'நெப்போட்டிசம்' என்பது எல்லாத் துறைகளிலும் இருக்கும் பிரச்சனை. குறிப்பாக, சினிமா மற்றும் அரசியல் துறைகளில் இவை பெரும் சர்ச்சையான பேசுபொருளாக இருந்து வருகிறது.
பாலிவுட்டில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்மம் நிறைந்த மரணத்திலிருந்து 'நெப்போட்டிசம்' என்பது பெரும் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. பலரும், பாலிவுட்டில் இருக்கும் நெப்போட்டிசத்தால் மனஉளச்சலுக்கு ஆளாவதாகவும், வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சர்ச்சையில் பல உச்ச நட்சத்திரங்களின் பெயர்களும் அடிபட்டன. அந்தவரிசையில் பிரபல பாலிவுட் இயக்குநரான மகேஷ் பாட்டின் மகள், ஆலியா பட்டையும் 'நெப்போட்டிசம்' எனும் பெயரில் பலரும் விமர்ச்சித்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதுகுறித்துப் பேசியிருந்த பாலிவுட் நடிகை ஆலியா பட், "இரண்டு ஆண்டுகளாக இந்த 'நெப்போட்டிசம்' தொடர்பான விவாதங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. மற்றவர்களைவிட எனக்கான கதவுகள் எளிதாகத் திறக்கப்படுகின்றன, வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கின்றன என்ற உண்மையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த வாய்ப்புகளுக்காக, பின்புலங்கள் ஏதுமில்லாமல் போராடிக்கொண்டிருப்பவர்களைப் பார்க்கையில் மிகவும் வருத்தமாக இருக்கும்.
பல நேரங்களில் எனது கனவுகளை மற்றவர்களுடைய கனவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். என்னுடையக் கனவு சிறியது, மற்றவர்களுடையக் கனவு பெரியது என்றில்லை. எல்லோருடையக் கனவுகளும் ஒன்றுதான், எல்லோருடைய ஆசைகளும் ஒன்றுதான். எனக்கு எளிதாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன் என்ற உண்மையை நான் ஒப்புக்கொள்கிறேன். அதனால்தான், அந்த வாய்ப்பை வீணாக்காமல் ஒவ்வொரு நாளும் 100 சதவிகிதம் என் உழைப்பைக் கொடுத்து வேலை செய்துவருகிறேன். எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொண்டதில்லை. அதன் காரணமாகத்தான் எதைப்பற்றியும் நினைக்காமல் அர்பணிப்புடன் என் வேலையை சரியாகச் செய்து வருகிறேன்" என்று கூறியுள்ளார்.