Published:Updated:

``விகடன் பிரஸ் மீட்ல என்னை திறமையானவர்னு கமல் சார் சொன்னப்போ..!''- செம சந்தோஷ ஷஷாங்க் அரோரா

ஷஷாங்க் அரோரா
ஷஷாங்க் அரோரா

பாலிவுட் நடிகர் ஷஷாங்க் அரோரா பேட்டி!

பாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன் ஷஷாங்க் அரோரா. வித்தியாசமான கேரக்டரைக் கையிலெடுத்து அதை இன்னும் மெருகேற்றி எதார்த்த நடிப்பில் மக்களின் மனம் கவரும் கலைஞன். நடிகன் மட்டுமல்ல இசையமைப்பாளரும்கூட. சினிமா, வெப்சீரிஸ் என பிஸியாகச் சுழன்றுகொண்டிருக்கும் இவரின் கால்ஷீட்டுக்கு செம டிமாண்ட். சமீபத்தில் நடந்த விகடன் பிரஸ்மீட்டில் திறமையான நடிகர்களாக ஃபகத் ஃபாசில், நவாசுதின் சித்திக்கி ஆகியோரோடு ஷஷாங்க் அரோராவின் பெயரையும் குறிப்பிட்டுச் சொன்னார் கமல்ஹாசன். ஷஷாங்க் அரோராவிடம் பேசினேன்.

``நடிப்பு, இசைனு ரெண்டும் படிச்சிருக்கீங்க. சின்ன வயசில் நடிகராகணும்னு ஆசைப்பட்டீங்களா, இசைக் கலைஞராகணும்னு ஆசைப்பட்டீங்களா?"

``நான் சயின்டிஸ்ட் ஆகணும்னு ஆசைப்பட்டேன். எனக்கு ஃபிசிக்ஸ் சப்ஜெக்ட்னா அவ்ளோ பிடிக்கும். அதுக்குப் பிறகுதான் சினிமா ஆசையெல்லாம். கூடவே மியூசிக் மேல ஆர்வம் இருந்தது. ஆனா, அதைப் பணம் சம்பாதிக்கிறதுக்காக கத்துக்கலை. எந்த நிலையிலும் என் இசையை விற்கமாட்டேன். அப்படிப் பணத்துக்காக இசையமைச்சா அந்த இசை செத்துப்போய்தான் வரும்கிறது என்னுடைய நம்பிக்கை. மியூசிக்ல எனக்குப் பெரிய திறமை எல்லாம் கிடையாது. எனக்குள்ள இருந்து வர்ற அந்த சின்ன இசையைப் பணமாக்கக் கூடாதுங்கிறதுல உறுதியா இருக்கேன். இசை என் சந்தோஷத்துக்காக மட்டும்தான். `மூத்தோன்' படத்துல கீத்து மோகன்தாஸ் கேட்டத்துக்காக ஒரு பாட்டு கம்போஸ் பண்ணேன். அதுக்கு நான் சம்பளம் வாங்கலை."

``இந்தத் தலைமுறையின் சிறந்த நடிகர்கள்னு உங்க பெயரை கமல்ஹாசன் சொல்லியிருக்கிறார். இதை எப்படிப் பார்க்குறீங்க?"

ஷஷாங்க் அரோரா
ஷஷாங்க் அரோரா

``ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. கமல் சார் என்னைப் பற்றி பேசியிருக்கிறதா என் நண்பர்களும் என் அப்பாவும் சொன்னாங்க. உடனே கமல் சார் பேசின அந்த விகடன் வீடியோவைப் பார்த்தேன். கொஞ்ச நேரம் அப்படியே வானத்துல டிராவல் பண்ணிக்கிட்டிருந்தேன். அவர் சொன்ன வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கு. கடுமையா உழைச்சு ஒருநாள் கமல் சார் சொன்ன வார்த்தைகளுக்கு இன்னும் தகுதியாவேன். அதீத திறமையுடன் பணிவும் கமல் சார் மாதிரியான மாஸ்டர்கள்கிட்டதான் இருக்கும். எவ்வளவு பெரிய நடிகரா இருந்தாலும் பணிவு இல்லைன்னா, நல்ல கலைஞனா இருக்க முடியாது. அவருக்கு நடனம், இயக்கம், திரைக்கதை, இசைன்னு எல்லாமே தெரியும். அவர் ஒரு துறையை மட்டும் சார்ந்தவரல்ல. தவிர, நிறைய புது விஷயங்களைக் கொண்டுவந்து சினிமாவின் முன்னோடியாகவும் இருக்கார். எப்படி பன்முகத் திறமையா இருக்கிறதுனு கமல் சார்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டிருக்கேன். சவாலை ஏற்க மறுத்தால் நாம வளரவே முடியாது. அதனால நிறைய சவால்களை எதிர்கொள்ள தயாராகவும் இருக்கேன்."

``கமல்ஹாசன் நடிச்சு உங்களுக்குப் பிடிச்ச படங்கள்?"

`` `ஹே ராம்', `நம்மவர்', `ராஜபார்வை', `மூன்றாம் பிறை', `அவ்வை சண்முகி', `தசாவதாரம்'னு நிறைய இருக்கு. குறிப்பா, 90-கள்ல வந்த கமல் சார் படங்கள் என் மனசுக்கு ரொம்ப நெருக்கம். `களத்தூர் கண்ணம்மா' படத்துல கமல் சார் செம க்யூட்ல!"

``ஹீரோ, வில்லன், குணச்சத்திர கதாபாத்திரங்கள்னு எல்லா கேரக்டர்கள்லயும் நடிக்கிறீங்க. இதனால உங்களுக்கான இமேஜ் பாதிக்கும்னு நினைச்சதுண்டா?"

ஷஷாங்க் அரோரா
ஷஷாங்க் அரோரா

``நான் ஹீரோ, வில்லன், கேரக்டர் ஆர்டிஸ்ட் இதுல நான் எதுவும் இல்லை. நான் நடிகன் அவ்வளவுதான். எனக்கு நடிக்கிறது ரொம்பப் பிடிக்கும். அதனால நான் எல்லாத்தையுமே முயற்சி பண்றேன். தவிர, பிஸினஸும் சில விஷயங்களை முடிவு பண்ணும். ஸ்டீரியோ டைப்பை உடைக்கணும்னு நினைக்கிறேன். லியனார்டோ டிகாப்ரியோ நிறைய படங்கள்ல சின்ன ரோல் பண்ணியிருப்பார். அது விஷயமல்ல. திரையில வர்ற கொஞ்ச நேரம் என்ன பண்றாங்கன்னுதான் பார்க்கணும். நம்ம நல்ல நடிகனா இருந்தால், திரையில ஒரு நிமிஷம் வந்தாலே அதுக்கு ரெஸ்பான்ஸ் இருக்கும். மக்களுக்கு உங்களைப் பிடிச்சிடுச்சுனா, ஒரு நிமிஷமா இருந்தாலும் 2 மணி நேரமா இருந்தாலும் கொண்டாடுவாங்க."

``சினிமா, வெப்சீரிஸ்னு ரொம்பவே பிஸியா இருக்கீங்க. இதை எப்படி மேனேஜ் பண்றீங்க?"

``நான் தெரு நாடகம், மேடை நாடகம், வீடியோ ஷோ, ஷார்ட் ஃபிலிம், சினிமா, ஆன்லைன் பிளாட்ஃபார்ம்னு எல்லாமே பண்ணியிருக்கேன். தளங்கள் மாறுதே தவிர என் வேலை ஒண்ணுதான், நடிக்கிறது மட்டும்தான். அதனால எனக்கு இது பெரிய சிரமமாகத் தெரியலை."

``சின்ன வயசுல நீங்க யாருடைய ரசிகன்?"

``மார்லன் பிராண்டோ, ஓம்புரி, ஃபிலிப் ஹாஃப்மேன், பஸ்டர் கீட்டன், கமல்ஹாசன் இவங்க எல்லோருக்கும்தான்."

``சல்மான் கான், நவாஸுதீன் சித்திக்கி மாதிரியான நடிகர்கள் கூட நடிச்ச அனுபவம்?"

ஷஷாங்க் அரோரா
ஷஷாங்க் அரோரா

`` `மன்டோ' படத்துல நவாஸுதீன் சித்திக்கி கூட நடிச்சேன். அவர் நடிப்பைப் பத்தி நான் சொல்லத் தேவையில்லை. அவர் தேர்ந்தெடுக்கிற படங்களே அவர் எப்படினு சொல்லும். அவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். ரொம்ப குறும்புத் தனமானவர். `Song of Scorpion' படத்துல இர்ஃபான் கான் கூட நடிச்சப்ப நடிப்புடைய வேற பரிணாமத்தைப் பார்த்தேன். சின்ன வயசிலேயே நவாஸ், இர்ஃபான் மாதிரியான நடிகர்கள் கூட சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைச்சதுக்கு நான் அதிர்ஷ்டசாலினுதான் சொல்லணும். `பாரத்' படத்துல சல்மான் பாய் கூட நடிச்சேன். நடிக்கிற வரை சல்மான் பாய் படம்னு பெரிய பிம்பம் இருந்தது. அவர் என்னை கூல் பண்ணி அவரும் நம்ம கூட நடிக்கிற நடிகர்னு உணர வெச்சார். இதுல எனக்கு நாலு சீன்தான். ஆனா, ஏழு கேமரா வெச்சு எடுக்கும்போது, அதுக்குத் தகுந்த மாதிரி எப்படி நடிக்கிறதுனு டெக்னிக்கலா நிறைய கத்துக்கிட்டேன்."

``கோலிவுட்ல எந்த இயக்குநர்கள் கூட வொர்க் பண்ண ஆசை?"

``மணிரத்னம், ஷங்கர், பாலா, வெற்றிமாறன் இவங்க எல்லார்கூடவும் வொர்க் பண்ண ஆசை. பாலா, வெற்றிமாறன் இவங்களுடைய வொர்க் பத்தி எனக்கு அவ்வளவு தெரியாது. ஆனா, பாலிவுட்ல இவங்களைப் பத்தி நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்."

"மக்கள் நலனைவிட கொள்கை முக்கியமில்லை!" - கமல் சிறப்புப் பேட்டி

``அடுத்து என்ன பிளான்?"

``ரெண்டு படங்கள் நடிச்சுட்டு இருக்கேன். என் ரெண்டாவது பாடலுக்கான கம்போஸிங் போயிட்டிருக்கு. தவிர, அடுத்த வருடம் ஒரு படம் இயக்கப்போறேன். அதுக்கான ஸ்கிரிப்ட் வேலைகளும் நடக்குது."

ஷஷாங்கின் விரிவான முழு பேட்டி நாளை வெளியாகும் ஆனந்த விகடன் இதழில் இடம்பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு