Published:Updated:

"இதனால்தான் அந்த விருதுகளை என் கண்ணில்படாமல் வைத்திருக்கிறேன்!" - ரன்வீர் சிங் பிறந்தநாள் பகிர்வு #HBDRanveer

ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்

பெரும்பாலும் கமர்ஷியல் படங்களில் நடித்தாலும், அனைவராலும் கொண்டாடப்படும் நட்சத்திரம், நடிகர் ரன்வீர் சிங். அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து, ரசிக்கும்படி செய்ய ரன்வீரால் எப்படி முடிகிறது?

'என் முதல் திரைப்படம் சிறிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இது ஒரு நல்ல தொடக்கம். எனினும் நான் இன்னும் அதிகமாக சாதிக்க விரும்புகிறேன். அதனால்தான், முதல் படத்திற்காக நான் வென்ற விருதுகளை என் கண்ணில் படாமல் வைத்திருக்கிறேன். இந்த விருதுகள் போதும் என இருந்துவிட நான் விரும்பவில்லை.'
ரன்வீர் சிங்
'சிம்பா' படத்தில்
'சிம்பா' படத்தில்

ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன் வெளியானது 'பான்ட் பஜா பாரத்.' அறிமுக இயக்குநர் மணீஷ் ஷர்மா இயக்கத்தில் வெளியானது. டெல்லியில் வாழும் இளைஞனாக அறிமுகமானார், ரன்வீர் சிங். படம் சூப்பர் ஹிட்டானது. 'அறிமுக நடிகர் ரன்வீர், சிங் பிட்டோ ஷர்மா கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார்' என்று விமர்சனம் எழுதின அன்றைய வட இந்திய ஊடகங்கள். அப்போது அளித்த பேட்டியில் ரன்வீர் சிங் கூறியவை இவை.

இன்று பாலிவுட்டின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர், பெருநிறுவனங்கள் விரும்பும் 'பிராண்ட் ஐகான்' என்ற முகங்களுடன் வளர்ந்து நிற்கிறார், ரன்வீர். தான் நடிக்கும் திரைப்படங்களில், கேரக்டராகவே மாறிவிடும் நடிகர். பெரும்பாலும் கமர்ஷியல் படங்களில் நடித்தாலும், அனைவராலும் கொண்டாடப்படும் நட்சத்திரம், ரன்வீர் சிங்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'பான்ட் பஜா பாரத்' வெற்றிக்குப் பிறகு, மூன்று பெண்களைக் காதலித்து ஏமாற்றும் நாயகனாக, 'லேடிஸ் வெர்சஸ் ரிக்கி பாஹ்ல்' படத்தில் நடித்தார் ரன்வீர். அந்தப் படமும் ஹிட்டடித்தது. அடுத்து, 'லூட்டெரா' என்ற படத்தில் நடித்தார். 1950-களில் நிகழும் காதல் கதையான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெறாவிட்டாலும், விமர்சகர்களைக் கவர்ந்தது.

83 படத்தில்...
83 படத்தில்...

சஞ்சய் லீலா பன்சாலியுடன் இணைந்த பிறகு, ரன்வீரின் வாழ்க்கையில் இரண்டு மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. 'கோலியோன் கீ ராஸ்லீலா - ராம் லீலா' படத்தில் குஜராத்தி வட்டார வழக்கில் பேசி நடித்த ரன்வீர் சிங்கிற்கு, அது திருப்புமுனையாக அமைந்தது.

தீபிகா படுகோனேவுடன் அவர் நடித்த முதல் திரைப்படமும் அதுதான். சஞ்சய் லீலா பன்சாலியுடன் இணைந்து மூன்று திரைப்படங்களை நடித்தது, ரன்வீர் - தீபிகா ஜோடி.
'பாஜிராவ் மஸ்தானி' படத்தில்...
'பாஜிராவ் மஸ்தானி' படத்தில்...

'கோலியோன் கீ ராஸ்லீலா - ராம் லீலா' ரோமியோ ஜூலியட் கதையின் தழுவலாக அமைந்தது. 'பாஜிராவ் மஸ்தானி' மராட்டிய மன்னன் பாஜிராவின் காதலைப் பற்றி பேசியது.

தன்னை மன்னனாக மாற்றிக்கொள்ள, பல நாள்கள் யாரிடமும் பேசாமல் தனிமையில் கழித்தார், ரன்வீர் சிங். மராத்தி மொழியையும், களரிப் பயிற்சியும் பெற்று, பேஷ்வா பாஜிராவாக சிறப்பாக நடித்தார்.

"இதனால்தான் அந்த விருதுகளை என் கண்ணில்படாமல் வைத்திருக்கிறேன்!" - ரன்வீர் சிங் பிறந்தநாள் பகிர்வு #HBDRanveer

பல்வேறு விமர்சனங்களையும், அரசியல் அழுத்தங்களையும் சந்தித்தாலும், 'பத்மாவத்' திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் ஒரே குரலில் சொன்னது - 'ரன்வீர் சிங் மிரட்டியிருக்கிறார்' என்பதே!. பத்மாவதி மேல் காதல் கொண்டு, மோகத்துடன் அலையும் பேரரசன் அலாவுதீன் கில்ஜியாக நடித்திருந்தார், ரன்வீர்.

மும்பையின் குடிசைப் பகுதியில் வாழும் இஸ்லாமிய இளைஞனாக, 'ராப்' இசைக்கலைஞனாக மாற விரும்பும் கனவுகளுடன் 'கல்லி பாய்' முராத்தாக நடித்திருந்தார், ரன்வீர். நடிப்பு மட்டுமல்லாமல், படத்தின் ராப் பாடல்களையும் முறையே கற்று, அவரே பாடியிருந்தார். படத்தில் அவரது நடிப்புடன், பாடல்களும் பெரிதும் பாராட்டப்பட்டன.

ரன்வீர் சிங் பெரிதும் கொண்டாடப்படுவதற்குக் காரணம், அவரின் எனர்ஜி. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும், அவரின் அசாத்திய எனர்ஜி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். பாலிவுட்டின் மற்ற நடிகர்கள்போல் அல்லாமல், ரசிகர்களுடன் நெருங்கிப் பழகுபவர், ரன்வீர். சிறு வயது முதலே குறும்புத்தனமாக வளர்ந்ததால், இன்றும் எந்த மேடையிலும் சேட்டை செய்யும் ரன்வீரைக் காணமுடியும். சமீபத்தில் 'கல்லி பாய்' படத்தின் இசை நிகழ்ச்சியின்போது, ஆர்வம் தாங்காமல் மேடையிலிருந்து ரசிகர்கள் மீது குதித்து, டிரெண்ட் ஆனார் ரன்வீர்.

நிகழ்ச்சிகளுக்கு அவர் அணிந்து வரும் வித்தியாசமான உடைகளுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.

தற்போது '83' படத்தில், உலகக் கோப்பையை வென்ற 'முதல் இந்திய கிரிக்கெட் அணி' பற்றிய படத்தில் கபில் தேவாகவும், 'தக்த்' படத்தில் முகலாய மன்னர் ஒளரங்கசீப்பின் தம்பி தாரா ஷுகோவாகவும் நடித்து வருகிறார். கபில் தேவாக ரன்வீர் நிற்கும் படம் இன்று நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

'83' படத்தில் - கபில் தேவ் வேடத்தில் ரன்வீர்
'83' படத்தில் - கபில் தேவ் வேடத்தில் ரன்வீர்

டெல்லியில் சாதாரண இளைஞன் பிட்டோவாக, மும்பையின் ஏழை இளைஞன் முராத்தாக, மராட்டிய மன்னன் பாஜிராவ்வாக, டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியாக, தற்போது கபில் தேவ்வாக என எந்த வேடத்தையும் ஏற்று, அப்படியே தன்னை மாற்றிக் கொள்வது ரன்வீரின் வழக்கம். அதுதான் அவரை அனைவரும் திரும்பிப் பார்த்து, ரசிக்கும்படி செய்கிறது. பிறந்தநாள் வாழ்த்துகள் ரன்வீர்!

அடுத்த கட்டுரைக்கு