Published:Updated:

Darlings விமர்சனம்: குடும்ப வன்முறையில் ஈடுபடும் கணவர்களுக்குப் பாடம் புகட்டும் `டார்லிங்ஸ்'!

டார்லிங்ஸ் | Darlings

குடும்ப வன்முறையில் ஈடுபடும் கணவர்களுக்கு எதிராகப் பெண்கள் ரிவெஞ்ச் எடுக்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்று எச்சரிக்கை மணி அடிக்க வைத்திருக்கிறது ஆலியா பட்டின் கதாபாத்திரம்.

Published:Updated:

Darlings விமர்சனம்: குடும்ப வன்முறையில் ஈடுபடும் கணவர்களுக்குப் பாடம் புகட்டும் `டார்லிங்ஸ்'!

குடும்ப வன்முறையில் ஈடுபடும் கணவர்களுக்கு எதிராகப் பெண்கள் ரிவெஞ்ச் எடுக்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்று எச்சரிக்கை மணி அடிக்க வைத்திருக்கிறது ஆலியா பட்டின் கதாபாத்திரம்.

டார்லிங்ஸ் | Darlings
தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியைச் சித்ரவதை செய்கிறான் கணவன். இதற்கும், காதல் திருமணம்தான். 'யாருதான் இந்த உலகத்துல குடிக்கல?' என்று கேட்கலாம். சாப்பாட்டில் கல் இருந்தாலும் கழுத்தைப் பிடித்து நெரிக்கும் அளவுக்கான சைக்கோ அவன். இரவு கொடூரமாக அடித்துவிட்டு, காலையில் 'சாரி' கேட்டு மனைவியை 'டார்லிங்ஸ்' என்று கொஞ்சுவான். மீண்டும் வரும் இரவில் அதே கொடூரம், விடிந்ததும் 'டார்லிங்ஸ்' தொடரும்.

அவனின் குடியை மறக்கடிக்க ஒரு திட்டம் போடுகிறாள் மனைவி. அதையும் கண்டுபிடித்து வன்முறை வெறியாட்டம் ஆடுகிறான். அவனை இம்ப்ரஸ் செய்ய அவள் எடுக்கும் முயற்சியில்கூட விரலை உடைக்கிறான். இந்தக் கொடுமைகளைப் பார்க்கும் மனைவியின் நண்பன் போலீஸில் புகார் கொடுக்கிறான். அந்தப் புகாரையும்கூட வாபஸ் வாங்கிக்கொண்டு இவ்வளவு சித்ரவதைகளையும் பொறுத்துக்கொண்டு வாழ முயல்கிறாள் மனைவி. ஆனால்… கடைசியாக நடக்கும் ஒரு சம்பவத்தில் கணவனின் வன்முறை உச்சத்தை அடைய, அதற்கு மனைவி எடுக்கும் தீர்க்கமான முடிவுதான் 'டார்லிங்ஸ்' படத்தின் மீதிக்கதை.

டார்லிங்ஸ் | Darlings
டார்லிங்ஸ் | Darlings

பல்வேறு ஆசைகள், கனவுகளுடன் காதல் கணவனுடன் வாழ்க்கையைத் தொடங்கும் மனைவி பத்ரு கதாபாத்திரத்தில் தனது அபார நடிப்பால் நம் மனதில் வந்து அமர்கிறார் ஆலியா பட். குடும்ப வன்முறையால் பரிதவிக்க வைக்கும் மனைவியாகவும் காலையில் எழுந்து எதுவுமே தெரியாததுபோல் கணவனுக்குச் சமைத்துக் கொடுக்கும் மனைவியாகவும் சராசரி இந்தியப் பெண்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறார் ஆலியா. அதேநேரம், கணவன் எல்லை தாண்டும்போது, அவர் எடுக்கும் முடிவுதான் படத்தின் பாதையையே மாற்றுகிறது. குடும்ப வன்முறையில் ஈடுபடும் கணவர்களுக்கு எதிராகப் பெண்கள் ரிவெஞ்ச் எடுக்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்று எச்சரிக்கை மணி அடிக்க வைத்திருக்கிறது அவரின் கதாபாத்திரம்.

ரயில்வேயில் வேலைபார்க்கும் குடிகார கணவனாக விஜய் வர்மா. அலுவலகத்தில் உயரதிகாரியால் எவ்வளவு அவமானங்கள் ஏற்பட்டாலும் பொறுத்துக்கொள்கிறார். ஆனால், அந்தக் கோபத்தையெல்லாம் வீட்டிற்கு வந்ததும் மனைவியிடம் காட்டுவது, சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட ஆதிக்க மனப்பான்மையோடு அதிகாரம் செலுத்துவது, காவல்நிலையத்தில் நீலிக்கண்ணீர் வடித்து ஏமாற்றுவது எனக் காட்சிக்குக் காட்சி சந்தர்ப்பவாத மனிதனாக நெஞ்சைப் பதறவைக்கிறார். அதுவும், காவல்நிலையத்தில் புகார் கொடுத்தது யார் என்ற தகவலை அறிந்ததும் அவர் வீட்டை நோக்கி வரும் காட்சி பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைத்துவிடுகிறது.

