கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

உறைந்த வசீகரப் புன்னகை!

ரிஷி கபூர்
பிரீமியம் ஸ்டோரி
News
ரிஷி கபூர்

குணச்சித்திர நடிகராகப் பல படங்களுக்கு மைலேஜைக் கூட்டினார். ‘தோ தோனி சார்’, ‘கபூர் அண்டு சன்ஸ்’ படங்களுக்கு ஃபிலிம்ஃபேர் விருதுகள் வென்றார்.

பாபி. 21 வயது ரிஷி கபூருக்கு ஹீரோவாக முதல் படம். இந்தியா முழுக்க, குறிப்பாகத் தென்னிந்தியாவிலும் பிளாக்பஸ்டர். `பாபி காலர்’ சட்டைகள்தான் அக்கால இளைஞர்களின் டிரெண்டி காஸ்டியூம். அதில் ஒரு பாடல். ‘மெய்ன் ஷயர் தோ நஹீன்’ (நான் ஒன்றும் கவிஞனல்லன்).

ஆம், அவர் கவிஞன் எல்லாம் இல்லைதான். ஆனால், அதன் பிறகு மூன்று தசாப்தங்கள் வசீகரித்த பெரும்பாலான பாலிவுட் ஹிட் மெலடிகளுக்கு அவர்தான் விலாசம். வசீகர முகத்துக்குச் சொந்தக்காரர் ரிஷி கபூர்.

இர்ஃபான் கான் இறந்த சோகத்திலிருந்தே மீண்டிராத பாலிவுட், அடுத்த நாளே மாபெரும் ஆளுமை ரிஷி கபூரையும் இழந்திருக்கிறது. பிக் பி அமிதாப் ட்விட்டரில் கதறியிருக்கிறார். ஏனென்றால், ரிஷி கபூரை ரசிக்காமல், அவர் திரை எங்கும் பரவச் செய்யும் அந்த வசீகரத்தில் லயிக்காமல் யாரும் தப்பித்துவிட முடியாது. சந்தேகம் வேண்டாம். ரிஷி சில்வர் ஸ்பூனுடன் பிறந்தவர்தான். அப்பா ராஜ் கபூர் இயக்குநர்& தயாரிப்பாளர். 1973-ல் நடிக்கத் தொடங்கிய அவர் கிட்டத்தட்ட 2000-ம் ஆண்டுக்குள் 90 படங்களுக்கும் மேலாகக் கதாநாயகனாகவே வலம் வந்தார். ‘கேல் கேல் மேன்’, ‘கபி கபி’, ‘அமர் அக்பர் ஆண்டனி’, ‘கர்ஸ்’, கமலுடன் ‘சாகர்’, ‘சாந்தினி’ போன்ற கவனம் ஈர்க்கும் படங்களைச் செய்தார்.

அதன்பிறகு, குணச்சித்திர நடிகராகப் பல படங்களுக்கு மைலேஜைக் கூட்டினார். ‘தோ தோனி சார்’, ‘கபூர் அண்டு சன்ஸ்’ படங்களுக்கு ஃபிலிம்ஃபேர் விருதுகள் வென்றார். இம்தியாஸ் அலியின் ‘லவ் ஆஜ் கல்’(2009) படத்தில் அந்தக் காலத்துக் காதலை நினைவுகூரும் வீர் சிங்க், ‘அக்னிபாத்’தில் டான், ‘102 நாட் அவுட்’டில் 102 வயது அப்பா அமிதாப்புக்கு 76 வயது மகன், அனுபவ் சின்ஹாவின் ‘முல்க்’கில் வக்கீல் முரத் அலி முகமத் என நடிப்பில் பல பரிமாணங்கள் காட்டினார். வெளிப்படையாகப் பேசுகிறேன் எனப் பல ட்வீட்கள் போட்டு அவ்வப்போது எல்லோரிடமும் வாங்கியும் கட்டிக்கொள்வார். சக நடிகர்களான டிம்பிள் கபாடியாவும், அக்ஷய் குமாரும் சும்மாதான் இருங்களேன் எனச் சொல்லவே செய்தார்கள். அதையும் ட்வீட் போட்டுச் சிரித்திருக்கிறார்.

ரிஷியின் மகன் ரன்பீர் கபூர் தன் இரண்டாவது படத்தில் சாக்லெட் பாயாக ஸ்கோர் செய்யத் தேவைப்பட்டது ரிஷி கபூரின் ‘பச்னா ஏ ஹசீனோ’ (பெண்களே ஜாக்கிரதை... நான் வந்துவிட்டேன்) பாடல்தான். லைக்ஸ் வாங்க ரீமிக்ஸில் ரன்பீர்தான் உழைப்பைக் கொட்டி நடனமாட வேண்டியிருந்தது. ரிஷி கபூர் பழைய பாடலில் வெறும் வெள்ளை டிஸ்கோ உடையில் ஸ்டைலாக நடந்து வந்தே, ஹார்ட்டின்களை அள்ளியிருப்பார்.

கபூர் குடும்பம் விடுத்த இரங்கல் செய்தியில் “ரிஷி கபூரைப் புன்னகை பூக்கும் முகத்துடன்தான் நாம் நினைவுகூர வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்கள். சொல்லவே வேண்டாம். அவர் அப்படிதான் நினைவுகூரப்படுவார். சென்று வாருங்கள் ரிஷி.