Published:Updated:

#Sadak2dislike இந்தியாவிலேயே அதிகம் வெறுக்கப்படும் சினிமா டிரெய்லர்... ஏன், எதனால், எதற்காக?!

Sadak 2
News
Sadak 2

ஒரு மரணம், இந்திய சினிமா ரசிகர்களைக் கோபப்படுத்தியிருக்கிறது. திரைப் பிரபலங்களின் மகனுக்கு மகன் பிறந்ததையே கொண்டாடும் ரசிகர்கள், அவர்களின் ஃபேவரைட் ஹீரோவின் தற்கொலையை எளிதில் கடப்பார்களா என்ன? #Sadak2

இந்தியர்கள் எப்போதும் உணர்வுக் குவியலாக இருப்பவர்கள். அப்படி இந்திய மக்களின் அதீத அன்புக்குரிய இரண்டு விஷயங்கள் கிரிக்கெட் மற்றும் சினிமா. ஆனால் அதே அன்பு, அதிக கோபமாக மாறினால்?

யூடியூபில் வெளியாகியிருக்கும் இந்திப் படமான 'சடக்-2'-ன் டிரெய்லர் அப்படிப் பேசுபொருளாகியிருக்கிறது. வீடியோ டிரெண்டிங் நம்பர் 1 தான். சுமார் 2 கோடி பேர் இந்த வீடியோவைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், வேறொரு சாதனையைப் படைத்திருக்கிறது இந்த வீடியோ. இதுவரை யூடியூப் தளத்தில் மிக அதிகம் பேரால் வெறுக்கப்பட்ட, அதாவது டிஸ்லைக் செய்யப்பட்ட வீடியோ இதுதான். சுமார் 6 மில்லியன் (60 லட்சம்) பேர் இந்த வீடியோவை டிஸ்லைக் செய்திருக்கிறார்கள். ஏன் ?

Sadak 2 YouTube dislikes
Sadak 2 YouTube dislikes

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'ப்ளீட் ப்ளூ' என கிரிக்கெட் சாயம் ரத்தத்தில் ஊறிப்போன இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியோ, கோபமோ... எல்லாவற்றையுமே வீரியத்துடன்தான் வெளிப்படுத்துவார்கள். இதேதான் சினிமாவுக்கும். படங்களின் வெற்றி, தோல்வி, நடிகர்களின் கட் அவுட்டுகள், ரசிகர் மன்றங்கள், நட்சத்திரங்களின் திருமணம் முதல் அவர்கள் குழந்தைகளின் புகைப்படங்கள் வரை எல்லாமே இங்கு வைரல் கன்டென்ட்தான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஆனால், இப்போது ஒரு மரணம், இந்திய சினிமா ரசிகர்களைக் கோபப்படுத்தியிருக்கிறது. திரைப் பிரபலங்களின் மகனுக்கு மகன் பிறந்ததையே கொண்டாடும் ரசிகர்கள், அவர்களின் ஃபேவரைட் ஹீரோ மரணம் என்றால் எளிதில் கடப்பார்களா என்ன? அதுவும் இம்மரணம் சினிமா ரசிகர்களைத் தாண்டி கிரிக்கெட் ரசிகர்களையும் கலங்கச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மகேந்திர சிங் தோனியின் பயோபிக்கில் நடித்து சினிமா, கிரிக்கெட் என இரண்டு தரப்பு ரசிகர்களையும் பெற்றவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கடந்த மாதம் அவரது இறப்புச் செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிய அவர் தன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாக, அவர் மிரட்டப்பட்டார், கொலைசெய்யப்பட்டார் என அவரது இறப்பைச் சுற்றிப் பெரும் சர்ச்சைகள் எழுந்தன. இந்த மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

சுஷாந்த்  சிங்
சுஷாந்த் சிங்

இந்நிலையில், அவரது மரணம் கொலையோ, தற்கொலையோ எதுவாக இருப்பினும் சுஷாந்த் போல ஒரு திறமையான பிரபலமான நடிகர் இறந்ததற்கு 'நெப்போட்டிஸம்' எனும் வாரிசு ஆதிக்கம்தான் காரணம் எனப் பல்வேறு தளங்களில் பேசப்பட்டது. பாலிவுட் திரை உலகில் தற்போது முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் பலரும் திரையுலக வாரிசுகள்தான். கபூர் குடும்பம், பட் குடும்பம், கான் குடும்பம், பச்சன் குடும்பம் எனச் சில குடும்பங்களின் கிளை உறவுகளின் ராஜ்ஜியம்தான் பாலிவுட் சினிமாவில் அதிகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் தேசிய விருது வாங்கிய பிரபல நடிகை கங்கனா ரனாவத். 'பாலிவுட்டில் வாரிசு முன்னுரிமை அரசியல் (nepotism) ஆதிக்கம் இருப்பதாகவும் அதன் காரணமாகவே சுஷாந்த் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்க வேண்டும்' என்றும் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் கங்கனா. அவர் பேசியதைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் முழுதும் நெப்போட்டிஸம் குறித்த விவாதங்கள் பரபரப்பாக அரங்கேறின.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்
www.instagram.com/team_kangana_ranaut

