பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தற்போது மும்பையில் உள்ள தனது வீட்டை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதோடு சேர்த்து தான் படப்பிடிப்புகளுக்கு எடுத்துச்செல்லும் கேரவன் வேனையும் தனது ரசனைக்குத் தகுந்தபடி மாற்றி அமைத்திருக்கிறார்.

கேரவன் வேன் தனது வீடு போன்று இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மாற்றி அமைத்திருக்கிறார். ரூ.65 லட்சம் ரூபாய் செலவு செய்து வேனின் உள்கட்டமைப்பு வசதிகளை கங்கனா மாற்றி அமைத்திருக்கிறார். இதற்காக பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அம்பானி குடும்பங்களுக்காக வேலை செய்து வரும் கேதன் ராவல் என்பவரைக்கொண்டு கங்கனா தனது வேனில் தேவையான மாற்றங்களைச் செய்திருக்கிறார். இது தொடர்பாக கேதன் கூறுகையில், ``தனது சொந்த வீட்டில் இருப்பது போலவே கேரவனிலும் இருக்க கங்கனா விரும்புகிறார்.
எனவே அவர் சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வுடன் இருக்க நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். ஒரிஜினல் மரத்தில் இருக்கைகள், சேர்கள் தயாரித்திருக்கிறோம். முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி இன்றைக்கு எங்கு சென்றாலும் எங்களது கேரவன் வேனைத்தான் பயன்படுத்துகிறார். அவர் சொல்லும் இடத்தில் எங்களது வேனை எடுத்துச்சென்று நிறுத்துகிறோம் என்று தெரிவித்தார். பாலிவுட் பிரபலங்கள் பெரும்பாலானோர் சொந்தமாக ஆடம்பரமான கேரவன்கள் வைத்திருக்கின்றனர்.

அவை ஒவ்வொன்றும் கோடிக்கணக்கில் விலையுடையது. நடிகர் ஷாருக்கான் பயன்படுத்தும் கேரவன் மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. இது தவிர நடிகர் சல்மான் கான் 4 கோடி மதிப்பு கேரவனையும், ஹ்ரித்திக் ரோஷன் ரூ.3 கோடி மதிப்புள்ள கேரவனையும் பயன்படுத்தி வருகின்றனர்.