Published:Updated:

தாதா சாகேப் பால்கே அமிதாப் பச்சனின் முக்கியமான 5 படங்கள்! #AmitabhBachan

நான்கு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஒருபக்கம், 25-க்கும் மேற்பட்ட, உலக அளவில் வசூலை வாரிக் குவித்தப் படங்கள் மறுபக்கம் என அமிதாப்பின் சாதனைகளை ஒரு கட்டுரைக்குள் அடக்கிவிட முடியாது.

Sholay

அமிதாப் பச்சன்கள் அவ்வளவு எளிதாக எல்லா காலங்களிலும் எல்லா மொழித் திரைத்துறைகளிலும் அமைந்துவிடுவதில்லை. காலங்காலமாகவே ஆண்களின் நடிப்பை இரு எல்லைகளுக்குள் அடக்கிவிட்டது திரைத்துறை. நடிப்பை மட்டுமே முதலீடாகப் போட்டு தன்னை மகாநடிகனாக அடையாளப்படுத்திக்கொள்ளும் வகை ஒன்று. கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்றவர்கள் இதில் அடங்குவர். பெருமக்களின் கவர்ச்சி வடிவமாக இருந்து, தங்களின் திரை-இருப்பை அடையாளமாக்கிக்கொள்வது இரண்டாவது வகை. எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் என எல்லா மாஸ் ஹீரோக்களும் இந்த வகையைச் சார்ந்தவர்கள். மற்றவர்கள் இந்த இரு எல்லைகளின் சாரங்களையும் வெவ்வேறு அளவுகளில் கலந்த கலவைகளாக இருப்பவர்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே இந்த இரு எல்லைகளையும் தொட்டு இரண்டிலும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வார்கள். இந்த வகைமைக்குள் வருவது அவ்வளவு சாதாரண காரியமல்ல. ஒரு சிவாஜி கணேசன், ஒரு அமிதாப் பச்சன், அவ்வளவுதான். அதனால்தான், அமிதாப் பச்சன்கள் அத்தனை எளிதாக உருவாகிவிடுவதில்லை.

நான்கு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஒருபக்கம், 25-க்கும் மேற்பட்ட உலக அளவில் வசூலைக் குவித்த படங்கள் மறுபக்கம் என அமிதாப்பின் சாதனைகளை ஒருகட்டுரைக்குள் அடக்கிவிட முடியாது. தாதா சாகேப் பால்கே விருதைப் பெறவிருக்கும் ஒரு நடிகர் எப்படி இத்தனை காலம் தன்னைத்தானே செழுமைப் படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதையும் சேர்த்தே பேச வேண்டும். தன்னுடைய 50 ஆண்டுக்கால திரைப்பயணத்தில் அமிதாப் அளந்த தூரம் மிக நீண்டது. பல பரிமாணங்கள், பல பாத்திரங்கள் என இன்றுவரை தன்னை மீண்டும் மீண்டும் மீட்டுருவாக்கம் செய்துகொண்டே இருக்கிறார். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அமிதாப்பையே திரையில் காட்ட வேண்டும் என்ற முனைப்பிலேயே நடிக்கிறார். அதில் சில வகை அமிதாப்கள் இங்கே.

2
Don

டான் (1978)

இந்தப் படத்தைத் தவிர்த்துவிட்டு அமிதாப்பின் வரலாற்றை எழுதிவிட முடியாது. உண்மையில், இந்தப் படத்தை வைத்து இந்திய சினிமா வரலாற்றின் சில முக்கிய பக்கங்களையும் எழுதிவிடலாம். ஆன்டி ஹீரோ கதைகள் குறைவாக வந்துகொண்டிருந்த காலத்தில்தான் அமிதாப் ஒரு இரக்கமற்ற டானாக நடித்து, ஹீரோக்களும் வில்லத்தனம் செய்யலாம் என்பதை டிரெண்டாக்கியவர். இன்றளவும் அவருடைய 'மே ஹூன் டான்' பாடல் இந்தி தெரியாத ஊர்களிலும் பரவிக்கிடப்பதன் காரணம், அதில் அமிதாப் இருப்பதால்தான். இந்தப் படம், தமிழில் 'பில்லா' என அந்தச் சமயத்தில் ரீமேக் ஆனது மட்டுமல்லாமல், 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியிலேயே ரீமேக்கானது. அதே காலகட்டத்தில் மீண்டும் தமிழிலும் தெலுங்கிலும் 'பில்லா' ரீமேக் ஆனது. எதிர்காலத்திலும் இந்த ரீமேக் தொடரும். காரணம், அந்தக் கதாபாத்திரத்துக்கு அமிதாப் போட்டுக்கொடுத்த அடித்தளம்.

