Published:Updated:

`பெண்கள் மீதான வன்முறைகளுக்கு டிஸ்கிளைமர் இல்லையா?’ - ட்விட்டரில் கேள்வி எழுப்பிய டாப்ஸி

டாப்ஸி
டாப்ஸி

``பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது இயல்பானதாக பார்க்கப்படுகிறது. ஆனால், அது மிகவும் தவறானது. இதைத் தடுக்க நாம் என்ன செய்யப்போகிறோம்” என்று டாப்ஸி கேள்வி எழுப்பியுள்ளார்.

அனுபவ் சின்ஹா இயக்கத்தில், டாப்ஸியின் நடிப்பில் `தப்பட்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கு முன்பாக, சிறப்புக் காட்சி ஒன்றை படக் குழுவினர் சில நாள்களுக்கு முன்னர் ஏற்பாடுசெய்திருந்தனர். படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததால், எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இன்னும் சில நாள்களில் படம் வெளியாக உள்ள நிலையில், புரொமோஷன் தொடர்பாகவும் தனியார் இணையதளம் ஒன்றுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் சிறிய வீடியோ ஒன்றை டாப்ஸி தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

டாப்ஸி பகிர்ந்துள்ள வீடியோவில், 'தப்பாட்' படத்தில் தனக்கு கணவராக நடித்துள்ள பவைல் குலாதியுடன் தோன்றுகிறார். பவைல், அவரது கையில் வைத்திருக்கும் மதுவைக் குறிப்பிட்டு, `இதற்கு டிஸ்கிளைமர் போட வேண்டுமா?’ என்று கேட்டு, அவருடைய கைகளிலிருந்து மதுவை வாங்குகிறார். பின்னர், அவர், சிகரெட் ஒன்றை எடுக்கிறார். டிஸ்கிளைமர் கேள்வியை மீண்டும் கேட்டு அதையும் பிடுங்குகிறார். உடனே பவைல், டாப்ஸியின் கன்னத்தில் அறைய கையை ஓங்குகிறார். ஒரு நிமிடம்... என்று கூறிவிட்டு, `இந்தக் காட்சிக்கு டிஸ்கிளைமர் தேவை இல்லையா?’ என்று கேட்கிறார்.

`இந்த வீடியோ, என் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது!' - பெண்ணின் பதிவால் நெகிழ்ந்த டாப்ஸி

ட்விட்டரில் இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக, ``பெண்களுக்கு எதிரான வன்முறைகளைச் சித்திரிக்கும் படங்களுக்கு டிஸ்கிளைமரைப் பயன்படுத்த வேண்டும் என்பதை கட்டாயமாக்க, மத்திய திரைப்பட தணிக்கைத் துறைக்கு சேஞ்ச் ஆர்க் அமைப்பினர் அளித்துள்ள மனுவை ஆதரிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அந்த அமைப்பின் இணையதள முகவரியையும் பதிவு செய்துள்ளார். இதில், லட்சக்கணக்கான நபர்கள் தங்களது கையெழுத்தைப் பதிவுசெய்துள்ளனர். ``பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது இயல்பானதாக பார்க்கப்படுகிறது. ஆனால், அது மிகவும் தவறானது. இதைத் தடுக்க நாம் என்ன செய்யப்போகிறோம்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, இதேபோல படத்தின் இரண்டாவது டிரெய்லரிலும் டாப்ஸி, ``வீட்டில் நடக்கும் வன்முறைகளைச் சித்திரிக்கும் வீடியோக்களுக்கு இணையத்தில் இடமில்லை. புகார் அளித்து நீக்கச்சொல்லுங்கள்” என்று பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறார். கணவன் தன்னை அறைந்தபின் விவாகரத்து கோரும் பெண்ணாக டாப்ஸி இந்தப் படத்தில் நடித்துள்ளார். இதனால், அவர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பெண்களின் சுயமரியாதை குறித்தும் படம் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

இந்தப் படத்தின் டிரெய்லருக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்த அவர், ``அனுபவின் அரசியல் கொள்கைகளின்மீது எனக்கு உடன்பாடு இல்லை. சில விஷயங்களினால் இதில் நடித்துள்ள நடிகர்களுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால், படத்தை நிச்சயமாக நான் பார்ப்பேன்” என்று கூறியிருந்தார்.

டாப்ஸியின் இந்தக் கருத்து, எப்போதும்போல நெட்டிசன்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

கடற்கன்னி மாதுரிதீட்சித்,பட்டாம்பூச்சி டாப்ஸி பன்னு, பார்பி டால் அனன்யா பாண்டே-ஃபிலிம்ஃபேர் லுக்ஸ்!
அடுத்த கட்டுரைக்கு