ஆலியா பட்டின் தாயாக வரும் ஷெஃபாலீ ஷா, மகள் அனுபவிக்கும் சித்ரவதைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் துடிப்பது, கோபத்தில் வெடிப்பது என்று மகளுக்கு மட்டுமல்ல திரைக்கதைக்கும் துணை நிற்கிறார். ஆலியா பட்டும் செஃபாலீ ஷாவும் கண்களால் அடிக்கடி பேசுவதும் க்யூட் ஹைக்கூக்கள்! அதுவும், கணவனை வீட்டிலேயே கட்டி வைத்துவிட்டு, அதிகாரி வந்து விசாரிக்கும்போது தாயும் மகளும் சமாளிக்கும் காட்சிகளில் அன்லிமிடெட் நகைச்சுவையை அள்ளி வீசுகிறார்கள்.
டார்லிங்ஸ் | Darlings
டார்லிங்ஸ் | Darlings

கணவனைக் கட்டிப்போட்டு அவனது சேரை ரோலிங் செய்துகொண்டே சாப்பாடு ஊட்டுவது, காய்கறிகளை உரிக்கச்செய்வது எனப் பழிவாங்கும் காட்சிகளில்கூட காமெடி கதகளி ஆடியிருக்கிறார் நாயகி ஆலியா பட். கரணம் தாண்டினால் மரணம் என்பதுபோல கொஞ்சம் ஸ்லிப் ஆனாலும் கதை கதம் ஆகிவிடும் திரைக்கதையைத் துல்லியமாகப் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஜாஸ்மீத் கே ரீன். பெண்கள் தினம் தினம் அனுபவிக்கும் குடும்ப வன்முறையை மையப்படுத்திய கதை இது. ஆனால், சைக்கோ த்ரில்லர் எனத் திகிலடைய வைக்காமல் ’இவ்வளவு ரணகளத்திலயும் ஒரு குதூகலம்’ ரேஞ்சுக்கு காமெடி ப்ளஸ் கலாட்டா என ஜாலி குத்தாட்டம் போட்டிருக்கிறது திரைக்கதை. குடும்ப வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள், சித்ரவதைகளை அவர்களது பாயின்ட் ஆஃப் வியூவிலிருந்து அறத்துடனும் அறச்சீற்றத்துடனும் பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர் ஜாஸ்மீத் கே.ரீன்.

மனைவியின் ஆசைகள், கனவுகள் என எதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. எவ்வளவு அடித்து கொடுமைப்படுத்தினாலும் பெண்கள் தாங்கிக்கொள்வார்கள், மிஞ்சி மிஞ்சிப்போனால் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பார்கள், அதையும் மீறி அவர்களால் என்ன செய்துவிடமுடியும்? அதையும் கட்டப்பஞ்சாயத்து செய்தோ, நைஸாக பேசியோ சமாளித்துவிடலாம் என்ற ஆணாதிக்க மனப்பான்மையோடு குடும்ப வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபடும் ஒவ்வொரு ஆணையும் நடு நடுங்க வைக்கிறது அந்த க்ளைமாக்ஸ். அதுவும், இறுதியில் ஆலியா பட்டின் அப்பா மிஸ்ஸிங் என்று காண்பிக்கப்பட்டு வரும் அந்த மின்னல் வேக ஃப்ளாஷ்பேக் கூடுதல் பகீர்.

டார்லிங்ஸ் | Darlings
டார்லிங்ஸ் | Darlings

ஆனால், அலியா பட்டையும் மீறி படத்தில் நம்மை ஈர்ப்பது சீனியர் ஷெஃபாலி ஷாவும், ரோஷன் மேத்யூவும்தான். இத்தனை ஆண்டுக்கால கலை அனுபவத்துடன் ஷெஃபாலி ஷா செய்யும் சின்ன சின்ன விஷயங்கள்கூட அவ்வளவு நேர்த்தியுடன் இருக்கின்றன. மலையாளத்திலிருந்து பாலிவுட்டில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிடக்கூடிய எல்லா தகுதியும் ரோஷன் மேத்யூவிற்கு இருக்கிறது. குறிப்பாகக் காவல் நிலையத்திலும், அதற்குப் பின்பு வரும் காட்சியிலும் ரோஷன் மேத்யூவின் நடிப்பு அல்ட்டி.

பொதுவாக குடும்ப வன்முறையால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள்தான். ஆணாதிக்கம் மிகுந்த கணவன்மார்கள் மனைவிகளைக் கொத்தடிமைகளாக நடத்தும் கொடுமைகள், அதனால் பாதிக்கப்படும் பெண்கள் என்பதே பெரும்பாலான க்ரைம் செய்திகளில் இடம்பெறும் விஷயங்கள். இப்படி வழக்கமாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மத்தியில், பாதிக்கப்படும் பெண் துணிந்து திருப்பியடிக்க நினைத்தால் என்னவாகும் என்று இன்னொரு கோணத்தில் சிந்திக்க வைத்திருக்கிறது 'டார்லிங்ஸ்'. அந்த வகையில் இது தவறு இழைக்கும் கணவர்களுக்கு ஒரு பாடம்!