உறவுகளில் அதிகம் பேசப்படாதது அக்கா-தங்கை உறவு. அவர்களுக்குள் பகிர்தல் குறைவாக இருந்தாலும் அன்பு ஆழமானது. அந்த வரிசையில் சமீபத்தில், நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பாலிவுட் நட்சத்திரம் ஆலியா பட், தன் அக்காவைப் பற்றிப் பேசியபோது மனம் உடைந்து மேடையிலேயே அழுதிருக்கிறார். இதற்கான காரணம் ஆலியாவை மட்டுமல்ல இந்திய மக்களையும் நெகிழவைத்துள்ளது.
ஆலியா அவருடைய சகோதரி ஷாஹீனோடு கலந்துகொண்ட அந்த நிகழ்வில், தன்னுடைய சகோதரி சிறு வயதிலேயே மனதளவில் ஏராளமான துன்பங்களை அனுபவித்ததைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். எப்போதும் இருவரும் இணைந்திருந்தும், தன்னுடைய அக்கா மன அழுத்தத்தினால் போராடுகிறார் என்பதை ஒரு நாளும் உணரவில்லையே என்று மனமுடைந்து அழுதார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தற்போது மனநல ஆலோசகராக இருக்கும் ஷாஹீன் தன் வாழ்க்கையில் அனுபவித்த மனஅழுத்தத்தின் வலிகளைப் பற்றி சமீபத்தில் வெளியான "I’ve never been Unhappier" எனும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
``என் அக்கா எவ்வளவு வேதனைகளை அனுபவித்திருக்கிறார் என்பதை ஷாஹீனின் புத்தகத்தைப் படித்த பிறகுதான் எனக்குத் தெரியவந்தது" என்று குறிப்பிட்ட ஆலியா அதற்காகத் தான் குற்ற உணர்வுடன் இருப்பதாகக் கூறி மிகவும் வருந்தினார்.
சில நாள்களுக்கு முன்பு ஷாஹீன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``என்னுடைய 13-வது பிறந்த நாளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போதுதான் மன அழுத்தம் எனும் கொடுமையான வலியை உணர்ந்தேன். உடல் எடை அதிகரித்துக்கொண்டிருக்கிறது அதனால், நான் பலராலும் கேலி கிண்டல்களுக்கு ஆளாக்கப்படுகிறேன் என்பதை உணர்ந்தேன்.
உடல் எடையைக் குறைக்க நினைத்த நான், நான்கு மாதங்கள் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன். என் பதிமூன்றாவது பிறந்தநாள் எட்டுவதற்குள் உடல் எடை முழுவதையும் இழந்தேன். ஆனால், பின்னாளில் இது அத்தனையும் எதற்கும் பயனில்லாதது என்று உணர்ந்தபோது அதைவிடக் கூடுதலாக வருத்தப்பட்டேன்" என்று பதிவிட்டிருந்தார் ஷாஹீன். அவரின் இந்த நிகழ்வே ஆலியாவின் வருத்தத்துக்குக் காரணம். மேலும், பாலிவுட் பியூட்டி கத்ரினா கைஃப், மன வலிமை தருகிற இப்புத்தகத்தைப் படைத்ததற்காக ஷாஹீனை பாராட்டியுள்ளார்.