பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் எப்போதும் படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்லக்கூடியவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன் மும்பையில் படப்பிடிப்புக்கு செல்லும் போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டார்.
இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லவேண்டும் என்பதற்காக அவசரத்தில் வழியில் கிடைத்த இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு பின்னால் அமர்ந்து சென்றார். அவர் அவ்வாறு அமர்ந்து செல்லும் போது அமிதாப்பச்சனும், இருசக்கர வாகனத்தை ஓட்டியவரும் ஹெல்மெட் அணியவில்லை.
இரு சக்கர வாகனத்தில் சென்றத்தை அமிதாப்பச்சன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதே போன்று கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் மும்பையில் போக்குவரத்து நெருக்கடி காரணமாக தனது பாதுகாவலரின் இரு சக்கர வாகனத்தில் படப்பிடிப்புக்கு சென்றார். அவரும் அமிதாப் பச்சன் போன்று நானும் இருசக்கர வாகனத்தில் சென்றேன் என்று கூறி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டார்.
ஆனால் அனுஷ்கா சர்மாவும் ஹெல்மெட் அணியாமல்தான் இரு சக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து சென்றார். இது குறித்து நெட்டிசன்கள் இருவரையும் கடுமையாக விமர்சித்தனர். அதோடு இது தொடர்பாக சிலர் மும்பை போலீஸ் சோசியல் மீடியாவிலும் சுட்டிக்காட்டினர். இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்திருந்தார். சொன்னபடி மும்பை டிராபிக் போலீஸார் இருவரிடமும் அபராதம் வசூலித்துள்ளனர். ஒரு இரு சக்கர வாகன ஓட்டியிடம் ரூ.10500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை தவறு செய்தவர் கட்டிவிட்டதாக மும்பை போலீஸார் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதே போன்று மற்றொரு இருசக்கர வாகன ஓட்டிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அதுவும் கட்டப்பட்டுவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அமிதாப்பச்சன் படப்பிடிப்பில் காயம் அடைந்து அதிலிருந்து குணமடைந்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.