ராஜஸ்தானை ஆட்சி செய்த புகழ்பெற்ற மன்னர் பிரித்விராஜ் சௌகான் வரலாற்றைப் பின்னணியாக கொண்டு உருவான படம் 'சாம்ராட் பிரித்விராஜ்'. பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார், சஞ்சய் தத், சோனு சூட், மனுஷி ஷில்லார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
ராஜ்புத் மன்னரான பிரித்விராஜ் வாழ்க்கையைப் பின்னணியாக கொண்டு உருவான இந்தப் படம் ஓமன் மற்றும் குவைத் நாடுகளில் வெளியிட தடை செய்யப்பட்டிருக்கிறது. வணிக ரீதியிலான அனலிஸ்ட் கிரிஷ் ஜோகர் என்பவர் பகிர்ந்திருக்கும் ட்வீட்டில், "இந்த இரண்டு அரசுகளும் அந்தந்த நாடுகளில் படம் வெளியாவதற்கு அனுமதி தர மறுத்துள்ளன" எனத் தெரிவித்திருக்கிறார். உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் இந்தப் படத்திற்கு வரி விலக்கு தரப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்குப் படம் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்படவுள்ளது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு அக்ஷய் வெளியிட்ட குறிப்பில், "இந்தியாவின் வீரமிகு மன்னர்களில் ஒருவரான சாம்ராட் பிரித்விராஜ் சௌகான் வாழ்வைக் கொண்டாடும் இந்தப் படத்தை உருவாக்க 4 வருடங்கள் தேவைப்பட்டது. நாங்கள் பெருமையாக உணர்கிறோம். இது உண்மையான வரலாறைத் தழுவி எடுக்கப்பட்டது. பெரும்பாலான மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு இந்த வரலாறு சென்று சேர வேண்டும்." எனத் தெரிவித்து இருந்தார். மனுஷி ஷில்லார் இந்தப் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமாகிறார்.
