பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அதன் எம்.பி.யுமான ராகவ் சத்தாவுடன் ஒரு ஹோட்டலில் சாப்பிட வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மாலை மற்றும் இரவு என இரண்டு நேரமும் ஹோட்டலில் சாப்பிட வந்தனர். அவ்வாறு சாப்பிட வரும் போது ராகவ் பத்திரிகையாளர்களிடம் பேசவில்லை. ஆனால் பரினீதி சோப்ரா பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தார்.

அதோடு இருவரும் சேர்ந்து கால்பந்து வீராங்கனை அதிதி சவுகானுக்கு மும்பையில் நடந்த பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டனர். இதனால் இருவரும் காதலிப்பதாகச் செய்திகள் வெளியானது. ஆனால் இது குறித்து இருவரும் கருத்து தெரிவிக்காமலிருந்தனர். இப்போது இருவரது குடும்பத்தினரும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது குறித்துப் பேசி வருவதாகத் தெரிய வந்துள்ளது.
இரு குடும்பத்திற்கும் ஏற்கெனவே அறிமுகம் என்றும், பரினீதியும், ராகவும் வெளிநாட்டில் சேர்ந்து படித்ததிலிருந்து அவர்களுக்குள் அறிமுகம் உண்டு என்றும் கூறப்படுகிறது. இருவரும் தொடர்ந்து நட்பிலிருந்து வந்தனர். ஆனால் இப்போதுதான் அந்த நட்பை வெளிக்காட்டியிருக்கின்றனர். இருவருக்கும் இடையே அனைத்திலும் ஒத்துப்போவதாகவும், ஒருவருக்கொருவர் ஆதரவாக நடந்து கொள்வதாகவும் பரினீதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருவரும் சேர்ந்திருப்பதில் இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சி என்றும், விரைவில் திருமணத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இருவரும் தங்களது வேலையில் பிஸியாக இருப்பதால் நிச்சயதார்த்த தேதியை முடிவு செய்வதில் சிக்கல் இருப்பதாகவும், எனவே நிகழ்ச்சி எளிய முறையில் இருக்கும் என்றும் இருவரது குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.