Published:Updated:

"உண்மையான ஹீரோக்களைச் சந்தித்தேன்!"- காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்களுடன் அக்‌ஷய் குமார்

 அக்‌ஷய்குமார்
அக்‌ஷய்குமார்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் காஷ்மீர் எல்லையில் துணை ராணுவ வீரர்களைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தியதோடு அவர்களுடன் கலந்துரையாடினார்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பல முறை காஷ்மீர் சென்று எல்லையில் நாட்டை பாதுகாத்துக்கொண்டிருக்கும் ராணுவ வீரர்களைச் சந்தித்து ஊக்கப்படுத்தி இருக்கிறார். தற்போது மீண்டும் அவர் காஷ்மீர் சென்றுள்ளார். சிறப்பு ஹெலிகாப்டரில் காஷ்மீர் எல்லையோர கிராமத்திற்குச் சென்ற அவரை எல்லை பாதுகாப்புப் படையினர் வரவேற்றனர். பின்னர் அவர் எல்லை பாதுகாப்புப் படை இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவைச் சந்தித்து பேசினார். இருவரும் சேர்ந்து மற்ற படை வீரர்களுடன் உரையாடினர்.

அதோடு இருவரும் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லை பாதுகாப்புப் படையினரையும் சந்தித்து கலந்துரையாடினர். அதனை தொடர்ந்து எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு நாட்டிற்காக உயிரை விட்ட ராணுவ வீரர்களுக்காக அமைக்கப்பட்டு இருக்கும் நினைவுச்சின்னத்தில் இருவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நினைவு சின்னத்தில் மரியாதை
நினைவு சின்னத்தில் மரியாதை

எல்லை பாதுகாப்புப் படையினர் இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

'இந்தியா, தன் 75வது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைக்கும் நிலையில் நடிகர் அக்‌ஷய் குமார் மீண்டும் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களை பார்க்க வந்திருந்தார்' என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்தச் சந்திப்பு வடக்கு காஷ்மீரில் உள்ள பந்திபோரா மாவட்டத்தில் இருக்கும் குரீஸ் பகுதியில் உள்ள நீரு என்ற கிராமத்தில் நடைபெற்றது. அக்‌ஷய் குமாரும் தனது இன்ஸ்டாகிராமில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், "துணிச்சலுடன் எல்லையை பாதுகாக்கும் எல்லை பாதுகாப்புப் படையினருடன் இன்றைய பொழுதைக் கழித்தது மிகவும் மறக்க முடியாதது. இங்கு வருவது எப்போதும் ஓர் இனிமையான அனுபவம். உண்மையான ஹீரோக்களைச் சந்தித்திருக்கிறேன். என் நெஞ்சம் எங்கும் அவர்களுக்கான மரியாதை மட்டுமே இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு