Published:Updated:

அமிதாப் வாழ்வில் இரண்டு பாடங்கள்!

Abhishek
பிரீமியம் ஸ்டோரி
News
Abhishek

அறுபதுகளின் தொடக்கக்காலம். இந்தித் திரைப்பட உலகம் ஒரு புதிய பரிமாணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

‘முகல் ஹி அசம்’ போன்ற வரலாற்று பிரமாண்டங்களும் ‘லவ் இன் ஷிம்லா’ போன்ற ரொமான்டிக் படங்களும் பாலிவுட்டை ஆக்கிரமித்திருந்தன. குருதத், திலிப்குமார் போன்ற ஜாம்பவான்கள் அப்பொழுது கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தனர்.

ஷோலே படத்தில்
ஷோலே படத்தில்

அந்த இளைஞனுக்கு வயது இருபது ப்ளஸ் இருக்கலாம். ஆறு அடி நான்கு அங்குலம் உயரத்தில் நெடுநெடுவென வளர்ந்திருந்த குச்சியான உடல்வாகு, மாநிறம், கூர்மையான நாசி, அடர்ந்து வளர்ந்த கேசம், கண்களில் சாதித்துவிடும் ஏக்கம் - இந்தத் தோற்றத்தில் சினிமா கம்பெனிகளில் வாய்ப்பு கேட்டு ஏறி இறங்கிக்கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

ஆனாலும் பார்ப்பவர்கள் அனைவரும், ‘‘உனக்கெல்லாம் எதுக்கு இந்த ஆசை?’’ என இகழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அதற்கு அந்த இளைஞன் ஒரு புன்னகையைப் பதிலாகக் கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுவான்.

அவன் தாயாருக்குப் பிள்ளையின் மீது அதீத பாசம். அவனது கலைத்தாகத்திற்கு அம்மா தடைபோடவில்லை. ஏனெனில் தாயாருக்கும் நாடகங்களில் நடிக்க ஆர்வம் இருந்தது.இருப்பினும் கணவர் ஒரு கட்டுப்பாடான பேராசிரியர் என்பதால் அவருக்கு சேவையாற்றுவதே போதும் என்று இருந்துவிட்டார். ஒரு நன்னாளில் தன் பிள்ளையின் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காண்பித்தார் அம்மா. “சினிமாவில் ஜெயிக்க சுக்கிரனின் அனுக்ரகம் அவசியம். உங்கள் பிள்ளைக்கு அது இல்லை. சினிமாவெல்லாம் இவனுக்கு சரிப்பட்டு வராது!” என உதட்டைப் பிதுக்கியபடி கட்டை மூடினார் ஜோதிடர்.

அமிதாப் வாழ்வில் இரண்டு பாடங்கள்!

ஆனால் அந்த இளைஞனுக்கோ நம்பிக்கை துளியும் குறையவில்லை. தனது பலம் மற்றும் பலவீனத்தை ஆய்வு செய்தான். இந்தத் தோற்றத்திற்கு உடனடியாக வாய்ப்பு கிடைக்காது. ஆனால் அவன் குரல் மீது எல்லோருக்கும் ஒரு ஈர்ப்பு இருந்ததை உணர்ந்திருந்தான். ‘தம்பி உன்னோட குரல் நல்லா இருக்கு, டப்பிங் பேச வறீயா?’ என்று நிறைய பேர் கேட்டிருந்தார்கள். சினிமாவில் நுழையவேண்டும். அதற்கு எந்த வாசலில் நுழைந்தால் என்ன?

சின்னச் சின்னக் கதாபாத்திரங்களுக்குப் பின்னணிக் குரல் பேசச்தொடங்கினார். வேற்று உருவத்திற்குத் தன் குரல் குழைந்து குழைந்து நடிப்பதைக் கண்டு ஆனந்தமும் உற்சாகமும் அடைந்தார். சத்யஜித் ரே, மிருணாள் சென் போன்ற ஆளுமைகள் இவரின் குரல் வலிமையைக் கவனிக்கத் தொடங்கினார்கள். பின்னர் வந்தது திரையில் தோன்றும் வாய்ப்பு. கான் விருது பெற்ற இந்திப்பட இயக்குநர் குவாஜா அகமது அப்பாஸின் ‘சாத் இந்துஸ்தானி’யில் ஏழு பேரில் ஒருவராக முகம் காட்டினார். 1973-ல் ஜஞ்ஜீர் எனும் படத்தில் கதாநாயகனாகத் தோன்றி நடிப்பில் உச்சம் தொட்டார். புராணம், காதல் என்ற இரட்டைத்தளங்களில் மட்டுமே இயங்கிகொண்டிருந்த இந்திப் படவுலகை கமர்ஷியல் தளத்திற்குக் கைபிடித்து அழைத்துச்சென்றது அந்தப் படம். அன்று தொடங்கிய அவரின் வெற்றி ஆட்டம் இன்று பொன்விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஆம்! இந்திய சினிமாவின் பிக்பாஸ் அமிதாப் பச்சன்தான் அந்த இளைஞர்.

