Published:Updated:

தீபிகா படுகோன் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா... பாலிவுட் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி ஏற்பாடு?!

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அவரது பெற்றோர் மற்றும் சகோதரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பாலிவுட்டில் உள்ள ஒவ்வொருவரையும் கொரோனா பாதித்து வருகிறது. ஆரம்பத்திலேயே நடிகர் அமிதாப்பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பாலிவுட் முக்கிய பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் தொற்று ஏற்பட்டது. இப்போது பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

குடும்பத்துடன் தீபிகா
குடும்பத்துடன் தீபிகா

முன்னதாக தீபிகாவின் தந்தை பிரகாஷ் படுகோன், தாயார் உஜ்ஜாலா, சகோதரி அனிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் தீபிகாவின் தந்தை பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது உடல்நிலை நலமாக இருப்பதாகவும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தீபிகா குடும்பத்திற்கு நெருக்கமான விமல் குமார் என்பவர் தெரிவித்தார்.

கடந்த 10 நாள்களுக்கு முன்பு தீபிகாவின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. உடனே மூவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் மூன்று பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மூன்று பேரும் ஒரு வாரம் வீட்டில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டனர். ஆனால் இதில் பிரகாஷ் படுகோனுக்குக் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மற்ற இருவரும் வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்துக்கொண்டனர். பிரகாஷ் படுகோன் இந்தியாவின் முதல் பேட்மிட்டன் சேம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

ரன்வீர் சிங், தீபிகா படுகோன்
ரன்வீர் சிங், தீபிகா படுகோன்

கடந்த மாதம்தான் தீபிகாவும் அவரது கணவர் ரன்வீர் சிங்கும் பெங்களூருக்கு வந்தனர். தற்போது, தன் குடும்பத்தினரைத் தொடர்ந்து தீபிகாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மற்றொரு பாலிவுட் பழம்பெரும் நடிகர் ரன்தீர் கபூரு கொரோனா காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே பாலிவுட் சினிமா தொழிலாளர்கள் 30 ஆயிரம் பேருக்கு யஷ்ராஜ் ஸ்டூடியோ கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்துள்ளது. இதற்கு தேவையான 60 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான செலவை தாங்களே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரைக்கு