சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

அடுத்த வாரிசு அப்டேட்ஸ்!

சுஹானா கான்
பிரீமியம் ஸ்டோரி
News
சுஹானா கான்

அமீர் கானின் மகள். முதல் மனைவி ரீனாவுக்குப் பிறந்த 24 வயது கடைக்குட்டி. ஓவர் செல்லம் என்பதால் அடிக்கடி ஏதாவது ஏடாகூடமாகச் செய்து மீடியாவில் அடிபடுகிறார்.

ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதை மருந்து வழக்கில் சிக்கி ஒட்டுமொத்த பாலிவுட்டையே அதிர்ச்சியடைய வைத்திருக்கும் இந்த வேளையில், மற்ற பாலிவுட் பிரபலங்கள் இப்போது தங்கள் செல்லங்களைப் பாதுகாப்பு வளையத்துக்குள் வைத்துக் கண்ணை இமை காப்பதுபோலப் பார்த்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். யார் அந்த GenZ செல்லங்கள் எனப் பார்க்கலாமா?

சுஹானா கான்

பாலிவுட் பாட்ஷா ஷாருக் கானின் மகள். நம்பர் 1 இன்டர்நெட் சென்சேஷன். மூத்த மகன் ஆர்யன் கானுக்கு அடுத்து பிறந்த செல்ல மகள். 21 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் சுட்டிப்பெண். இன்ஸ்டாவில் 3 மில்லியன் ஃபாலோயர்கள். இவர் போடும் போஸ்ட்களில் குத்த வைத்து உட்கார்ந்திருக்கின்றனர் டீனேஜ் ராக்கெட்டுகள். அண்ணன் ஆர்யனைப்போல நியூயார்க்கில் சினிமாக் கல்லூரிப் படிப்பை முடிக்கப்போகிறார். சின்னவயதில் அம்மா கௌரிபோல இன்டீரியர் டிசைனர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்த பெண் பிறகு நடிப்புப் பக்கம் திரும்பியதற்குக் காரணம் சோஷியல் மீடியாதான். இவர் போட்டோக்களைப் பார்த்து நடிக்க வரலாமே எனப் பலர் சொல்ல, ஆக்டிங் கோர்ஸில் சேர்ந்துவிட்டார் சுஹானா!

அடுத்த வாரிசு அப்டேட்ஸ்!

கடந்த ஆண்டு உலகப்புகழ்பெற்ற `வோக்' இதழின் அட்டைப்படத்தில் இடம்பிடித்த கெத்தோடு கேமரா பக்கம் திரும்பிவிட்டார். இப்போது அண்ணனின் சிறைவாசத்தால் நியூயார்க்கில் இருக்கும் தங்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார். தன் கல்லூரித் தோழன் எடுத்த `தி கிரே பார்ட் ஆப் புளூ' குறும்படத்தில் நடித்த அனுபவத்தோடு பாலிவுட்டில் களமிறங்கக் காத்திருந்தவருக்கு அண்ணனின் கைது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சோஷியல் மீடியா பக்கம் தலைகாட்டாமல் இருக்கும் அவரைத் தேற்றத்தான் அம்மா கௌரி அதிகம் சிரமப்படுவதாக ஷாருக் மீடியாவிடம் சொல்லியிருந்தார். நியூயார்க்கில் இருந்து பறந்து மும்பை வர இருந்தவரை ஷாருக் தடுத்திருக்கிறார். `உன் அண்ணனை ஜெயிலில்போய்ப் பார்த்தால் அழுதுவிடுவாய். மீடியாக்களுக்குத் தீனியாகிவிடும்!' என்று சொல்லிவிட்டார். விருப்பமில்லாமல் சோகத்தோடு நியூயார்க் வீட்டில் இருக்கிறார். குடும்பத்தினருக்கான பாதுகாவலர்களை அதிகரித்துவிட்டு, அங்கிருக்கும் உறவினர்களை மகளோடு இருக்கும்படி பணித்துவிட்டு ஷாருக் மகளோடு விர்ச்சுவலி கனெக்ட்டடாக இருப்பதன்மூலம் அண்ணன்மீது சுஹானா எந்த அளவுக்குப் பாசம் வைத்திருக்கிறார் என்பது புரிகிறது.

அடுத்த வாரிசு அப்டேட்ஸ்!

ஐரா கான்

அமீர் கானின் மகள். முதல் மனைவி ரீனாவுக்குப் பிறந்த 24 வயது கடைக்குட்டி. ஓவர் செல்லம் என்பதால் அடிக்கடி ஏதாவது ஏடாகூடமாகச் செய்து மீடியாவில் அடிபடுகிறார். கடந்த ஆண்டு, உலக மனநல ஆரோக்கிய தினத்தில் தான் மன அழுத்தத்துக்கான சிகிச்சையில் இருப்பதாக ஓப்பனாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தன் ஃபிட்னெஸ் மாஸ்டரான நுபுர் சிகாரேவோடு டேட்டிங் போனவர் அந்தப் படங்களை, `என் பாய் ஃப்ரெண்ட்!' என ஓப்பனாக இன்ஸ்டாவில் பதிவேற்ற, கமெண்ட் செய்து தள்ளினார்கள் அவரின் வெறித்தனமான ஃபாலோயர்ஸ். `நானும் நுபுரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம். இதை உலகுக்கு மறைக்க விரும்பவில்லை. தேவைப்பட்டால் திருமணம் செய்துகொள்வோம்!' என்று சொல்லியிருக்கிறார் ஐரா.

அடுத்த வாரிசு அப்டேட்ஸ்!

அஹான் ஷெட்டி

சுனில் ஷெட்டியின் மகன். ஏற்கெனவே சகோதரி ஆதியா ஷெட்டி பாலிவுட்டில் நடிக்க வந்துவிட்டார். தற்போது அமெரிக்காவில் நடிப்புப் பயிற்சியில் இருக்கும் அஹான் விரைவில் நடிக்க வருகிறார். ஆறரை அடி உயரத்தில் ஆஜானுபாகுவான உடற்கட்டோடு இருக்கும் அஹானுக்கு சின்ன வயதிலிருந்து நடிப்புமீது காதலாம். அதிலும் சல்மான் கான் போல ஸ்டாராக வேண்டும் என்ற ஆசையாம். தொழிலதிபர் ஜெய்தேவ் ஷெராப்பின் மகள் தானியாவைக் காதலிக்கிறார். இருவரும் உலகம் சுற்றும் காதலர்களாக இன்ஸ்டாவில் போட்டோக்களை நிரப்புகிறார்கள். ஷாஹித் நதியத்வாலாவின் படத்தில் அறிமுகமாகப்போகும் அஹானுக்கு ஒரே வீக்னெஸ், அடிக்கடி பார்ட்டி பண்ணுவது.

அடுத்த வாரிசு அப்டேட்ஸ்!

இப்ராஹிம் அலி கான்

சயீப் அலி கானின் 20 வயது மகன். ஃபேஷன் உலகில் ஏற்கெனவே பாப்புலர். சயீப் போல ஜாலி டைப் கிடையாது. கொஞ்சம் கூச்ச சுபாவி. தாத்தா முன்னாள் கிரிக்கெட்டர் மன்சூர் அலிகான் பட்டோடி போல கிரிக்கெட்டில் ஆர்வமாக இருந்தவர் என்ன நினைத்தாரோ, ஃபேஷன் உலகில் புகுந்துவிட்டார். இப்ராஹிமுக்கு பார்ட்டி பண்ணுவது ரொம்பவே பிடிக்கும். ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மற்றும் அக்‌ஷய் குமார் மகன் ஆரவ்வின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர் என்பதால் இவர்மீது மீடியா ஒரு கண் வைத்திருக்கிறது. அடிக்கடி மும்பையின் ஸ்டார் ஓட்டல்களின் பார்களில் இவர்களைப் பார்க்க முடியும்.

அடுத்த வாரிசு அப்டேட்ஸ்!

ஆலியா காஷ்யப்

இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் ஒரே மகள். அப்பா அனுராக்கும் அம்மா ஆர்த்தியும் பிரிந்து வாழ்ந்தாலும் ஆலியாவுக்காக நண்பர்களாக இருக்கிறார்கள். இன்ஸ்டாவில் இவர் போடும் போட்டோக்களுக்காக பெருங்கூட்டம் இவரை ஃபாலோ செய்கிறது. தன் கல்லூரி நண்பனான ஷேன் கிரிகோரியைக் காதலிப்பதாக ஸ்டேட்டஸ் தட்டி இணையத்தைக் கிடுகிடுக்க வைத்தார்.

வெளிநாட்டில் ஃபேஷன் டிசைனிங் படித்து முடித்த கையோடு மும்பையில் அம்மாவோடு இருக்கிறார். அடிக்கடி ஷேனுடன் பார்ட்டி கொண்டாடும் டேட்டிங் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்திவருகிறார். அதில் தன் தந்தையிடமே எடக்கு மடக்காகக் கேள்விகள் கேட்டு டிரெண்ட் அடிக்கிறார். ‘சற்றே வளர்ந்த டெடி பியர் என் தந்தை!' என்று சொல்லும் ஆலியாவுக்குக் கோபம் வந்தால் கண்ட்ரோல் செய்ய முடியாது என அனுராக்கே எச்சரிக்கை செய்கிறார்.

அடுத்த வாரிசு அப்டேட்ஸ்!

ஆரவ் பாட்டியா

அக்‌ஷய் குமார் - ட்விங்கிள் கன்னாவின் செல்ல மகன். ஆரவ்வுக்கு சமையல் கலைஞராக... மாஸ்டர் செஃப்பாகத்தான் ஆசையாம். 19 வயதாகும் ஆரவ் சில மாதங்களுக்கு முன்புவரை அதிகம் தென்படாமல் இருந்தார். அந்த நீலக் கலர் கண்களுக்காக இளம் ரசிகைகள் அதிகம் இருப்பதால் அக்‌ஷய் தன் மகனை பூனைப்படை வைத்துப் பாதுகாத்து வைத்திருக்கிறார். சிங்கப்பூரில் கல்லூரிப்படிப்பை முடித்த ஆரவ் தற்போது லண்டனில் மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார், ஓட்டல் பிசினஸில்.

அடுத்த வாரிசு அப்டேட்ஸ்!

நவ்யா நவேலி நந்தா

அமிதாப் பச்சன் - ஜெயா பாதுரி தம்பதியின் மகள் ஸ்வேதா வயிற்றுப் பேத்தி. அதாவது அபிஷேக்கின் அக்கா மகள். ஃபேஷன், டிஜிட்டல் புரொமோஷன் படிப்பு என அமெரிக்க ரிட்டர்ன் ஆன கையோடு பாலிவுட் என்ட்ரி கொடுப்பார் எனக் காத்திருக்கக் காரணம் இவரின் போட்டோ ஷூட்கள்தான். கூடவே மற்றொரு காரணம் அமெரிக்கக் கலாசாரத்தோடு பார்ட்டிகளில் நவ்யாவை அடிக்கடி பார்க்க முடிந்தது. அதுவும் நடிகர் ஜாவித் ஜாஃப்ரியின் மகன் மீஜான் ஜாஃப்ரியோடு டேட்டிங் எனக் கிசுகிசுக்கப்பட்டதால் விரைவில் நடிக்க வரப்போகிறார் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், பெண்களுக்கான இமேஜ் மேக்கிங் பற்றிய பிசினஸில் குதித்திருக்கிறார். காதலில் நம்பிக்கை இல்லையாம். அதனால் இப்போதைக்கு பிசினஸ் பிசினஸ் மட்டும்தானாம்!