1942 அக்டோபர் 11 ஆம் தேதி அலகாபாத்தில் கல்லூரிப் பேராசிரியரும் கவிஞருமான ஹன்வஸ்ராய் பச்சன் மற்றும் தேஜ் பச்சனுக்கு மூத்தமகனாகப் பிறந்து இப்போது 77 வயதைக் கடக்கும் அமிதாப் வாழ்க்கையிலிருந்து தன்னம்பிக்கை பெற, உற்சாகம் பெற, வழிகாட்டுதல் பெற எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.

1973-ல் ஜஞ்ஜீர் வெற்றிக்கு முன்பு பன்னிரண்டு படங்களில் தலைகாட்டியிருந்தார். அத்தனையும் பிளாப். பாம்பே டு கோவா, ஆனந்த் என்ற இரண்டு படங்கள் மட்டும் ஏதோ சுமாராக ஓடின. 1975-ல் ரமேஷ் சிப்பி இயக்கத்தில் ஷோலே, யாஷ் சோப்ரா இயக்கத்தில் தீவார் என அவர் நடித்த படங்கள் வெற்றிபெற்று அந்த ஒல்லிபிச்சான் நடிகனை ‘ஆங்ரி யங் மேன்’ என்று உலகமே கொண்டாடின. அன்றைய தேதிக்கு இந்தியாவின் மிகப்பெரிய வசூலாக அமைந்தது ஷோலே. அது படமாக்கப்பட்ட கர்நாடகாவின் ராம்நகர் மலைப்பகுதி இன்று சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. ‘‘அமிதாப்ஜி இங்கதான் டான்ஸ் பண்ணினார்... இங்குதான் பைட் பண்ணினார்’’ என மூன்றாவது தலைமுறையும் செல்ஃபி எடுத்து அப்லோடு செய்துகொண்டிருக்கிறது.

அதற்கடுத்த ஐந்தாண்டுகளில் விதவிதமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தார் அமிதாப். ‘ஜஞ்ஜீர்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ஜெயா பச்சனைக் கரம்பிடித்தார். இந்த இடத்தில் ஒரு குட்டி ப்ளாஷ்பேக்.

அமிதாப் வாழ்வில் இரண்டு பாடங்கள்!

அமிதாப் - ஜெயா காதல் எல்லாக் காதல் போன்றே கண்டதும் விழுந்தேன் காதல் வகை சார்ந்தது. ‘குட்டீ’ (Guddi) படத்தின் இயக்குநர் ஹிரிகேஷ் முகர்ஜியைப் பார்க்க படப்படிப்புத் தளத்திற்கு வருகிறார் அமிதாப். அங்கு படத்தின் நாயகி ஜெயாவைப் பார்க்கிறார். ஜெயாவும் அவரைப் பார்க்க இருவருக்குள்ளும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறக்கின்றன. போக, ஜெயா, அமிதாப் அப்பாவின் வாசகி வேறு. பச்சக்கென்று இருவருக்குள்ளும் நட்பு ஒட்டிக்கொள்கிறது. பிறகு எங்கெல்லாம் ஜெயாவின் படப்பிடிப்பு நடைபெறுகிறதோ அங்கெல்லாம் வட்டமிடத்தொடங்கினார் அமிதாப். ‘இவ்வளவு சிரமப்பட்டு நீங்கள் காதல் செய்யவேண்டாமே’ என இயற்கை முடிவு செய்ததோ என்னவோ, அடுத்து ஜெயாவின் படத்தில் நாயகனாக ஒப்பந்தமானார் அமிதாப் பச்சன். அதுதான் ‘ஜஞ்ஜீர்.’ படத்தின் வெற்றியை வெளிநாட்டில் இருவரும் ஜோடியாகக் கொண்டாடுவதாக இருந்தார்கள். ஆனால் கண்டிப்பான அமிதாப்பின் அப்பா, ‘திருமணமாகாமல் ஜோடியாக வெளிநாடு செல்வது தவறு’ என இறுக்கிப்பிடிக்க, ஜெயாவை மணந்துகொண்டார் அமிதாப். நிழல் ஜோடி நிஜ ஜோடியானதைக் கண்டு மகிழ்ந்த ரசிகர்கள், அடுத்தடுத்து அவர்கள் ஜோடியாக நடித்த படங்களையெல்லாம் கொண்டாடித் தீர்த்தார்கள்.

