Published:Updated:

சர்ச்சை நாயகன், `கெரில்லா' ஷுட்டிங் ஸ்டைல்... இருந்தும் அனுராக் ஏன் சினிமாவுக்கு அவசியம்? #AK47

Anurag Kashyap
Anurag Kashyap

இவர் இயக்கிய முதல் படம் இன்றுவரை திரையரங்குகளில் வெளியாகவில்லை. இரண்டாவது திரைப்படம் நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியானது. மூன்றாவது படம் இன்றுவரை யாருக்கும் தெளிவாகப் புரியவில்லை. இவற்றைக் கடந்து, ஏன் சினிமா உலகம் அனுராக் காஷ்யப்பைக் கொண்டாடுகிறது?!

சினிமா மீது காதல் கொண்டு மும்பை வந்தவர், அனுராக் காஷ்யப். அதற்கு முன்புவரை விஞ்ஞானியாகும் கனவோடு டெல்லி பல்கலைக்கழகத்தில் விலங்கியல் படித்துக்கொண்டிருந்தார். சர்வதேசத் திரைப்பட விழா ஒன்றுக்கு நண்பர்களோடு படம் பார்க்கச் சென்றவர், `இனிமே என் வாழ்க்கை சினிமாதான்' என்று கொஞ்சம் துணியையும், நிறைய புத்தகங்களையும் சுமந்துகொண்டு மும்பை வந்தார்.

Anurag Kashyap
Anurag Kashyap

27 ஆண்டுகள் கடந்துவிட்டன. உலக மாற்று சினிமா ரசிகர்கள் கொண்டாடும் இந்திய இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கிறார். நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் திரைப்பட நிறுவனங்கள் இவரது திரைப்படங்களைத் தற்போது தயாரிக்கின்றன. அனுராக்கின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்தியாவில் மாற்று சினிமா மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு அனுராக் காஷ்யப் ஆதர்சம்.

கட்டுக்குள் அடங்காத கலைஞன்!

அனுராக் இயக்கிய முதல் திரைப்படம் `பான்ச்'. 2003-ம் ஆண்டு தணிக்கைத்துறை அதிகாரிகளுக்கான திரையிடலுக்குப் பிறகு, `பான்ச்' தடை செய்யப்பட்டது. ஒரே கல்லூரியில் படிக்கும் ஐந்து நண்பர்கள், நகரம் ஒன்றில் 9 கொலைகளை நிகழ்த்துவதுதான் கதை. 80-களின் இறுதியில் பூனேவில் நிகழ்ந்த ஜோஷி-அப்யங்கர் கொலை வழக்குதான் இந்தப் படத்துக்கு இன்ஸ்பிரேஷன். முதல் படமே தடை செய்யப்பட, இரண்டாவதாக `ப்ளாக் ஃப்ரைடே' (Black Friday) படத்தை இயக்கினார், அனுராக்.

Anurag Kashyap
Anurag Kashyap
Open Magazine

1993 மும்பை குண்டு வெடிப்புகளை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்ட இந்தப் படம், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு வரும்வரை, படம் வெளியிடப்படாது என்று அறிவிக்கப்பட்டது. எனினும் இரண்டு ஆண்டுகள் கழித்து, `Black Friday' வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

அனுராக் காஷ்யப்பையும், தணிக்கைத் துறையுடனான சர்ச்சைகளையும் பிரித்துவிட முடியாது. 2014-ஆம் ஆண்டு வெளியான `அக்லி' (Ugly) இரண்டு ஆண்டுகள் வெளியாகாமல் இருந்தது. புகைப்பிடிக்கும் காட்சிகளின்போது, திரையின் கீழே போடப்படும் புகைப்பிடித்தல் பற்றிய சுகாதாரத்துறையின் எச்சரிக்கை வாசகங்களுக்கு எதிராக அனுராக் வழக்கு தொடுத்தார். காட்சிகளின் நடுவே வாசகங்கள் இடம்பெறுவது பார்வையாளர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் என்பது அவரது கருத்து.

