சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

நான் ஷாருக் கானின் வெறித்தனமான ரசிகன்!

ராஜ்குமார் ராவ்
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜ்குமார் ராவ்

நான் ரொம்ப லக்கி. இங்கே என்னைவிட திறமைசாலிகள் இருக்கிறார்கள். ஆனாலும் எனக்கு அப்படி வாய்ப்புகள் வருகிறதென்றால், ஏதோ திறமை என்னிடம் ஒளிந்திருக்கிறது என்பதாகத்தானே அர்த்தம்.

பாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன், RR என்று செல்லமாக அழைக்கப்படும் ராஜ்குமார் ராவ். பத்து வருடங்களுக்கு முன் பாலிவுட்டில் தடம் பதிக்கப் போராடிக் கொண்டிருந்தவர், இன்று RR-ன் கால்ஷீட்டுக்காக பாலிவுட்டே காத்துக் கிடக்கிறது. ‘ஷாஹித்', ‘நியூட்டன்', ‘ட்ராப்டு', ‘ஸ்த்ரீ', ‘பதாய் தோ', ‘சிட்டி லைட்ஸ்', ‘லூடோ', ‘சலாங்', ‘பரேலி கி பர்பி', ‘மோனிக்கா ஓ மை டார்லிங்’ போன்ற படங்களில் தன் தேர்ந்த நடிப்பால் நம்மை வசீகரித்த ராஜ்குமார் ராவுடன் ஒரு சிட்-சாட்...

‘‘2010-ல் திபாகர் பானர்ஜியின் ‘லவ் செக்ஸ் அவுர் தோஹா' படத்தில் சின்ன ரோலில் அறிமுகமானீர்கள். 2023-ல் அனுபவ் சின்ஹாவின் ‘பீட்' படத்தில் நாயகன்... 12 வருட இடைவெளியில் மிகப்பெரிய மாற்றம். இதை எப்படி உணர்கிறீர்கள்?’’

‘‘30 படங்களைத் தாண்டிவிட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். சினிமாவை நிறைய தெரிந்துகொண்டிருக்கிறேன். சினிமாவை என் வாழ்க்கையிலிருந்து தினமும் கற்றுக் கொள்கிறேன். எனக்கு ஒவ்வொரு நாளும் புதுசாய் இருக்கிறது. எதை நினைத்து சினிமாவுக்கு வந்தேனோ அதை ஓரளவு நெருங்கிவிட்டதாக உணர்கிறேன். இன்னும் சவாலான பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் மிச்சமிருக்கும் வாழ்க்கைக்கான ஆசை!’’

ராஜ்குமார் ராவ்
ராஜ்குமார் ராவ்

‘‘சவாலான பாத்திரங்கள் என்றாலே டைரக்டர்களின் சாய்ஸில் நீங்கள் இருக்கிறீர்கள். எப்படி அந்த மேஜிக் நிகழ்கிறது?’’

‘‘நான் ரொம்ப லக்கி. இங்கே என்னைவிட திறமைசாலிகள் இருக்கிறார்கள். ஆனாலும் எனக்கு அப்படி வாய்ப்புகள் வருகிறதென்றால், ஏதோ திறமை என்னிடம் ஒளிந்திருக்கிறது என்பதாகத்தானே அர்த்தம். தவிர, நீங்கள் சொல்வதுபோல் ஒரே இரவில் இந்த மாற்றம் நிகழவில்லை. மிகப்பெரிய போராட்டம் இருக்கிறது. சவாலான நாள்களைக் கடந்துதான் இந்த நிலையை எட்டியிருக்கிறேன். என் முதல் சம்பளம் 300 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா..? அதுதான் நிஜம். எனக்கு சினிமா பின்புலம் கிடையாது. மிடில் கிளாஸ் பையனான நான் ஹரியானா மாநிலத்தின் குருகிராமிலிருந்து டெல்லிக்குப் படிக்க வந்தபோது தியேட்டர் குரூப் தொடர்பு கிடைத்தது. கல்லூரிப் படிப்பை நாடகத்துறை ஆட்களால்தான் முடித்தேன். அவர்களின் வழிகாட்டலில் புனே திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சியில் இணைந்தேன். நிறைய நாடகங்களுக்கு சன்மானம் கிடைக்காது. பல நாள்கள் பிஸ்கெட்டுகளை மட்டுமே சாப்பிட்டு தண்ணீர் குடித்து வாழ்ந்திருக்கிறேன். அதை கஷ்டமாக நினைத்ததில்லை. ஒரு நாளுக்கு 70 கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்திருக்கிறேன். வெறும் 18 ரூபாய் என் பேங்க் பேலன்ஸாக இருக்கும்போது மாதக் கடைசியில் நண்பர்கள் என்னை சாப்பிடவைத்துப் பார்த்துக் கொண்டார்கள். அன்று நான் என்னை வருத்திக் கொண்டு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாகக் கற்றுக் கொண்டவை இன்று என் சினிமா கரியருக்கு அவ்வளவு உதவிகரமாக இருக்கின்றன. வாழ்க்கையில் எப்போதும் நான் Plan A மட்டுமே வைத்துக்கொள்வேன். Plan B பற்றி யோசிப்பதே இல்லை. DO or DO தான். எனக்கு Plan A என்பது எப்படியாவது பாலிவுட்டில் நடிகனாக ஆவது மட்டும்தான்!''