படிக்கப் படிக்க, வெற்றிகளை மட்டுமே சுவைத்த மனிதன் அமிதாப் என்ற எண்ணம் வருகிறதா? அமிதாப்பைப் போல உச்சம் தொட்டு, பின் தோல்வியில் வீழ்ந்து, அதன்பின் அங்கிருந்து வீறுகொண்டெழுந்தவர்கள் இந்திய சினிமாவில் சொற்பம். 80களில் மிகப்பரபரப்பான நடிகராகக் கோலோச்சிக்கொண்டிருந்தபோது ஒரு விபத்து நேர்ந்தது. ‘கூலி’ படத்திற்காக மேலிருந்து ஒரு பெஞ்சைத் தாண்டி பல்டி அடிக்கவேண்டும். ‘ஸ்டன்ட் நடிகர்கள் செய்தால் சரியாக இருக்கும்’ என்றார் இயக்குநர் மன்மோகன் தேசாய். ஆனால் அமிதாப், ‘இதைவிட ரிஸ்க்கான ஸ்டன்ட் எல்லாம் செய்துவிட்டேன்’ என நம்பிக்கையுடன் களமிறங்கினார். நம்பிக்கை அன்று பொய்த்துப்போனது. இலக்கு தவறி டேபிளைத் தாண்டி விழவேண்டியவர் டேபிளின் விளிம்பில் விழ அதன் கூரான பகுதி நடுவயிற்றில் இறங்கி கல்லீரல் வரை ஊடுருவிp பெரும் ஆபத்தை ஏற்படுத்தியது. நீண்டகாலம் மருத்துவமனையில் இருந்த அமிதாப் உயிர் பிழைத்தது அதிசயம். படத்தில் கதைப்படி நாயகன் இறக்கவேண்டும். இந்த நிஜ அனுபவத்தை வைத்து நாயகன் உயிருடன் இருப்பதாக மாற்றி அமைத்தார் மன்மோகன் தேசாய். அந்த விபத்தே படத்திற்கு பெரும் பப்ளிசிட்டியாக அமைய, பெருவெற்றி பெற்றது ‘கூலி.’ இன்றைய தேதிக்கு வெறும் 25 சதவிகிதம் கல்லீரல் செயல்பாட்டுடன் வாழ்ந்துவருவதாக ஒரு நேர்காணலில் கூறினார் அமிதாப்.

சினிமா வாழ்க்கையில் வெற்றிகள் ஈட்டினால் அரசியல் நாடி வருவது இந்திய இயல்பு. அமிதாப்பிற்கும் இந்திரா காந்தி குடும்பத்திற்கும் நெருங்கிய நட்பு உண்டு. இந்திரா மறைவுக்குப் பின்னர் அரசியலுக்கு வந்த ராஜிவ்காந்தி, அமிதாப் போன்ற வசீகர மனிதர்கள் காங்கிரஸில் இருந்தால் சிறப்பு எனக் கருதி அலகாபாத் தொகுதியில் அமிதாப்பைப் போட்டியிட வைத்தார். அந்தத் தேர்தலில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று மக்கள் பிரதிநிதியானார் அமிதாப்.

சில காரணங்களால் மூன்று ஆண்டுகளிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார் அமிதாப். இருப்பினும் விடாது கருப்பாக அன்றைய போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் அமிதாப்பின் பெயரும் சிக்கி சர்ச்சைக்குள்ளானது. நீதிமன்றம் சென்று ‘மிஸ்டர் கிளீன்’ சான்றோடு வெளிவரப் போராட வேண்டியிருந்தது அமிதாப்பிற்கு. சமீபத்தில் பனாமா பேப்பர்களிலும் அவர் பெயர் கிசுகிசுக்கப்பட்டது. ‘இந்தியா தவிர வேறு எங்கும் என் முதலீடு இல்லை’ என்று தன்பக்க நியாயம் சொன்னார் அமிதாப்.

