சமீபத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் வீட்டிலிருந்த போது அதனை அவருக்குத் தெரியாமல் சிலர் புகைப்படம் எடுத்து பத்திரிகையில் வெளியிட்டனர். இது குறித்து ஆலியா பட் கடும் விமர்சனம் செய்திருந்தார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் புகைப்படக் கலைஞர்களின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆலியா பட் வீட்டைத் தொடர்ந்து தற்போது நடிகர் சைஃப் அலி கான் வீட்டிற்குள்ளும் பத்திரிகையாளர்கள் நுழைந்துள்ளனர்.

கரீனா கபூரும், சைஃப் அலி கானும் நடிகை மலைகா அரோராவின் தாயாரின் பிறந்த நாள் விழா பார்ட்டியில் கலந்துகொண்டு விட்டு நள்ளிரவில் தங்களின் வீட்டிற்குத் திரும்பினர். அங்கே அவர்களின் வரவை எதிர்பார்த்து பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். சைஃப் அலிகான் தனது மனைவியுடன் வந்ததும், "சார் கொஞ்சம் நில்லுங்கள். புகைப்படம் எடுத்துக்கொள்கிறோம்" என்று சொல்லிக்கொண்டே கேட்டைத் தாண்டி கட்டட வளாகத்திற்குள் வந்துவிட்டனர்.
உடனே கோபமான சைஃப் அலி கான், "ஒன்று செய்யுங்கள். எங்களது படுக்கை அறைக்கே வாருங்கள்" என்று கோபமாகக் கூறினார். உடனே சில புகைப்பட பத்திரிகையாளர்கள் 'இல்லை, இல்லை' என்று பின்வாங்கினர். சைஃப் அலி கான் பத்திரிகையாளர்களைப் பார்த்து கோபமாகக் கையை அசைத்துக்கொண்டே வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டார்.

தனது மகன் தைமூருக்குப் புகைப்படம் எடுத்துக்கொள்வது பிடிக்காது என்றும், அவனை மற்ற குழந்தைகளைப் போல் சாதாரண குழந்தையாக வளர்க்க விரும்புவதாக சைஃப் அலி கான் தெரிவித்திருந்தார். அதோடு பத்திரிகையாளர்கள் தனது வீட்டைச் சுற்றிச் சுற்றி வருவது குறித்து சைஃப் அலி கான் இதற்கு முன்பும் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.
நடிகர் சைஃப் அலிகானும், கரீனா கபூரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.