‘‘உங்கள் கேரக்டர்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாய் இருந்தாலும், பக்கா மிடில் க்ளாஸ் பையன் பாத்திரம் என்றாலே உங்கள் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லையே..?''

‘‘எனக்கு சிக்ஸ் பேக் கிடையாது. உயரமும் சராசரிதான். என்னால் சூப்பர் ஹீரோ பாத்திரத்தில் நடிக்க முடியாது. அதனால் எளிமையான கதைகளுக்கு என்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ரசிகர்களின் ரசனை மாறிவிட்டது. ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயாங்கே', ‘தூம்' போன்ற படங்களைத் தாண்டி யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். யதார்த்தமான நாயகர்களை... தங்களிலிருந்து ஒருவன் ஹீரோவாகக் காட்டப்படுவதை மிகவும் ரசிக்கிறார்கள். நீங்கள் சொன்னதுபோல் நான் நடிக்கும் பாத்திரங்கள் மிடில் க்ளாஸ் இளைஞனைப் பிரதிபலித்தாலும், ஒவ்வொரு பாத்திரத்திலும் அந்தக் கதையோடு ஒன்றிய ஒரு ஆளாய் என்னை வித்தியாசப்படுத்திக் காட்டக் கடுமையாக உழைக்கிறேன். நான் அதைச் செய்யாவிட்டால் ராஜ்குமார் ராவ் ஸ்டீரியோ டைப் என்று என்னை மக்கள் ஒதுக்கியிருப்பார்கள். ஆனால், ‘கய் போ சே' படத்திலிருந்து ‘பீட்' வரை என்னை அந்த கேரக்டராகவே பார்க்கிறார்கள். அதற்காக சிக்ஸ் பேக் வைக்க மாட்டேன், ஆக்‌ஷன் படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. அப்படி ஒரு சூழல் வந்தால் நிச்சயம் நடிப்பேன். 100 Crores club படங்களில் நாயகனாய் நடிப்பதைவிட ஒரு பானி பூரி விற்கும் பையன் ஆசையோடு போய்ப் பார்க்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை... எனக்கு மக்களில் ஒருவனாக நடிப்பது ரொம்பப் பிடிக்கிறது!''

ராஜ்குமார் ராவ்
ராஜ்குமார் ராவ்

‘‘அதேபோல் வெரைட்டியாக நடிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். காதலியைத் தவிர இன்னொரு பெண்ணுடன் உறவில் இருக்கும் ஹைடெக் இளைஞனாக ‘மோனிக்கா ஓ மை டார்லிங்'கிலும், ‘பதாய் தோ'வில் தன் பால் ஈர்ப்பு உள்ளவராகவும் வந்தீர்களே...''

‘‘சவாலான பாத்திரங்கள் செய்வதை ரொம்பவே விரும்புகிறேன். இந்த இரண்டு படங்களின் இயக்குநர்கள் வாசன் பாலாவும், ஹர்ஷவர்தன் குல்கர்ணியும் கதை எழுதும்போதே என்னை மனதில் வைத்துதான் எழுதியதாகச் சொன்னார்கள். இந்த இரண்டு படங்களிலும் நாயகன் பாத்திரம் பெரிதாக்கப்பட்ட பிம்பத்தில் இல்லை. ஹீரோக்கள் என்றாலே அப்பழுக்கற்றவர்களாகவும், புனித ஆத்மாக்களாகவும் காட்டப்படுவதில் இருந்து விலகி யோசித்து எழுதப்பட்ட கேரக்டர்கள் அவை. எல்லோருக்குள்ளும் gray side இருக்கும். நிஜ வாழ்க்கையில் நாம் அப்படித்தான் இருக்கிறோம். அதை அவ்வாறு காட்டுவதில் என்ன சிக்கல்? அப்புறம் முக்கியமாக, Grey or Gay பாத்திரங்கள் ஏற்று நடிப்பதில் ஹீரோக்கள் தயக்கம் காட்டக்கூடாது என்பது என் எண்ணம். Gay பாத்திரத்தில் நடிப்பது என்னுடைய Brand value-வைக் குறைக்காது என்று நம்புகிறேன். எல்லாப் பாத்திரங்களிலும் ராஜ்குமார் ராவ் நடிப்பார் என்பதுதான் எனக்கான Brand value. நான் அப்படி நடிப்பதால் சொல்லவில்லை. ஒரு நடிகனாக எல்லாவிதப் பாத்திரங்களையும் ஏற்று நடிப்பது என் கடமை!’’

