Published:Updated:

அக்‌ஷய், அபிஷேக், அஜய் தேவ்கன்... OTT ரிலீஸில் களமிறங்கும் பாலிவுட் பாட்ஷாஸ்!

நேரடியாக OTT-யில் வெளியாக இருக்கும் பாலிவுட் படங்களின் லிஸ்ட்.

நேரடி OTT-யில் களமிறங்கும் பாலிவுட் ஹீரோக்கள்

லாக்டெளன் காரணமாகத் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும், அப்படியே திறந்தாலும் மக்கள் படம் பார்க்க வருவார்களா எனப் பல கேள்விகள் இருக்கின்றன. எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை, இந்த கொரோனா அலை ஓய்ந்த பின் தியேட்டர்களிலேயே படத்தை வெளியிடலாம் எனப் பல தயாரிப்பாளர்கள் நினைக்கின்றனர். சிலர் வந்த வரை லாபம் என்ற முறையில் ஓடிடியில் படத்தை விற்று விரைவில் வெளியிடுகின்றனர். அப்படி அமேசான் ப்ரைமில் 'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்', 'குலாபோ சிதாபோ' ஆகிய படங்கள் வெளியாகிவிட்டன. இன்னும் 'ஃப்ரெஞ்ச் பிரியாணி', 'லா', 'சுஃபியும் சுஜாதாயும்', 'சகுந்தலாதேவி' ஆகிய படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள்.

புஜ் - தி ப்ரைட் ஆஃப் இந்தியா

புஜ் - தி ப்ரைட் ஆஃப் இந்தியா:

1971-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இது உண்மைச் சம்பவம் என்பதால் அந்த போர் காட்சிகளின் உண்மையான காட்சிகளையும் படத்தில் வைத்துள்ளனராம். அபிஷேக் துதையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விமான படைத் தலைவர் விஜய் கார்னிக்காக அஜய் தேவ்கன் நடித்துள்ளார். சஞ்சய் தத், சோனாக்‌ஷி சின்ஹா, ப்ரணிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ப்ரணிதாவுக்கு இதுதான் முதல் பாலிவுட் படம்.

லூட்கேஸ்

லூட்கேஸ்:

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் கிருஷ்ணன். காமெடி டிராமா ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஹீரோ குணால் கெம்மு. 2000 ரூபாய் நோட்டுகள் நிறைந்த சிவப்பு நிற சூட்கேஸைச் சுற்றி நடக்கும் கதை. ஏப்ரல் 10, 2020 அன்று வெளியாவதாக இருந்த இந்தப் படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.

பிக் புல்

பிக் புல்:

2010-ல் விவேக் ஓபராயை வைத்து 'பிரின்ஸ்' படத்தை இயக்கிய குக்கி குலாடி என்பவர் இயக்கியிருக்கும் படம். அஜய் தேவ்கன் தயாரித்து அபிஷேக் பச்சன் லீட் ரோலில் நடித்திருக்கிறார். 'போல் பச்சன்' படத்திற்குப் பிறகு, அஜய் தேவ்கன் தயாரிப்பில் அபிஷேக் பச்சன் நடிக்கும் படம் இது. 1980 முதல் 1990 வரை ஸ்டாக் மார்க்கெட்டில் பல குற்றங்களை செய்த ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஹர்ஷத் மேத்தா கேரக்டரில்தான் அபிஷேக் பச்சன் நடிக்கிறார். இலியானா, நிகிதா தத்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

சடக் 2

சடக் 2:

1991-ல் இந்தியில் ப்ளாக்பஸ்டர் ஹிட்டான 'சடக்' படத்தின் சீக்வெல்தான் இது. தமிழில் வசந்த் இயக்கத்தில் பிரசாந்த், தேவயானி, பிரகாஷ்ராஜ் நடித்த 'அப்பு' படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் 'சடக்'. அந்தப் படத்தை இயக்கிய மகேஷ் பட்தான் இதற்கும் இயக்குநர். அதில் நடித்த சஞ்சய் தத், பூஜா பட் ஆகியோர் அதே கேரக்டரில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'சடக்' படத்தின் சீக்வெல் என்பதால் இந்தப் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.

தில் பெச்சாரா

தில் பெச்சாரா:

சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி படம் இது. 2012-ம் ஆண்டு ஜான் க்ரீன் எழுதிய 'The Fault in our Stars' என்ற நாவலை மையப்படுத்தின படம். இந்த நாவலை வைத்து அதே பெயரிலேயே ஒரு அமெரிக்க படம் ஒன்றும் 2014-ம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. காஸ்ட்டிங் டைரக்டராக இருந்த முகேஷ் சப்ரா இயக்கும் முதல் படம். சுஷாந்த் சிங், சயீஃப் அலிகான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சஞ்சனா சங்கி எனும் நாயகி இதன் மூலம் அறிமுகமாகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. வரும் ஜூலை 24-ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கிறது. கூடுதல் சிறப்பாக, சுஷாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்தப் படத்தை அனைவரும் இலவசமாகப் பார்த்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது ஹாட்ஸ்டார்.

லக்‌ஷ்மி பாம்

லக்‌ஷ்மி பாம்:

'காஞ்சனா' படத்தின் இந்தி ரீமேக். அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடிக்கும் இப்படத்தை ராகவா லாரன்ஸே இயக்கியிருக்கிறார். 'காஞ்சனா'விற்கு ஒளிப்பதிவு செய்த வெற்றிதான் இந்தப் படத்திற்கும். அவரின் முதல் பாலிவுட் படமும் இதுதான். சரத்குமார் நடித்த கேரக்டரில் அங்கு யார் என்பதை இன்னும் வெளியிடாமல் வைத்திருக்கிறது படக்குழு. அதில் அக்‌ஷய் குமாரே நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மே 22-ம் தேதி வெளியாக இருந்தது, தற்போது நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

குதா ஹாஃபிஸ்

குதா ஹாஃபிஸ்:

ஃபரூக் கபீர் இயக்கத்தில் வித்யுத் ஜம்வால் நடிக்கும் படம். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர்தான் வித்யுத்திற்கான ஏரியா. இந்தப் படமும் அப்படியானதுதான். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உஸ்பெக்கிஸ்தானில் எடுத்த படம். இவருக்கு ஜோடியாக சிவலீகா ஓபராய் என்பவர் நடிக்கிறார். போன வருடம் 'ஜங்க்லீ', 'கமாண்டோ 3' ஆகிய இரண்டு படங்கள் இவர் நடிப்பில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு