ட்விட்டரைப் போலவே ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கும் ப்ளூ டிக்கை சந்தா முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா நிறுவனம். அதுமட்டுமல்லாமல் இந்த ப்ளூ டிக்கை வழங்கப் பயனர்களின் அரசாங்க ஐடிக்கள் சரிபார்க்கப்படும் எனவும், இதைப்பெற iOS பயனாளர்களுக்கு 14.99 டாலரும் மற்ற பயனாளர்களுக்கு 11.99 டாலரும் சந்தாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன எனவும் மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

இந்த ப்ளூ டிக் சந்தாவை கடந்த ஆண்டு எலான் மஸ்க் ட்விட்டரில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியபோது அதற்கு எதிராகப் பல விமர்சனங்கள் எழுந்தன. எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கையால் பலர் ட்விட்டரை விட்டு வெளியேறுவதாக எச்சரித்திருந்தனர். இதையடுத்து தற்போது மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் அதே ப்ளு டிக் சந்தா முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஆனால், எலானுக்கு வந்த எதிர்ப்புகள் எதுவும் மார்க் சக்கர்பெர்க்கிற்கு வரவில்லை. இந்நிலையில் எலான் கஷ்டப்பட்டுப் போட்ட பாதையை எளிதில் காப்பியடித்து லாபம் ஈட்டுகிறார் மார்க் சக்கர்பெர்க் எனப் பலர் கூறிவருகின்றனர்.
அந்த வகையில் பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் இந்த ப்ளூ டிக் விவகாரத்தில் எலானை ஆதரித்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், "இதைச் சாத்தியமாக்க எலான் மஸ்க் இந்த ஒட்டுமொத்த உலகத்துடனும் போராடினார். ஊடகங்கள், மற்றும் ட்விட்டர் பயனர்கள் ட்விட்டரைவிட்டு வெளியேறுவதாக எச்சரிக்கை விடுத்தனர். அவர் அனைத்து அம்சங்களையும், திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பே பலர் அவரது யோசனைகளைக் காப்பியடித்துச் செயல்படுத்தி வருகின்றனர். அதிபுத்திசாலியாக இருந்தாலே இதுதான் பிரச்னை!" என்று கூறியுள்ளார்.