‘‘ஓ.டி.டி-யின் அபரிமிதமான வளர்ச்சியால் நிறைய பேர் எல்லா மொழிப் படங்களையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியிருக்கும்போது ஏன் தெலுங்குப் படமான HIT (Homicide Intervention Team)-ஐ இந்தியில் ரீமேக் செய்து நடித்தீர்கள்?''

‘‘முதல் காரணம், அந்தப் படத்தின் திரைக்கதை திருப்பங்கள் நிறைந்ததாக இருந்தது. இரண்டாவது காரணம், அந்தப் படத்தின் இயக்குநர் சைலேஷே இந்தியில் ரீமேக் செய்ய என்னை அணுகினார். மூன்றாவது காரணம், ஒரிஜினலைப் பிரதி எடுக்காமல் அப்படியே வட இந்தியச் சூழலுக்கு ஏற்ப புதிதாகத் திரைக்கதை அமைத்திருந்தார். என்னை நிறைய தென்னிந்தியப் படங்கள் அப்படி ஈர்க்கின்றன. சமீபத்தில் ‘காந்தாரா’ அவ்வளவு பிடித்திருந்தது. நல்ல சினிமா வாய்மொழியாகவே விளம்பரம் தேடிக் கொள்ளும் என்பார்கள். ‘காந்தாரா’வைப் பற்றி எங்கு திரும்பினாலும் சினிமா வட்டாரத்தில் பேசினார்கள். ‘நீ காந்தாரா பார்த்துவிட்டாயா?' என என்னிடமே பத்துப் பேர் கேட்டார்கள். சினிமாவில் ஜெயிக்க பெரிய பட்ஜெட் தேவையில்லை. சரியான கதையும் நல்ல டீமும் அமைந்தாலே போதும். அதுவே இந்தியா முழுவதும் உங்களை அழைத்துச் செல்லும்!''

‘‘அதென்ன ஷாருக் கான் மீது அவ்வளவு அன்பு. எல்லா இடங்களிலும் அவரைப் பற்றிப் பேசுகிறீர்கள்?’’

‘‘நான் அவரின் வெறித்தனமான ரசிகன். என்னைப் போன்ற கடைக்கோடி கிராம இளைஞனுக்கு அவரைவிட தன்னம்பிக்கையை யாரால் தர முடியும். சினிமாதான் வாழ்க்கை என சிறுவயதில் முடிவெடுத்ததே ஷாருக் கானைப் பார்த்துதான். அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று ஒரு ரசிகனாய் கனவு கண்டேன். என்றாவது ஒருநாள் அவரை சந்திப்பேன் என்று உறுதியாக நம்பினேன். ‘ஷாஹித்' படம் பார்த்துவிட்டு ‘உனக்கு தேசிய விருது கிடைக்கும்' என்று ஷாருக் வாழ்த்தினார். எனக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அவருடன் சேர்ந்து போட்டோ எடுக்க ஆசைப்பட்ட எனக்கு அவர் வாழ்த்து கிடைத்தது எவ்வளவு பெரிய கொடுப்பினை. அவரைப் பற்றிப் பேசினால் வெறிபிடித்த ஷாருக் கான் ரசிகனாய் மாறிவிடுவேன்!''

ராஜ்குமார் ராவ் - பத்ரா
ராஜ்குமார் ராவ் - பத்ரா

‘‘நடிப்பைத் தாண்டி பர்சனலாக உங்கள் நேரம்... ஆர்வம்... கனவு?''

‘‘என் தந்தை, ‘எப்போதும் ஓடிக் கொண்டே இரு... நீண்ட ஓட்டத்துக்குப் பிறகு உன் இளைப்பாறலுக்குக் கடவுள் சொர்க்கத்தைப் பரிசளிப்பார்' என்று சொல்வார். இன்று கோடிகளில் சம்பாதிப்பதைப் பார்த்துவிட்ட என் பெற்றோர், அடுத்தடுத்து வயது முதிர்ச்சியால் இறந்துபோனார்கள். அவர்களின் கடைசிக்காலத்தில் என் பக்கத்தில் வைத்து அவர்களைப் பார்த்துக்கொண்ட மனநிம்மதி இன்னும் நூறு கோடிகள் சம்பாதித்தாலும் கிடைக்காது. என்னுடன் ‘சிட்டி லைட்ஸ்' படத்தில் ஜோடியாக நடித்த என் தோழி பத்ரலேகாவும் நானும் திருமணம் செய்து கொண்டோம். ஏற்கெனவே நிறைய காதல் எங்களுக்குள் இருந்தாலும் திருமணம் இன்னும் கூடுதல் காதலை விதைத்திருக்கிறது. திருமண நாளன்று பத்ரா அணிந்த மங்கல ஆடை என்னை மீண்டும் அவள் மேல் காதலில் விழ வைத்தது. எங்கள் இருவருக்கும் சினிமாத்துறையில் நிறைய கனவுகள் இருப்பதால், ஒருவரை ஒருவர் ஷூட்டிங் பிஸியில் மிஸ் செய்தாலும் நிறைய காதலிக்கிறோம். காதல் இந்த வாழ்வை இன்னும் அழகாக்கிவிடுகிறது!''