Vikatan

அவர் தயாரித்த `உட்தா பஞ்சாப்' படத்துக்கு சென்சார் போர்டு 94 காட்சிகளை நீக்க உத்தரவிட்டது. அனுராக் அப்போதைய தணிக்கைத்துறையின் தலைவர் பஹ்லாஜ் நிஹலானியை `சர்வாதிகாரியைப்போல நடந்துகொள்கிறார்' என்று கூறி சர்ச்சையில் சிக்கியதோடு, பல்வேறு இயக்குநர்களை ஒன்றிணைத்துப் போராடினார். `உட்தா பஞ்சாப்' வெளியானது. சமீபத்தில் வெளியான `சேக்ரெட் கேம்ஸ்' தொடர் மீதும் சர்ச்சைகள் எழுந்தன.

இப்போதும் நான் விரும்புவதைத்தான் சொல்கிறேன். ஆனால், அதை எப்படிச் சொல்வது என்பதைக் கடந்த கால அனுபவங்கள் வழியாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
அனுராக் காஷ்யப்
Anurag Kashyap
Anurag Kashyap

அனுராக் காஷ்யப்பின் திரைப்படங்கள் வெளிப்படையான அரசியல் பேசுபவை; தணிக்கைத்துறைக்கு எதிரான அவரது போராட்டங்கள், அவரைக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காத கலைஞனாகக் காட்டுகின்றன.

சினிமா காதலன்!

சம்பளமே பெறாமல் தொடங்கியது அனுராக்கின் சினிமா பயணம். தற்போது அவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்குப் பெரிய பட்ஜெட் எதுவும் இல்லை. அவர் தயாரித்த படங்களும் அப்படித்தான். `ஜீரோ பட்ஜெட் சினிமா' என்ற வகையின் மீது விருப்பமுடையவர் அனுராக்.

Anurag Kashyap
Anurag Kashyap
`ஹாரர் ஜானரில் வெப் சீரியஸ்!' - அனுராக் காஷ்யப்பின் அடுத்த பிளான்
ஒரு பாடலுக்கு பல கோடி ரூபாய் பணம் செலவழித்துக் கொண்டிருந்த பாலிவுட் இயக்குநர்களுக்கு நடுவே, நான் ஒரு கோடி ரூபாய் செலவில் என் முதல் திரைப்படத்தை இயக்கினேன்.
அனுராக் காஷ்யப்

`பான்ச்' படப்பிடிப்புக்காக மும்பையில் யாரும் பயன்படுத்தாத பழைய வீடு ஒன்றை இலவசமாகக் கேட்டிருக்கிறார், அனுராக். உரிமையாளர்களும் ஒப்புக்கொள்ள, நண்பர்களோடு அந்த வீட்டின் புறாக்களின் கழிவுகளை மட்டும் 28 மூட்டைகளில் குப்பையில் எறிந்து, வீட்டை சுத்தம் செய்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்தவுடன், அந்த வீடு உரிமையாளர்களுக்கு அளிக்கப்பட்டது. அது தற்போது ஹோட்டலாக இருக்கிறதாம்.

`புதிய இந்தியாவுக்கு வாழ்த்துகள்!' - ட்விட்டரை விட்டு வெளியேறிய அனுராக் காஷ்யப்
`ப்ளாக் ஃப்ரைடே' படத்தின் பல காட்சிகள் நெரிசலான மும்பை பகுதியில், புதிய நடிகர்களை மக்கள் நடுவே நடமாடச் செய்து, கேமரா இருக்கும் இடத்தை யாருக்கும் சொல்லாமல், `கெரில்லா' முறையில் படமாக்கப்பட்டது.

ஜெய்ப்பூர் நகரம் தீபாவளிப் பண்டிகையின்போது, 10 நாள்களுக்கு ஒளியூட்டப்பட்டிருக்கும். `குலால்' படத்துக்காக, அனுராக் ஜெய்ப்பூருக்குப் படக்குழுவினருடன் 6 தீபாவளிகள் பயணித்தார். மாணவர் அரசியல், அதில் தலையிடும் சாதி அதிகாரம், இந்திய அரசுக் கட்டமைப்புக்கு எதிராக இருந்த ராஜபுத்திரர்கள் எனப் பலவற்றைத் தொடும் அந்தப் படம், இவரது மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று.

