச்பாக்ஸ்' படத்தில் வருகிற`சாய்க்' என்கிற அந்தக் கதாபாத்திரம் வித்தியாசமானது. நடிப்பதற்கும் சிரமமானது. பெற்றோர்கள் இல்லாமல் அநாதையாக வளர்ந்த ஒருவன், அடித்துப் பிடித்து மேலேறி ஒருவேலைக்குச் சேருகிறான். அதிக திறமைகள் அற்ற அவன் சமூகத்தில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள முயற்சி செய்கிறான். தன்னுடைய திறமையின்மையை உயரதிகாரியின் மீதான போலி விஸ்வாசத்தால் மறைக்க முயல்கிற அவனுக்கும் படத்தின் நாயகனும் அவனுடைய உயரதிகாரி இர்ஃபானுக்கும் இடையே மலரும் அந்த நட்பு காவியத்தன்மைகொண்டது. அன்றாடம் பார்க்கிற, ஆனால் அதிகமும் திரையில் பார்த்திடாத (முன்மாதிரிகள் இல்லாத) பாத்திரம் சாய்க்குடையது. அந்தப் பாத்திரத்தில் இர்ஃபான் கான் என்கிற நடிப்பு ராட்சசனோடு போட்டி போட்டு நடித்திருப்பார் நவாசுதீன். எண்ணற்ற விருதுகளை வென்றுகொடுத்த மறக்க முடியாத பாத்திரம் அது. அந்தப் படத்தில் நவாசுதின் பேசிய ``சிலநேரங்களில் தவறான ரயில்கள்தான் நம்மை சரியான ஸ்டேஷனுக்குக் கொண்டு போகும்'' என்கிற வசனம் மறக்க முடியாத ஒன்று.

நவாசுதீன்
நவாசுதீன்

தன் மனைவியை இழந்து அந்தக் கோபத்தில் ஒரு மலையை உடைக்கக் கிளம்பிய `மாஞ்சி'யாக, கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாத சீரியல் கில்லர் ராமன் ராகவாக, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தாய்க்கு உதவும் டிடெக்டிவ் டீகேவாக, அனைத்தையும் இழந்து சாவுக்குக் காத்திருக்கும் பழைய ரௌடி லியாக்காக என எத்தனையோ மறக்க முடியாத பாத்திரங்களை உருவாக்கிக்கொண்டே போகிறார் நவாசுதீன். ஆனால், எதுவுமே ஒன்றுபோல இன்னொன்று இருப்பதில்லை. அதில் உச்சமான ஒன்று மண்ட்டோ. எழுத்தாளர் மண்ட்டோவை யாரும் நேரில் கண்டதில்லை. அவருடைய நடை உடை பற்றிதெரியாது. ஆனால், நவாசுதீனைத் திரையில் பார்த்த யாருமே அது மண்ட்டோதான் என்று நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். உலகத்தரமிக்கக் கதைகளை எழுதிய மண்ட்டோவின் பாத்திரத்தில் நடிக்கப் பணமேதும் பெற்றுக்கொள்ளவில்லை நவாசுதீன். கடந்த ஆண்டு வெளியான தாக்கரே பயோகிராஃபியிலும் பிரமாதமாக நடித்திருந்தார் நவாசுதீன் சித்திக்.

``எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதன் உணர்வுகளைத்தான் முதலில் தெரிந்துகொள்வேன். அது தானாகவே உடலசைவுகளை உருவாக்கிவிடும். அதுதான் என்னுடைய மெத்தட் ஆஃப் ஆக்டிங்.''
நவாசுதீன்

''என்னதான் நவாசுதீனும் இர்ஃபான் கானும் நாயகர்களாக நடித்தாலும் அவர்கள் இன்னமும் பாலிவுட் ரசிகர்களால் ஒரு நாயக அந்தஸ்தைப் பெறமுடியவில்லையே'' என்கிற கேள்வி ஒருபேட்டியில் நவாசுதீனிடம் முன்வைக்கப்பட்டது.

நவாசுதீன் சிரித்துக்கொண்டார். ``பாலிவுட் திரைப்படங்களில் யாருக்குக் கதாநாயகி இருக்கிறாரோ அவர்தான் நாயகன்... ஆனால் வாழ்க்கையில் எவன் தனக்கு முன்னால் இருக்கிற கடினமான தடைகளைத் தாண்டி முன்னேறுகிறானோ அவன்தானே நாயகன்'' என்றார். அப்படிப்பட்ட ஒரு அசல் நாயகன் நவாசுதீன்.

நவாசுதீன்
நவாசுதீன்

நவாசுதீன் எதிர்கொள்ளும் தடைகள் அவர் ஏற்கும் கனமான உணர்வுகளை எதிர்கொள்கிற கதாபாத்திரங்களே. அந்தத் தடைகளை அவரே பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கிறார். அப்படித் தேர்ந்தெடுக்கிற பாத்திரங்கள் எல்லாம் முந்தையதை விடவும் அதிக கடினமான ஒன்றாக இருப்பதையே அவர் விரும்புகிறார்!