Published:Updated:

சன்னி லியோன், ஜெனிலியா, சல்மான் கான்... ஏழைகள், முதியோருக்கு உதவும் பாலிவுட் நட்சத்திரங்கள்!

சன்னி லியோன் சாப்பாடு வழங்குகிறார்
சன்னி லியோன் சாப்பாடு வழங்குகிறார்

கொரோனா கட்டுப்பாடுகள் காலத்தில் வேலைக்குச் செல்ல முடியாமல் கஷ்டப்படும் ஏழைகள் மற்றும் முதியோருக்கு நடிகை சன்னி லியோன் உட்பட பாலிவுட் பிரபலங்கள் தினமும் சாப்பாடு வழங்கி வருகின்றனர்.

மும்பையில் கொரோனா கட்டுப்பாடுகளால் ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் இருக்கின்றனர். அதுவும் தனியாக இருக்கும் முதியவர்கள், தெருக்களில் வசிப்பவர்கள் சாப்பாடு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் தினமும் உணவு சப்ளை செய்து வருகின்றனர்.

மும்பையின் பாந்த்ராவில் இருக்கும் 'எர்த் கேபே' என்ற உணவ உரிமையாளர் ஆரம்பத்தில் தானே முன்வந்து சொந்த பணத்தை செலவு செய்து அப்பகுதியில் கஷ்டப்படும் மக்களுக்கு உணவு பாக்கெட்களை வழங்கி வந்தார். இதற்கு ஹோட்டல் உரிமையாளரின் நண்பர்கள் சிலரும் நிதியுதவி செய்து வந்தனர். தெருக்களில் வசிப்பவர்கள், பிச்சைக்காரர்கள், வேலை செய்ய முடியாதவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உணவு சப்ளை செய்தனர். இது தொடர்பாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது. உடனே அவர்களின் முயற்சிக்கு பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவியை செய்ய ஆரம்பித்தனர். பொதுமக்கள் நேரடியாக வந்து பணம் மற்றும் உணவுப்பொருள்களைக் கொடுத்துச் சென்றனர்.

ராஜ் குந்த்ரா, ஜெனிலியா
ராஜ் குந்த்ரா, ஜெனிலியா

இதன் மூலம் தினமும் 2 ஆயிரம் உணவு பாக்கெட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து 'எர்த் கெபே' ஓட்டல் உரிமையாளர் விக் கேத்வானி கூறுகையில், "ஆரம்பத்தில் எங்களது சொந்த பணத்தில்தான் சாப்பாடு சப்ளை செய்து வந்தோம். இப்போது பாலிவுட் தொண்டு நிறுவனமும் எங்களது இந்தச் சேவையில் இணைந்துள்ளது. பாந்த்ரா, குர்லா, தாராவி பகுதியில் தினமும் 2 ஆயிரம் பாக்கெட்களை சப்ளை செய்கிறோம். நடிகை சன்னி லியோனும் அவரது கணவரும் எங்களது உணவு சமைக்கும் இடத்திற்கு வந்து பார்வையிட்டு தேவையான உதவிகளைச் செய்தனர். அவர்களது கையால் உணவு பாக்கெட் சப்ளை செய்யப்பட்டது.

இது தவிர காஜல் அகர்வால், ஜெனிலியா தேஷ்முக், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உட்பட பல பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை செய்து வருகின்றனர்" என்றார்.

சன்னி லியோன்
சன்னி லியோன்

இது குறித்து சன்னி லியோன் கூறுகையில், "கடினமான காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்திற்கு எப்படி சாப்பாடு என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை அன்புடன் செய்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

பாலிவுட் நடிகை ஜெனிலியா இது குறித்து கூறுகையில், "இந்தியா நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நம்மால் முடிந்த உதவியை செய்வது நமது கடமை. வரும் வாரங்களில் ஒரு லட்சம் உணவு பாக்கெட்களை கஷ்டப்படும் மக்களுக்கு சப்ளை செய்ய இருக்கிறோம்" என்றார்.

அடுத்த ஆண்டுக்குள் வீடுகள் இல்லாத 10 லட்சம் பேருக்கு சாப்பாடு கொடுக்கத் திட்டமிட்டிருப்பதாக நடிகை நேகா தெரிவித்தார். நடிகர் சல்மான் கான் திரைப்பட தயாரிப்புப் பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குத் தேவையான நிதியுதவி செய்துள்ளார்.
அடுத்த கட்டுரைக்கு