ப்ரித்விராஜ் சௌஹானின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். அந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதிலிருந்து படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
ராஜஸ்தானின் குர்ஜார் சமூக மக்கள், டிசம்பர் மாதமே அஜ்மரில் இதுகுறித்த போராட்டம் ஒன்றை நிகழ்த்தியிருக்கின்றனர். வரலாற்றுப் படமான ப்ரித்விராஜில் ராஜ்புத் குறித்த சொல்லாடல்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், படத்தை வெளியிடுவதற்கு முன்னர், தங்கள் குழுவினருக்குப் படத்தைத் திரையிட்டுக்காட்ட வேண்டும் என்றும் கூக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். தற்போது சமூகவலைதளங்களில் #BoycottPrithvirajMovie என்கிற ஹேஷ்டேக்குடன் ஆன்லைன் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இதற்குக் காரணம் ப்ரித்விராஜை ராஜ்புத் வம்சத்தவராக படத்தில் காட்டியிருப்பதுதான் என்கிறார்கள்.

இது குறித்து அனைத்து இந்திய வீர் குர்ஜார் சமாஜின் தலைவரான ஹர்சந்த் குர்ஜார், "ப்ரித்விராஜ் குர்ஜார் சமூகத்தைச் சார்ந்தவர். ராஜ்புத் சமூகத்தைச் சார்ந்தவர் அல்ல. படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும். படத்தைத் திரையிடுவதற்கு முன்பு, எங்களுக்குப் போட்டுக் காட்ட வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.
2017 மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற மனுஷி சில்லார், அஷுதோஷ் ராணா, சோனு சூத், சஞ்சய் தத் என பலர் இப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.