அமிதாப்பின் துன்பகாலங்கள் இத்துடன் முடியவில்லை. அடுத்து சொந்த நிறுவனத்தின் ரூபத்தில் வந்தது. அரசியலுக்குச் சென்று திரும்பிய பிறகு அவர் நடித்த படங்கள் பெரும் வெற்றிபெறவில்லை. 1992 மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான ‘இன்சனியாத்’ படுதோல்வி அடைய அதற்குப் பின்னர் சுமார் ஐந்து ஆண்டுகள் சரியான வாய்ப்புகள் இன்றி வீட்டிலேயே இருந்தார். வழக்கமான கிளிஷே பாத்திரங்கள் இனி கைகொடுக்காது என்று உணர்ந்து புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். ஆனால் யாரும் அவரை அழைக்கவில்லை . இது உலக இயல்புதானே. கொண்டாடினால் தலையில் வைத்துக்கொண்டாடும். தள்ளினால் கீழே தள்ளி மிதிக்கும். இந்த நேரத்தில் யாரும் எடுக்கத் துணியாத ரிஸ்கை எடுக்கத் துணிந்தார் அமிதாப். ‘நாமே ஏன் ஒரு பொழுதுபோக்கு நிறுவனத்தைத் தொடங்கக் கூடாது?’ என யோசித்தார். அதிலும் தோல்வியே! அவர் ஆரம்பித்த ஏபிசிஎல் கார்ப்பரேஷன் தயாரித்த ‘ம்ரித்யுதத்தா’ படம் அட்டர் பிளாப். அதற்கு முன்பு பெங்களூரில் நடந்த உலக அழகிப் போட்டியிலும் ஏபிசிஎல் பெரும் முதலீடு செய்திருந்தது. அதுவும் நஷ்டத்தில் முடிந்தது. தொடர் தோல்விகளால் நிதி நெருக்கடிக்குள்ளானார். அவர் உயிருக்கு உயிராக நேசித்த, ஒருகாலத்தில் மும்பையின் அடையாளமாகக் கொண்டாடப்பட்ட பிரதிக்‌ஷா பங்களா உட்பட எல்லாச் சொத்துகளும் ஏலத்துக்கு வந்தன. ‘கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், எப்படியாவது மீட்டுக்கொள்கிறேன்’ என்று வங்கியிடம் கெஞ்சினார் அமிதாப். ஏறக்குறைய நடுரோட்டிற்கு வந்துவிட்டது வாழ்க்கை. ஆனால் அதிலிருந்தும் மீண்டுவந்தார் அவர். அதுதான் அமிதாப்!

குடும்பத்துடன்
குடும்பத்துடன்

நாம் சராசரியாக ரிட்டையர்டு ஆகும் 60 வயதில் அடுத்த இன்னிங்ஸைத் தொடங்கினார் அமிதாப். 2000-ம் ஆண்டில் யாஷ் சோப்ராவின் மகன் ஆதித்ய சோப்ராவின் நடிப்பில் மொகப்பிதீன் எனும் படத்தில் தனது வயதுக்கேற்ற வேடத்தில் மீண்டும் அடுத்த சுற்றை ஆரம்பித்தார். படம் சூப்பர் ஹிட்.

‘‘நான் வந்துட்டேன்னு சொல்லு! முப்பது வருஷத்துக்கு முன்னாடி இந்தப் பாலிவுட் பிக் பி எப்படி வந்தேனோ அதேபோல வந்திருக்கேன்னு சொல்லு’’ என்பதுபோல் இருந்தது அந்த வெற்றி. இழந்த பொருளாதாரத்தை, தன் மதிப்பை மீட்க வேண்டும். இதுமட்டும்தான் அவர் மனதிலிருந்தது. காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிகொள்ளத் தயாரானவர் ‘கோன் பனேகா குரோர்பதி’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்த ஒப்புக்கொண்டார். அமிதாப்போடு சரிசமமாய் அமர்ந்து உரையாட உலகமே முட்டி மோதியது. ‘சினிமாவின் உச்ச நட்சத்திரம் டிவியில் தோன்றுவது மதிப்புக்குறைவு’ என அதுவரை சொல்லிக்கொண்டிருந்த இந்திய சினிமாக்காரர்களுக்கு அமிதாப் ஒரு புதிய பாதையைக் காட்டினார். அந்தப் பாதையில் இன்று பல முன்னணி நடிகர்கள் பயணிக்கிறார்கள்.. அன்று அமிதாப் வாங்கிய சம்பளத்தின் இன்றைய மதிப்பை இப்போதும் யாராலும் தொடமுடியவில்லை. ‘சுக்கிரன் நீச்சம், இவர் வேலைக்காக மாட்டார்’ எனச் சொன்ன ஜோதிடத்தைப் பொய்யாக்கி, உச்சம் தொட்டவர்.

பணம், புகழ் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார் அமிதாப். முதல் படமான ‘சாத் இந்துஸ்தானி’யில் தேசிய விருது, பிரான்ஸ் தேசத்தின் உயரிய விருதான ‘கிங் ஆப் ஹானர்’ விருது, நம்மூரின் தேசிய விருதுகள், பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண் என எக்கச்சக்க விருதுகள். சமீபத்திய வரவு, தாதாசாகேப் பால்கே விருது.

அமிதாப் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் முன்னேறத் துடிப்பவர்களுக்கான பாடம் என்றால், தன் வயதுக்கேற்ற பொருத்தமான வேடங்களை அமிதாப் ஏற்று நடிக்கத்தொடங்கியது இந்திய நடிகர்கள் அனைவருக்குமான பாடம்.