Published:Updated:

மும்பை: மாநகராட்சி மருத்துவமனைக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கிய அமிதாப் பச்சன்!

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப்பச்சன் மும்பை மாநகராட்சி மருத்துவமனைக்கு ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை தானமாக வழங்கியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வயதான காலத்திலும் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து தன்னை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொண்டுள்ளார். கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று கூறாமல் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

கொரோனா காலத்தில் அமிதாப்பச்சன் டெல்லியில் உள்ள சீக்கிய குருத்வாரா சார்பாக கொரோனா சிறப்பு மருத்துவமனை அமைக்க ரூ.2 கோடி வழங்கினார். இது தவிர கொரோனா நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ள குருத்வாராக்களுக்கு ரூ.7 கோடி அளவுக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

தற்போது அவர் மும்பை சயானில் உள்ள லோக்மான்ய திலக் மாநகராட்சி மருத்துவமனைக்கு ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை தானமாக வழங்கியிருக்கிறார். அதிநவீன இரண்டு வென்டிலேட்டர்கள், மானிட்டர்கள் உட்பட பல்வேறு மருத்துவ உபகரணங்களை தானமாக வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் மோகன் ஜோஷி சக டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சார்பாக நடிகர் அமிதாப்பச்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அமிதாப்பச்சன் கொடுத்த வென்டிலேட்டர்கள் இரண்டும் அறுவை சிகிச்சை பிரிவில் பயன்படுத்தப்படுவதாகவும், கடந்த சில நாள்களில் 30 நோயாளிகள் இந்த வென்டிலேட்டர் மூலம் பயனடைந்திருப்பதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இரண்டு வென்டிலேட்டர்களும் கம்ப்யூட்டர் உதவியுடன் இயங்கக்கூடிய அதிநவீனமானவை. மூச்சுவிட சிரமப்படுபவர்கள் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு இந்த வென்டிலேட்டர் பயன்படுத்தப்பட்டு வருவதாக டாக்டர் ஜோஷி தெரிவித்தார்.

ventilator
ventilator

தேவைப்படும் நோயாளிகளுக்கு 100 சதவீத ஆக்ஸிஜனை கொடுக்ககூடிய அதில், தேவைக்கு தக்கபடி ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். மேலும் டியூப் மூலம் ஆக்ஸிஜனை நேரடியாக நுரையீரலுக்கு கொண்டு செல்லும் வசதியும் இந்த வென்டிலேட்டரில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் பாலிவுட் பிரபலங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு