சூர்யா நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் 2010ம் ஆண்டு தமிழில் வெளியான ஆக்ஷன் திரைப்படமான `சிங்கம்' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள் தமிழில் வெளியானது.
இதேபோல பாலிவுட்டிலும் இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தியில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் 'Singham' எனும் திரைப்படம் 2011-ல் வெளியானது. இதில் பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தக் கதை அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அதன் அடுத்த பாகமாக 'Singham Returns' 2014-ல் வெளியானது.

இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமாக 'Singham Again' எடுக்கும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரோஹித் ஷெட்டி மற்றும் அஜய் தேவ்கன் வெற்றிக் கூட்டணி இணைந்து பணியாற்றவுள்ளதால் அவர்களது ரசிகர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். தற்போது இப்படத்தின் முதற்கட்டப்பணிகள் நடந்து வரும் நிலையில் வரும் ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அடுத்த ஆண்டு (2024) தீபாவளிக்கு இத்திரைப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டுள்ளது.