ஃபோர்ப்ஸ் பொழுதுபோக்கு பிரபலங்கள் பட்டியலில் `அக்ஷய்குமார்'
2.0 திரைப்படத்தில், 'பக்ஷிராஜன்' கதாபாத்திரத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் 33-ம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

உலகளவில் அதிக ஊதியம் பெறும் பொழுதுபோக்கு பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை நேற்று வெளியிட்டுள்ளது. இதில், பிரபல அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். 2.0 திரைப்படத்தில், `பக்ஷிராஜன்' கதாபாத்திரத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் 33-ம் இடத்தைப் பிடித்திருக்கிறார். ஒரு திரைப்படத்துக்காக ஐந்து முதல் பத்து மில்லியன் டாலர்கள் வரை சம்பளமாகப் பெரும் அக்ஷய்தான், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கணக்கெடுப்பில் இந்தியாவிலிருந்து இடம்பெற்ற ஒரே பிரபலம்.
2016-ல், டாப் இடத்திலிருந்த 29 வயதாகும் டெய்லர் ஸ்விஃப்ட், இந்தாண்டு முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். 2018-ம் ஆண்டு இவர் மேற்கொண்ட `Reputation' எனும் உலகச் சுற்றுலா, இவருக்கு 266 மில்லியன் டாலர் தொகையை ஈட்டித்தந்தது. வழக்கமாக நிகர மதிப்பைக்கொண்டுதான் இந்தப் பட்டியலைத் தயார் செய்வார்கள். ஆனால், இம்முறை மக்களிடையே அதிகளவு புகழ் பெற்றிருக்கும் நட்சத்திரங்களைக் கணக்கெடுத்து, அவர்களின் ஜூன் 1, 2018 மற்றும் ஜூன் 1, 2019-க்கு இடையிலான காலத்தின் Pre-Tax வருவாயை அளவிட்டுப் பட்டியலிட்டிருக்கின்றனர். அந்த வகையில், பிராட்லி கூப்பர், கேட்டி பெர்ரி போன்ற பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, சுமார் 444 கோடி சொத்து மதிப்புடன், 33-ம் இடத்தைப் பிடித்திருக்கிறார் அக்ஷய். நம் அனைவரின் மார்வெல் ஃபேவரிட்டான 'Iron Man' ராபர்ட் டவ்னியைவிட ஒரு மில்லியன் டாலர் மட்டுமே அக்ஷய் குறைவு.
டைலரைத் தொடர்ந்து, அமெரிக்க மாடலான கைல் ஜென்னர் இரண்டாம் இடத்தையும், அமெரிக்க ராப்பர் கேன் வெஸ்ட் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். உலகளவில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்டிருக்கும் அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் மெஸ்ஸி நான்காம் இடத்தையும், 'Shape of You' பாடல் மூலம் உலகப் புகழ்பெற்ற எட் ஷீரென் ஐந்தாம் இடத்தையும், கால்பந்து வீரர்கள் கிரிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் நெய்மர் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளனர்.
`ஹாரி பாட்டர்' எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங், டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், ட்வயின் ஜான்சன், கிம் காதர்ஷியன், ரிஹானா, ஜாக்கி சான், ஸ்கார்லட் ஜோஹன்சன், புருனோ மார்ஸ், எமினெம், ஜேம்ஸ் ஹார்டன், ஸ்டீவ் ஹார்வி, கிரிஸ் இவான்ஸ், ஜெனிஃபர் லோபஸ், லேடி காகா, மார்ஷ்மெல்லோ, ஷான் மெண்டெஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருக்கும் பிரபலங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனர்.