முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் இது வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. இரண்டு பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு திருமணம் மற்றும் காதல் குறித்துப் பேசியிருந்தார். இந்நிலையில், நிதி மோசடியில் சிக்கி லண்டனில் வசித்து வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியை சுஷ்மிதா சென் காதலித்து வருகிறார்.

இது தொடர்பான செய்திகள் நேற்று இரவில் இருந்து சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகி இருக்கிறது. லலித் மோடிதான் ட்விட்டரில் இதனைப் பகிர்ந்துள்ளார்.
அதில், "இப்போதுதான் மாலத்தீவு உட்பட உலக நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் வந்திருக்கிறேன். என்னில் பாதியான (#betterhalf @sushmitasen47) சுஷ்மிதா சென் பற்றி இங்குக் குறிப்பிடவில்லை. சுஷ்மிதா சென் உடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறேன். நிலவில் இருப்பது போல் உணர்கிறேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்விட்டர் செய்தியால் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனரா எனக் கேள்வி எழுப்பியதால் அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக அடுத்த ட்விட்டர் பதிவில், "நாங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு நாள் அதுவும் நடக்கும். இப்போது இருவரும் டேட்டிங்கில்தான் இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

சுஷ்மிதா சென் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மாடல் ரோஹ்மன் என்பவரை பிரிவதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். நண்பர்களாக தொடங்கி நண்பர்களாகவே இருக்கப்போவதாகவும், தங்களுக்குள் காதல் உறவு இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த பிரிவுக்கு பிறகு ஒடிடி தளத்தில் வெப் சீரியஸில் நடித்தது மற்றும் குடும்பத்தில் கவனம் செலுத்தி வந்த சுஷ்மிதா புதிய உறவுக்கு இடம் கொடுக்கமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென லலித் மோடி சுஷ்மிதா சென் உடன் காதல் உறவில் இருப்பது குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.
லலித் மோடி கடந்த 2010ம் ஆண்டிலிருந்து லண்டனில் வசித்து வருகிறார். இந்திய ஐபிஎல் போட்டி உருவாக்கப்பட்டதில் லலித் மோடி முக்கிய பங்கு வகித்தார்.