பாலிவுட் சினிமாவில் மாற்று சினிமா என்ற அலை உருவாகக் காரணமாக இருந்தவர்களுள் அனுராக் காஷ்யப்பும் ஒருவர்.

அனுராக் தமிழ் சினிமா மீது பெரும் மதிப்பு கொண்டவர். அவரது இயக்கத்தில் வெளியான மிகப்பெரிய திரைப்படமான `கேங்க்ஸ் ஆப் வாசேபூர்' தமிழ் இயக்குநர்கள் பாலா, அமீர், சசிகுமார் ஆகியோருக்கான சமர்ப்பணத்தோடு தொடங்கும். தனது வேர்களைத் தேட இந்த மூவரின் திரைப்படங்களும் தனக்கு உதவியாக இருந்ததாகக் கூறுகிறார், அனுராக்.

Anurag Kashyap
Anurag Kashyap
Imaikka Nodigal

இயக்குநர், தயாரிப்பாளர் மட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளாக நடிப்பிலும் அனுராக் கலக்கி வருகிறார். `நடிப்பது பெரிதாக ஈர்க்கவில்லை. எனினும் அதில் நிறைய பணம் வருகிறது. நானும் பெரிய உருவத்துடன், பெரிய கண்களுடன் வில்லன்போல இருக்கிறேன். ஒருநாள் வேலை செய்தால் போதும், நல்ல சம்பளம் கிடைக்கிறது' என்கிறார். தமிழில் `இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் அறிமுகமானார், அனுராக்.

பேசாபொருளைப் பேசத் துணிந்தவர்!

அனுராக் காஷ்யப் இயக்கிய படங்கள் பெரும்பாலும் இந்திய நகரங்களில் வாழும் சாதாரண மனிதர்களின் ஆழ்மனதின் இருண்ட பக்கங்களைப் பற்றியவை. `பான்ச்' மும்பை வாழ் இளைஞர் ஐவர் செய்த கொலைகளைப் பற்றிப் பேசியது. `ப்ளாக் ஃப்ரைடே' மிகப்பெரிய அரசியல் பின்னணியுள்ள மனிதர்கள் எளிய மனிதர்களைக் கடவுளின் பெயரால் சுரண்டுவதையும், எளிய மனிதர்கள் மீதான அரசுப் பயங்கரவாதத்தையும் பேசியது.

Anurag Kashyap
Anurag Kashyap

`கேங்க்ஸ் ஆப் வாசேபூர்' ஐந்தரை மணி நேரத் திரைப்படம். சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவின் ஒரு பகுதியில் நிகழ்ந்த அதிகாரத்துக்கான போட்டியைப் பேசுகிறது. அவர் சமீபத்திய படைப்புகளான `முக்காபாஸ்', `மன்மர்ஸியான்' ஆகிய இரண்டுமே இதுவரை இந்தியப் பார்வையாளர்கள் பார்த்த கதைகள். ஆனால், வெவ்வேறு அரசியல் கோணங்கள்.

`முக்காபாஸ்' உத்தரப் பிரதேசத்தில் வாழும் குத்துச்சண்டை வீரனின் கதை. சம கால அரசியல் நிகழ்வுகள், பசு குண்டர் படுகொலைகள், ஜெய் ஸ்ரீராம் எனப் பலவற்றை படத்தின் கதையோடு சேர்த்திருந்தார், அனுராக். `மன்மர்ஸியான்' முக்கோணக் காதல் கதைதான் என்றாலும், திருமணம் என்ற நிறுவனமயமாக்கப்பட்ட உறவின் அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்கியிருந்தது.

Anurag Kashyap
Anurag Kashyap

மோடியின் ஆட்சியைத் தனது திரைப்படங்களிலும், ட்விட்டர் பக்கத்திலும் கடுமையாக விமர்சித்து வந்தார் அனுராக். கடந்த மாதம் தன் பெற்றோருக்கு மிரட்டல் வருவதாலும், தன் மகள் ட்ரோல்களுக்கு இலக்காவதாலும், ட்விட்டரை விட்டு விலகுவதாக அவர் அறிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தோல்விகளைக் கண்டு துவளாதவர்!

மிகச்சிறிய பட்ஜெட்டில் திரைப்படங்களை இயக்கிவந்த அனுராக்கிற்கு `பாம்பே வெல்வெட்' மிகப்பெரிய பரிசாக அமையும் என்று நம்பினார். 120 கோடி பட்ஜெட்டில் ரன்பிர் கபூர், அனுஷ்கா ஷர்மா போன்ற ஸ்டார்களுடன், மும்பை தோன்றிய கதையைப் படமாக்கினார். யாருமே எதிர்பாராத அளவில், தோல்வியைத் தழுவியது `பாம்பே வெல்வெட்'. பாலிவுட் வரலாற்றில் மிகப்பெரிய தோல்விகளுள் ஒன்றான இந்தப் படம் ஈட்டிய மொத்த வசூல் 43 கோடி ரூபாய் மட்டுமே. 

Anurag Kashyap
Anurag Kashyap

முதல் படத்துக்குத் தடை; இரண்டாவது படமும் ஏறக்குறைய அதே நிலைமைதான். மூன்றாவது படமான `நோ ஸ்மோக்கிங்' இன்றுவரை யாருக்கும் புரியவில்லை. இப்படியான சூழலில் அனுராக்கின் பெர்சனல் வாழ்க்கையும் பிரச்னைக்குரியதாக மாறியது. அவர் காதலித்து, திருமணம் செய்த ஆர்த்தி பஜாஜ் அவரை விட்டு விலகினார். 

அனுராக் முயற்சியைக் கைவிடவில்லை. தேவதாஸ் கதையைத் தனது பாணியில் அவர் இயக்க, மிகப்பெரிய ஹிட்டானது. அதில் நடித்த கல்கி கோச்லினை மணந்துகொண்டார். அந்த வாழ்க்கையும் நீடிக்கவில்லை. இருவரும் பிரிந்தனர். `பாம்பே வெல்வேட்' தோல்வி நிகழ்ந்ததும் அப்போதுதான்.

`இந்த விளையாட்டில் வெற்றி, தோல்வி இல்லை; அழிவு மட்டுமே!' - #SacredGamesSeason2 ஆடும் ஆட்டம்!
தோல்வியைச் சந்திக்கும் அந்த ஒரு இரவு மட்டுமே அதைப் பற்றி சிந்திப்பேன். மறுநாள் காலை எழுந்தவுடன், அடுத்த படத்துக்கான வேலையைத் தொடங்கிவிடுவேன்.
அனுராக் காஷ்யப்

அதன் பிறகு, அனுராக் மிகப்பெரிய பட்ஜெட் படங்களின் பக்கம் செல்லவில்லை. தோல்விகளுக்குப் பிறகும், தனது அசாத்திய திறமையை மீண்டும் நிரூபித்தார். தனது முன்னாள் மனைவிகளுடன் நல்ல உறவைப் பேணி வருகிறார். கடந்த மாதம் அனுராக் இயக்கத்தில் வெளியான `சேக்ரெட் கேம்ஸ்' தொடரின் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர், ஆர்த்தி பஜாஜ். முக்கிய வேடத்தில் நடித்தவர் கல்கி கோச்லின்.

Anurag Kashyap
Anurag Kashyap

தற்போது அனுராக் காஷ்யப் திரைப்படங்கள் இயக்குகிறார்; நெட்ஃப்ளிக்ஸ் தொடர்கள், குறும்படங்கள் இயக்குகிறார். பிற மொழித் திரைப்படங்களிலும் திரைக்கதைகளில் பணியாற்றுகிறார். நடிகராக தன் பணியைத் தொடர்கிறார். சினிமாவின் பல்வேறு தளங்களில் பணியாற்றினாலும், வெவ்வேறு கதைக்களங்களில் பயணித்தாலும், என்றும் மாறாமல் இருக்கிறது அவரது காட்சிமொழியும், முத்திரையும். அதுவே அவரது தனித்த அடையாளம். அதுவே அவரது ஸ்பெஷலும்கூட! 

அடுத்த கட்டுரைக்கு