Published:Updated:

வாழ்வின் கணிதம்!

வாழ்வின் கணிதம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்வின் கணிதம்!

சகுந்தலா தேவியின் மகளாக நடித்திருக்கும் சான்யா மல்ஹோத்ரா நல்லதொரு தேர்வு.

ணக்கின் மீது பெரிய நாட்டம் இல்லாதவர்களுக்குக்கூடப் பரிச்சயமானதொரு பெயர் சகுந்தலா தேவி. அவரின் பயோபிக், அதுவும் வித்யாபாலன் எனும்போது அடுத்த தேசிய விருது பார்சல் ரேஞ்சில்தான் படம் இருக்கும் என எதிர்பார்த்துப் பார்த்தால், ஆத்மநிர்பார். ஆம், தன்னிறைவு அளிக்கும் சினிமாவாக அமேசானில் வெளியாகியிருக்கிறது சகுந்தலா தேவி.

வாழ்வின் கணிதம்!

பெங்களூரில் சிறுமியாக இருக்கும்போதே பெரிய கணக்குகளையும் எளிதாகக் கையாள்கிறாள் சிறுமி சகுந்தலா. அவளைப் பள்ளிக்கு அனுப்பும் வாய்ப்பில்லாத, சகுந்தலாவின் ஏழை அப்பாவுக்கு வேறொரு சிந்தனை உதிக்கிறது. சர்க்கஸ் கலைஞரான அவர், சகுந்தலாவை ஒவ்வொரு பள்ளியாய் அழைத்துச் சென்று கணக்கு வித்தை காட்டி லாபம் பார்க்கிறார். அன்பில்லாக் குடும்பத்தை மொத்தமாய் வெறுக்கும் சகுந்தலா அங்கிருந்து லண்டன் பறக்கிறார். காதலும் காதல் நிமித்தமுமாய் பல்வேறு ஏமாற்றங்கள். கிடைக்கும் அன்பையும், கணக்கின் மீதான அதீத ஆர்வத்தால் இகழ்வது, கீழே இழுக்க முற்படும் எதைப் பற்றியும் கவலைகொள்ளாது தன் வாழ்நாளின் இறுதிவரை பறந்த சகுந்தலா தேவியின் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள பெண்களுக்கான பாடங்கள் ஏராளம்.

வித்யா பாலன் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படமும், அவர் நடிப்புக்கான களங்கள். நாற்பது வயது நிரம்பிய வித்யா பாலன் இரட்டை ஜடையுடன் தோன்றும் காட்சியை எந்தவிதக் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடிகிறது. வயது முதிர்ந்து, வாய் உப்பி பாப் கட்டுடன் மகளுடன் சண்டையிடும் காட்சியாகட்டும், மஞ்சள் நிற கூலர்ஸ் பாய் கட் ஸ்டைலில் வருங்கால மருமகனிடம் வாக்குவாதம் செய்யும் காட்சியாகட்டும், வித்யா பாலன் பளிச்சிடுகிறார். சகுந்தலா தேவியின் மகளாக நடித்திருக்கும் சான்யா மல்ஹோத்ரா நல்லதொரு தேர்வு.

வாழ்வின் கணிதம்!

“அது ஏன் ஒரு பெண் திருமணத்துக்குப் பிறகு அம்மா வீட்டில் இருந்தால், சிறையென எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பா அம்மாவுடன் வாழ ஆணுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறதா?’’ “நான் மரம் அல்ல வேர்களால் மண்ணோடு மண்ணாகப் பிணைக்கப்பட்டிருக்க; மனுஷி. கால்கள் இருக்கின்றன. உலகம் முழுக்கப் பயணிப்பேன்’' என வசனகர்த்தா இஷிதா மொய்த்ராவின் வரிகள் விடுதலையைப் பேசுகின்றன. குறிப்பாக ‘‘ஆண்கள் ஏன் எப்போதும் பெண்கள் அவர்களை ஒரு தேவையாகக் கருதவேண்டும் என்றே நினைக்கிறார்கள்?’' என சகுந்தலா, தன்னை உதற எத்தனிக்கும் காதலனைப் பார்த்துச் சொல்லும் வரிகளில் அவ்வளவு ரௌத்திரம். அதேபோல், சகுந்தலா தேவியின் காமெடி ஒன் லைனர்களையும் படத்துக்கு ஏற்றவாறு கணக்கிட்டு எழுதியிருக்கிறார்கள். புராதன லண்டனோ, எழுபதுகளின் பெங்களூரோ காட்சியின் தன்மைக்கேற்ப ஒளிச் செம்மைப்படுத்தியிருக்கிறார் ஜப்பானிய பெண் ஒளிப்பதிவாளர் கெய்கோ நகஹரா. நான் லீனியராகச் செல்லும் கதையை எந்தவிதக் குழப்புமுமின்றி, காலநிலைகளை வைத்து வேறுபடுத்திக் காட்டுகிறது அந்தரா லஹிரியின் படத்தொகுப்பு. வித்தியாசமான கதைக்களங்களைத் தொடர்ந்து காட்சிப்படுத்திவரும் இயக்குநர் அனுமேனனுக்கு திரைக்கதையில் உதவியிருக்கிறார் பெண் நாவலாசிரியரான நயநிகா மஹ்தானி. சம்பிரதாயமாகப் பெண்கள் பணிக்குட்படுத்தப்படாமல், ஒவ்வொருவரின் உழைப்பும் படத்துக்குப் பக்கபலமாய் இருப்பது கூடுதல் ஸ்பெஷல்.

சகுந்தலா தேவியைக் கணித மேதையெனப் பலர் அறிந்திருந்திருப்பார்கள். அவரின் ஜோசிய நம்பிக்கைகளும், தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்தான அவரின் புத்தகமும் பலருக்கும் வெளியே தெரியாத உண்மைகள். இந்திராகாந்திக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்ததைக்கூடக் காட்சிப்படுத்தும் பயோபிக்கில், தன்பால் ஈர்ப்பாளர்கள் பற்றிய அவரது பார்வையை மழுங்கச் செய்திருக்கிறார்கள். இந்தியா மாதிரியான பாரம்பர்ய அரண் போர்த்தப்பட்ட ஒரு தேசத்தில், 1977-ல் தன்பால் ஈர்ப்பில் எந்தத்தவறும் இல்லை எனப் பட்டவர்த்தனமாகப் பேசியவர் சகுந்தலா தேவி. ஆனால், அதையும் படத்தில் ஏளனம் செய்திருப்பது உறுத்தல்.

வாழ்வின் கணிதம்!

அம்பேத்கரின் பார்வையில் காந்தியை நாம் அணுகுவதற்கு‌ ஒப்பானது காந்தியின் மகன் பார்வையில் காந்தியை அணுகுவது. Gandhi my father படத்தில் இருக்கும் பிரச்னைகள் இந்தப் படத்திலும் இருக்கின்றன. சகுந்தலா தேவியின் மகள் அனுபமா பானர்ஜி பார்வையில் சொல்லப்படும் பயோபிக் ஒரு கட்டத்துக்கு மேல், சகுந்தலா அனுபமாவிற்கு எப்படிப்பட்ட அம்மாவாக இருந்தார் என்பதையே நிறுவ முயல்கிறது. ஒருவரின் பயோபிக்கில் பர்சனல் பக்கங்கள் அவசியம்தான் என்றாலும், அது அந்த பிம்பத்தின் மீது பரிதாபத்தை உருவாக்க வேண்டும். La Vie en rose தொடங்கி பல பயோப்பிக்குகள் முதன்மைக் கதாபாத்திரத்தின் தவறுகளைப் பட்டியலிடும். ஆனால், அது துருத்திக்கொண்டு தெரியாது. மாறாக இதில், சகுந்தலா ஏன் இப்படி இருந்தார் எனப் பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறது. அதேபோல், நடந்த சம்பவங்களை சினிமாவுக்காக மாற்றியிருக்கிறோம் என்னும் குறிப்பு எது உண்மை, எது முலாம் பூசப்பட்டது என்னும் கேள்வியை எழுப்பிக்கொண்டே இருக்கிறது.

பெண் ஏன் அடிமையாய் இருக்க வேண்டும் என்பதுதான் சகுந்தலா தேவி, அம்மாவிடமும் மகளிடமும் இறுதிவரை கேட்பது. இறுதிவரையில் அவர் அதில் சமரசம் செய்துகொள்ளவில்லை. இந்தக் காரணத்துக்காகவே படத்திலிருக்கும் குறைகளை மன்னித்து, வரவேற்கலாம்.