இந்நிலையில், சல்மான் கான், கரன் ஜோஹர் மற்றும் ஏக்தா கபூர் உள்ளிட்ட எட்டுப் பேர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக, நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இப்படி, இந்த மரணம் தொடர்பான எல்லா சர்ச்சைகளையும் ஆன்லைன் எனும் ஆயுதத்தைக் கொண்டு போராடியது அவரது ரசிகர் பட்டாளம். சுஷாந்த் மரணத்திற்குப் பின்பு அவர் கடைசியாக நடித்த ‘Dil Bechara’ எனும் படம் OTT தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

ஆனால், நெப்போட்டிஸம் எனும் பெரும் உயிர்க்கொல்லியை மறக்கவோ, மன்னிக்கவோ மக்கள் தயாராக இல்லை. அதனால்தான், பெரும் பாலிவுட் படங்களின் வாரிசுகள் படையெடுத்திருக்கும் 'சடக் 2' திரைப்படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள் மக்கள்.

பிரபல பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். அவரின் மகள் அலியா பட்தான் கதாநாயகி, அவரின் சகோதரி பூஜா பட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரின் தம்பி ஆதித்ய ராய் கபூர்தான் இந்தப் படத்தின் கதாநாயகன். இவர்கள் தவிர சஞ்சய் தத் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரின் பெற்றோர் சுனில் தத் மற்றும் தாய் நர்கிஸ் தத் சினிமா, அரசியல் எனக் கோலோச்சியவர்கள். இப்படி இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கும் அனைவருமே பாலிவுட் பெருங்குடும்பங்களின் சினிமா வாரிசுகள்.

அலியா பட்
அலியா பட்

திறமையான பிற கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை, வேறு வாய்ப்பு கிடைத்தாலும் அதை அனுமதிப்பதில்லை. இப்படி நேரடியாக, மறைமுகமாகப் பின்னணியற்றவர்கள் மீது பாலிவுட் உலகம் தொடர்ந்து ஒரு அழுத்தம் கொடுப்பதை வெளியுலகத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது சுஷாந்தின் மரணம். கேள்விகேட்கப்படாத வரை தவறுகள் தடையின்றி நிகழும். மக்கள் இப்போது கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். 'நான் டிரெய்லரைப் பார்க்கவில்லை... 'டிஸ்லைக்' செய்ய மட்டுமே வந்தேன்' என கமென்ட் செய்கிறார்கள் ரசிகர்கள். பாலிவுட்டின் இந்த வாரிசு அரசியலுக்கு எதிராகப் பல்வேறு கட்டமான கருத்துகளைத் தெரிவித்துவருகிறார்கள் ரசிகர்கள்.

எல்லாம் சரி. ஆனால், இதனால் ஏதேனும் படக்குழுவினருக்கு பாதிப்பு நேருமா என்றால், இல்லை என்பதே பதில். ஆங்கிலத்தில் 'infamous' என ஒரு வார்த்தை உண்டு. தமிழில் 'அபகீர்த்தி' என்று பொருள். அதாவது ஒரு எதிர்மறையான விஷயத்திற்காக ஒன்று பிரபலமடைவது. அப்படித்தான் பெருங்கவனம் பெற்றிருக்கிறது 'சடக் 2'. படக்குழுவினர் இது 'நெகட்டிவ் பப்ளிசிட்டி' என மகிழ்ச்சியடைந்திருக்கக் கூடும்.

அப்படியானால் மக்களின் எதிர்ப்பு? மாண்டவர் மீள்வதில்லை என இறந்தவனுக்கு அஞ்சலி செலுத்தாமல் விடுவதில்லைதானே! அப்படித்தான் எதிர்ப்பு காட்ட நெஞ்சிலே குத்தப்பட்ட சிறு கறுப்புக் கொடியாக, இறந்த ஒரு கலைஞனுக்கு அஞ்சலியாக, இந்த அழுத்தத்தால் இனி பாலிவுட் சூழல் சிறிதேனும் மாறும் என நம்பிக்கைக் கீற்றாக, அன்பைச் செலுத்தும் அதே மக்கள், அநியாயத்திற்காகக் குரல் கொடுப்பார்கள் என உணர்த்தும் எச்சரிக்கை மணியாக இந்த டிஸ்லைக்குகள் தங்கள் கடமையைச் செய்யும்.