`பத்ரி', `சில்லுனு ஒரு காதல்', `கண்ணை நம்பாதே' போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளவர் நடிகை பூமிகா சாவ்லா.
இந்தி, தெலுங்கு, தமிழ் எனப் பல மொழிகளில் நடித்து வரும் இவர் கடந்த ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியான சல்மான்கானின் 'Kisi Ka Bhai Kisi Ki Jaan' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளியான `வீரம்' படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்படது. இப்படம் வெளியானதையொட்டி நேர்காணல் ஒன்றில் பேசிய பூமிகா, மூத்த ஆண் நடிகர்கள் தங்களைவிட மிகவும் வயது குறைந்த பெண்களுடன் ஜோடியாக நடிப்பது, ரொமான்ஸ் செய்வது கொஞ்சம் கூட நியாமாக இல்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள பூமிகா, "பெண் நடிகர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆண் நடிகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் நிலை கமர்சியல் படங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மூத்த ஆண் நடிகர்கள் இன்னும் ஹீரோக்களாகவே நடிக்கிறார்கள், ஆனால் பெண் நடிகர்கள் திரைத்துறையில் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர். ஆண்களைப்போல பெண் நடிகர்களால் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க முடிவதில்லை. அது நடப்பது மிக அரிது. இந்த நிலையைத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும்தான் மாற்ற வேண்டும். இப்போது வெப் சீரிஸ்களிலும், ஓடிடி-யிலும் இந்த நிலை மாறிக்கொண்டிருக்கிறது.
அதுவும் மூத்த ஆண் நடிகர்கள் தங்களைவிட மிகவும் வயது குறைந்த பெண்களுடன் ஜோடியாக நடிப்பது, ரொமான்ஸ் செய்வது கொஞ்சம் கூட நியாயம் இல்லை. பெண் நடிகர்கள் அல்லது நான் என் குழந்தை வயதில் இருப்பவர்களிடம் ரொமான்ஸ் செய்து நடித்தால் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? ஆனால், ஆண் நடிகர்கள் அதைச் செய்தால் மட்டும் ஏற்றுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம். சினிமாவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஆண்கள் தங்களைவிடவும் மிகவும் வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்தால் ஏற்றுக் கொள்கிறார்கள். அதையே பெண் செய்தால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்" என்று பேசியுள்ளார்.