3
Coolie

கூலி (1983)

வில்லன் செய்யும் ஒரு சிறிய கலவரத்தையடுத்து தொடர்வண்டி நிலையத்தில் ரயிலைப் பிடிக்கும் சமயத்தில் தொலைந்துபோகும் அம்மாவும் மகனும் மீண்டும் பல சிக்கல்கள், சண்டைகளுக்குப் பிறகு இணையும் அதே பழைய மசாலா கதைதான் இது. ஆனால், இது அமிதாப் படம். தொடர்வண்டி நிலையத்தில் தொலையும் மகன் ஏதேதோ ஊர்களுக்குச் சென்று வளர்ந்து அடியாளாகி, வில்லனாகி, பின் அம்மாவைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, அந்தத் தொடர்வண்டி நிலையத்திலேயே கூலியாக வேலை பார்க்கும் கதை. டானாக, சூப்பர் ஹீரோவாக, மில்லினியராகப் பார்க்கப்பட்ட அமிதாப் ஒரு விளிம்புநிலை தினக்கூலியாக நடித்திருந்ததே அப்போதிருந்த இந்தி திரையுலகத்துக்குப் புதிது.

இந்தப் படத்தின் ஒரு முக்கிய சண்டைக் காட்சிப் படப்பிடிப்பின்போது அமிதாப்க்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அவரை எதிர்த்து சண்டையிட்ட நடிகர் புனீத் ஒரு டேபிளை அமிதாப் மீது தள்ளிவிடுவதுபோல் காட்சி. அப்போது அமிதாப்பின் டைமிங் மிஸ் ஆனதால், குடல் பகுதியில் அடிபட்டு கோமாவுக்குச் சென்றார். அந்தச் சமயத்தில் புனீத்துக்கு அமிதாப் ரசிகர்கள் கொலை மிரட்டல் எல்லாம் விடுத்தார்கள். அவர் குணமாகி வரும்வரை புனீத் தலைமறைவாக இருந்ததாகச் சொல்வார்கள். அமிதாப்புக்காக 200 பேர் ரத்த தானம் செய்தார்கள். இந்தியா முழுக்க பல ஊர்களில் அவருக்காக வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் என ஒரு மாத காலத்துக்கு நடந்தன. அமிதாப்பின் மாஸ் எப்படிப்பட்டது என இந்தியத் திரையுலகம் கண்கூடாகப் பார்த்தது இந்தப் படத்தின்போதுதான். அதனாலேயே அந்த ஆண்டின் மிக அதிக வசூல் செய்த இந்தியப் படமானது 'கூலி'.

4
Agneepath

அக்னீபாத் (1990)

சிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருதை அமிதாப் பெற்றது இந்தப் படத்துக்காகத்தான். 'பகவதி' போன்ற பல இந்தியப் படங்களுக்கான முதற்புள்ளி இந்தப் படம். தன்னுடைய அப்பாவைக் கொன்றவர்களைக் கொல்வதற்காக டானாக மாறும் ஒரு பழிக்குப் பழி கதை. ஆனால், வெறும் ஆக்‌ஷன் மட்டுமல்லாமல் கதையின் நாயகன் எப்படித் தந்திரமாக வில்லனைக் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்த்துகிறான் என்பதைத் திரைக்கதை ஆக்கியிருப்பார்கள். அதனால் அமிதாப்க்கு இந்தப் படத்தில் பல பரிமாணங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன. இந்தப் படத்தில் டானுக்காக அவர் எழுதி வைத்திருந்த இலக்கணத்தை அவரே உடைத்து புதிய விதிகளை எழுதினார். எமோஷனலான ஒரு பின்னணியில் இருக்கும் ஒரு டான் தன் லட்சியத்துக்காக எந்த எல்லைவரை செல்வான் என்பதை வெளிப்படுத்தும் கதாபாத்திரம். இந்தியில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் சில படங்களில் அக்னீபாத்தும் ஒன்று. இந்தப் படமும் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் மீண்டும் இந்தியில் 2012-ம் ஆண்டு ரீமேக்கானது. ஆனால், அமிதாப் அளவுக்கு ஹிரித்திக்கால் ஒரு எமோஷனல் டானாக நடிக்க முடியவில்லை என்றே பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

