பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று, 'மன் கி பாத்' (மனதின் குரல்) என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலமாக உரையாற்றி வருகிறார்.
2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்த மாதத்துடன் 100வது அத்தியாயத்தை நிறைவு செய்கிறது. இதையொட்டி 'Mann Ki Baat @100 (மான் கி பாத்100)' என்ற மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் திரைத்துறை, விளையாட்டுத் துறை என இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 முக்கியமான பிரபலங்களும், பிரதமர் மோடி இதுவரை தனது 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசியுள்ள 700 நபர்களில் பலரும் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 26ம் தேதி) டெல்லியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் அமீர் கான், ரவீனா டாண்டன் மற்றும் தீபா மாலிக், நிகத் ஜரீன் போன்ற விளையாட்டுப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் ரேடியோ ஜாக்கிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அமீர்கான், "நாட்டின் தலைவர் மக்களுடன் உரையாடுவது, பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பது, யோசனைகளை முன்வைப்பது, ஆலோசனைகளை வழங்குவது என்பது மிக முக்கியமானது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி 100வது அத்தியாத்தை நிறைவு செய்துள்ளதில் மகிழ்ச்சி" என்று பேசியுள்ளார்.
இந்த மாநாடு இன்று காலையில் தொடங்கிய நிலையில் பலரும் பிரதமர் மோடி குறித்தும் மான் கி பாத்' நிகழ்ச்சி குறித்தும் உரையாற்றவுள்ளனர்.