5
Paa

பா (2009)

அமிதாப் பச்சனின் கேரியர் பெஸ்ட் என்றால் இந்தப் படத்தைத்தான் பெரும்பாலான திரைப்பட ரசிகர்கள் சொல்வார்கள். பதின்பருவத்திலேயே வயதான தோற்றம் வரும் `ப்ரோஜீரியா’ என்ற ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவனாக நடித்திருந்தார். இதில் என்ன ஸ்பெஷல் என்றால், அமிதாப்பின் மகனான அபிஷேக் பச்சன், இந்தப் படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்திருந்தார். அமிதாப்பின் ஒரு பெரும் பலம் என எல்லோரும் நம்புவது அவருடைய குரல். அதற்காக ஆல் இந்தியா ரேடியோ லட்சக் கணக்கில் சம்பளம் தரத் தயாராக இருந்ததாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட கம்பீரக் குரலுக்குச் சொந்தக்காரரான அமிதாப் இந்தப் படத்தில் அந்த நம்பிக்கையையும் உடைத்து, முழுக்க முழுக்க வேறொரு தொனியில் பேசியிருப்பார். அதுவே இந்தப் பாத்திரத்துக்கு உயிர் கொடுத்தது. மேலும் மூன்றாவது முறையாக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. இந்தப் படத்தைத் தமிழ் உட்பட சில இந்திய மொழிகளில் ரீமேக் செய்யலாம் என முயன்று, அமிதாப் நடித்திருந்த கதாபாத்திரத்துக்கு யாரும் பொருந்தவில்லை எனப் பல இயக்குநர்கள் முயற்சிகளைக் கைவிட்டார்கள்.

6
Piku

பீக்கு (2015)

ஒரு 70 வயது கடந்த, விசித்திர பழக்கங்கள் கொண்ட முதியவராக நடிப்பது அமிதாப்க்கு இது முதல் முறை இல்லைதான். ஆனால், 'பீக்கு' அவருடைய முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டே இருந்தது. நான்காவது தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. ஃபீல்-குட் வகைப் படங்களில் சேரும் 'பீக்கு'வில் அமிதாப்பின் சேட்டைகள்தாம் ஒட்டுமொத்த திரைக்கதையையும் உயிரோட்டமாக்கும். தொப்பி, ஹியரிங் எய்டு, சைக்கிள், தொப்பை, கண்ணாடி, எரிச்சலூட்டும் தோற்றம் என அந்தக் கதாபாத்திரத்தின் வடிவமைப்பே கொஞ்சம் வேறுபட்டுதான் இருக்கும். அதை அமிதாப் ஏற்று நடித்திருந்த விதம் அத்தனை இயல்பாக இருக்கும். பொதுவாக இந்திப் படங்களில் இப்படியொரு கதாபாத்திரம் இருந்தால் அநியாயத்துக்கு டிராமா செய்துவிடுவார்கள். அது அங்கே வழக்கம்தான். அப்படித் தொடர்ச்சியாக மிகைப்படுத்தப்பட்டுவந்த ஒரு கதாபாத்திர வகையை அமிதாப் இழுத்துப்பிடித்து உண்மைத்தன்மை சேர்த்ததே 'பீக்கு'வின் வெற்றி. இந்தப் படத்தையும் நடிகர் பஞ்சத்தால் யாரும் ரீமேக் செய்ய முன்வரவில்லை.

அடுத்த கட்டுரைக்கு